தொடர்கள்
கவர் ஸ்டோரி
பெண்களுக்கு வாரி வழங்கிய மேயர் பதவிகள்... -திமுக-வில் குமுறல்

20220021213834534.jpeg

தமிழகத்தில் இருபத்தோரு மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவர்களின் பதவிக் காலம் 2016ல் முடிவடைந்தது. நீதிமன்றத்தில் வழக்கு காரணமாக தேர்தல் நடக்காமல் இருந்தது. தற்போது உச்சநீதிமன்றம் தேர்தலை நடத்தியே ஆகவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. எனவே தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான வேலைகளை முழுமூச்சுடன் முடிக்கி விட்டிருக்கிறது.

சில தினங்களுக்கு முன் அரசு வெளியிட்ட அரசாணைப்படி, தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் பதினோரு மாநகராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது 50 சதவீதத்துக்கும் அதிகம். இதில் சென்னை, தாம்பரம் ஆகிய இரண்டுமே பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. கடைசியாக ...1969-இல் வை.பாலசுந்தரம் தலித் மேயராக இருந்தார்.

அரசின் இந்த உத்தரவு, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டுக்குமே அதிர்ச்சிதான். சென்னை மேயருக்கான கனவில், ஆளும் திமுக-வில் நிறையபேர் இருந்தார்கள். ஆனால் நடந்தது வேறு. சென்னை மாநகராட்சி, அதிமுக்கியமான அரசியல் களம் என்பதும்கூட. திமுக முதலில் தேர்தலில் போட்டியிட முடிவு செய்து வெற்றி பெற்றது சென்னை மாநகராட்சியில் தான். அதன் பிறகு நடந்த சட்டமன்ற தேர்தலில், திமுக உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்கள்.

ஸ்டாலின் கூட மேயராக சென்னை மாநகராட்சியில் இருந்தவர்தான். பதினோரு மாநகராட்சி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு, அதிலும் சென்னை மாநகராட்சி மற்றும் புதியதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சி இரண்டும் தலித் பெண்களுக்கு ஒதுக்கீடு என்பது 2011 சென்சஸ் கணக்கெடுப்பின்படி என்று அரசு விளக்கம் சொல்லியிருக்கிறது.

உச்சநீதிமன்றத்தில் உள்ளாட்சித் தேர்தல் சம்பந்தமான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 5 மாநில தேர்தல் தள்ளி வைக்கப் படாத போது உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க வாய்ப்பில்லை என்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டியது. அதை தொடர்ந்து... சுதாரித்துக்கொண்ட தமிழக அரசு, உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் வேலையில் இறங்கியது. இன்னும் இரண்டு தினங்களில் உள்ளாட்சித் தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னோட்டமாக தமிழக தேர்தல் ஆணையர், அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டினார். அதில் எல்லோரும், ஒருமுகமாக ஒரே நாளில் தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அப்போதே தேர்தல் ஆணையர், விரைவில் தேர்தல் தேதி அறிவிப்பு வரும் என்று சூசகமாக குறிப்பிட்டார்.

தாம்பரம் மேயர் பதவிக்கு, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜாவின் சகோதரர் காமராஜர், ஜெகத்ரட்சகன் தனது மைத்துனர் காமராஜரை, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் ஈ. கருணாநிதி தனது சகோதரர் ஜோசப் அண்ணாதுரை, மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சர் தாமு அன்பரசன் தனது மகன் தமிழ்மாறன் என்று கனவு கண்டு கொண்டிருந்தார்கள். இப்போது சென்னை, தாம்பரம் இரண்டும் தலித் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது கனவுகளுடன் இருந்த மேயர் வேட்பாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியானது. இதுபற்றி நேருவிடம் சிலர் போய் ஆவேசமாக சண்டைபோட... அவர் தயவு செய்து, தளபதியிடம் போய் என்னை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க சொல்லுங்கள், நானும் கொஞ்சம் நிம்மதியாக இருப்பேன். உள்ளாட்சித் தேர்தல் பிரச்சனை வந்தது முதல் எனது நிம்மதியை தொலைத்து விட்டேன். யாரையும் என்னால் திருப்திப்படுத்த முடியவில்லை. நகராட்சி உறுப்பினர்கள் கூட என் வார்டை மாற்றிக் கொடுங்கள் என்று என்னிடம் கோரிக்கை வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், என்னுடைய மாநகராட்சியை நான் தக்கவைத்துக் கொள்ளவே பெரும் பாடு பட்டேன். காரணம்... நகராட்சி நிர்வாக ஆணையர் பொன்னையா, என் பேச்சை கேட்பதில்லை. நானே நேரில் போய் கூட மன்றாடி இருக்கிறேன். எனக்கு சாதகமாக என் கோரிக்கை எதையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை, எல்லாம் சட்டப்படிதான் நடக்கும். நாம் இஷ்டப்படி மாற்றமுடியாது. யாராவது நீதிமன்றம் போனால் யார் பதில் சொல்வது. அதுவும் இப்போதெல்லாம் நீதிபதிகளுக்கு, ஐஏஎஸ் அதிகாரிகள் என்றாலே வேப்பங்காய் ஆகிவிட்டது. சம்பளத்தை நிறுத்து, எதற்கு சம்பளம் என்றெல்லாம் எத்தனை வழக்கில் கேட்கிறார்கள் என்பதையெல்லாம் நீங்கள் பார்க்கவில்லையா என்று திருப்பி கேட்டிருக்கிறார் ஆணையர். நேருவால் எதுவும் பதில் சொல்ல முடியாமல் திரும்பிவிட்டார்.

அதே சமயம்... இது எல்லாமே முதல்வர் யோசனை என்று ஒரு தகவல் பரவலாகிக் கொண்டிருக்கிறது. தலித் பெயர் என்றால் கட்சிக்குள் பெரிய அளவு போட்டி இருக்காது, நாமும் நிம்மதியாக இருக்கலாம் என்று கணக்குப் போட்டிருக்கிறார். ஆனால், இந்த விவரம் எல்லாம் அமைச்சர் வேலுவுக்கு தெரிந்திருக்கிறது. சம்பந்தப்பட்ட அமைச்சர் நேருவுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை. சென்னை மாநகராட்சியை பொருத்தவரை, இப்போதைக்கு முதல்வரிடம் செல்வாக்குள்ள மாவட்ட செயலாளர் சென்னையில் சேகர்பாபு தான். அவருக்கும் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமனுக்கும் ஏழாம் பொருத்தம். இதேபோல் மயிலாப்பூர் தொகுதியில் சேகர்பாபு நடத்திய ஒரு நிகழ்ச்சிக்கு, மயிலை வேலுவுக்கு அழைப்பே இல்லை. இப்படி சேகர் பாபு மீது சென்னை திமுக நிர்வாகிகள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். சென்னை மாநகராட்சிக்கு தலித் பெண்மணி மேயர் என்பதில் சிலருக்கு கொஞ்சம் சந்தோஷம், சிலருக்கு கொஞ்சம் வருத்தம் என்று இருக்கிறார்கள்.

சென்னை மாநகராட்சி துணை மேயர் பதவி, சேகர்பாபுவுக்கு வேண்டிய இளைய அருணா, இவர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர். இவர் பெயரை கடுமையாக சிபாரிசு செய்ய இருக்கிறார் சேகர்பாபு. இதுதவிர சைதை மகேஷ், துணைமேயர் பதவிக்கு லாபி பண்ண தொடங்கியிருக்கிறார். இப்போதைக்கு சேகர்பாபு சிபாரிசுக்கு வாய்ப்பு அதிகம்.

மேயர் பதவியை விடுதலை சிறுத்தைகள் கேட்டதாகவும், அதை திமுக தலைவர் ஸ்டாலின் மறுத்ததாகவும் ஒரு தகவல். இப்போதைக்கு அந்தப் பதவிக்கு சத்தியவாணி முத்துவின் மகள் பெயர் அடிபடுகிறது.

அதே சமயம்... பதினோரு மாநகராட்சிப் பெண்களுக்கு ஒதுக்கீடு என்பது ஒரு வெற்றிகரமான திட்டமிட்ட செயல் என்று சொல்ல முடியாது.

சென்னை மாநகராட்சியை பொருத்தவரை 22 சட்டமன்ற உறுப்பினர்கள், மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கியது. இவர்கள் எல்லோருடைய கோரிக்கையும் சமாளிக்க வேண்டும். சென்னை மாநகராட்சி மேயர் பதவி என்பது சவால் நிறைந்தது, சமாளிப்பது, திருப்திப்படுத்துவது என்பதெல்லாம் அவ்வளவு எளிதாக இருக்காது. அப்படிப்பட்ட பதவியை பெண் தலித் உறுப்பினருக்கு வழங்கியதை, சென்னை திமுகவின் பெரும்பான்மை நிர்வாகிகள் அவ்வளவாக ரசிக்கவில்லை. மாநகராட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதும், சம்பந்தப்பட்ட வார்டுகளில் திமுக கவுன்சிலர்களின் செயல்பாடுதான் எடுபடும். வார்டுகளில் சட்டமன்ற உறுப்பினர்களின் சிபாரிசு பெரும்பாலும் கண்டுகொள்ளப்படாமல் போய்விடும். இப்படி சென்னை மாநகராட்சி தலித் பெண்மணி தேர்வு என்பதில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் யோசிக்காமல், அரசாங்கம் ஆணை பிறப்பித்து விட்டதா என்று சந்தேகப்படுகிறார்கள் திமுக பிரமுகர்கள். ஆனால், இதையெல்லாம் சொல்லும் துணிச்சல், அதுவும் குறிப்பாக நேரடியாக உதயநிதி ஸ்டாலின் அல்லது முக ஸ்டாலின் இருவரிடம் சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை என்பதும் உண்மை.

மற்ற மாநகராட்சிகள் பொருத்தவரை இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியது. அங்கும் இதே போன்ற பிரச்சனைகளை சம்பந்தப்பட்ட மேயர் சந்திக்க நேரிடும்.

20220021213904196.jpeg

முதலில் மேயர் பதவிக்கு நேரடித் தேர்தல் நடத்தவே முதல்வர் ஸ்டாலின் விருப்பப்பட்டார். ஆனால், அமைச்சர்கள் அனைவரும் நேரடி தேர்தலை கடுமையாக எதிர்த்தார்கள். அது பெரிய ரிஸ்கான விஷயம், கவுன்சிலர்களை வைத்து மேயரை தேர்ந்தெடுப்பதே சரியான தீர்வு என்று ஒரு மாதிரி குழப்பி, முதல்வரை சம்மதிக்க வைத்துவிட்டார்கள். இதற்குக் காரணம்... மாநகராட்சி அப்போதுதான் மாவட்ட அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்ற ஒரு கணக்குதான்.

அதே சமயம் மூத்த அமைச்சர்கள் யாராவது ஏதாவது காரணம் சொல்லி இந்த தேர்தலை தள்ளி வைக்க மாட்டார்களா என்று ஆசைப்படுகிறார்கள். அவர்களை பொருத்தவரை தேர்தலுக்கான சூழல் இதுவல்ல என்பது.

பாரதிய ஜனதா, சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும், முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், கரு நாகராஜன், கராத்தே தியாகராஜன் அடங்கிய மூவர் குழு, நேர்காணல் நடத்தி பட்டியலையே தயார் நிலையில் வைத்திருக்கிறது. சென்னை மாநகராட்சியின் தேர்தல் பொறுப்பாளராக பாரதிய ஜனதா, கராத்தே தியாகராஜனை நியமித்திருக்கிறது. காரணம்... தேர்தல் தகிடுதத்தங்கள் எல்லாம் அவருக்கு அத்துப்படி என்பதுதான்.

20220021213927853.jpeg

இப்படிப்பட்ட சூழலில்... திமுக ஆசைப்பட்டது போல், தேர்தலுக்கு தடை கேட்டு முன்னாள் சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் டாக்டர் நக்கீரன் என்பவர் 19ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே மக்கள் பாதுகாப்பு கருதி, தேர்தலை சில மாதங்கள் தள்ளி வைக்க வேண்டும் என்று அவர் அந்த மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார். இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கையையும் வைத்தார். அதன்படி வழக்கு விசாரணை 21ம் தேதிக்கு தள்ளிவைத்தது, இருபத்தொன்றாம் தேதி இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மாநில தலைமை தேர்தல் ஆணைய வழக்கறிஞரிடம் ஜனவரி 27ஆம் தேதிக்கு முன்பு உச்சநீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதே என்று கேட்க…

அப்போது தமிழக தேர்தல் ஆணையர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது கடைப்பிடிக்கப்பட்ட விதிமுறைகளை, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கடைபிடிக்கப்படும். கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றியே தேர்தல் நடத்தப்படும் என்று கூறினார். அப்போது மனுதாரர் நக்கீரன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாநிலத்தில் உள்ள கொரோனா நிலவரத்தின் அடிப்படையில் தேர்தல் தொடர்பான வழக்குகளை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கலாம் என்று 2021ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது என்று குறிப்பிட்டார்.

அதன் பிறகு உயர் நீதிமன்றம், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மேலும் ஏதோனும் வழக்குகள் வந்தால் அவற்றையும் சேர்த்து 24ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று வழக்கை ஒத்திவைத்தது.

எனவே இப்போதைக்கு தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் தேதி பற்றிய அறிவிப்பை வெளியிடுவது சந்தேகம்தான். திங்கட்கிழமை வழக்கு விசாரணையை பொறுத்துதான், இப்போதைக்கு உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா என்பது சஸ்பென்ஸ் தான்.