தொடர்கள்
தொடர்கள்
மிடில் பெஞ்ச் - 10 - இந்துமதி

20220020140113764.jpg

முழு கிராமமும் அல்லாத டவுனாகவும் இல்லாத ஊரில் இருந்து நகரத்திற்கு படிக்க போன போது நான் பல சவால்களை சந்திக்க நேர்ந்தது. எங்கள் பள்ளியிலும் கூட தமிழில் பேசினால் அபராதம் விதிப்பார்கள், ஆங்கிலத்தில் தான் பேசியே ஆக வேண்டும் என்பது போன்ற கட்டாயங்கள் எல்லாம் இருந்தது என்ற போதும் அங்கு பேசும் போது நம்மை ஒத்தவர்கள் தான் அருகில் இருப்பார்கள் என்பதால் தேவை இல்லாத பதட்டம் இருக்காது. கல்லூரியில் பெரும்பாலும் சென்னை மற்றும் கேரளத்தில் இருந்து வருபவர்கள் நிறைய பேர் இருந்தார்கள். அதிலும் வழி வழியாக கிறித்துவ பாரம்பரியத்தை கொண்ட பல பேர் அங்கு படித்ததால், அங்கு ஆங்கிலம் மிக சரளமாக பேசப்பட்டது. அவர்கள் ஜெபம் செய்யும் போது, தங்கள் தாய் மொழியிலும், ஆங்கிலத்திலும் எந்த விதமான திணறலும் இல்லாமல் மிக சரளமாக ஜெபித்தார்கள். சந்தேகம் கேட்பது, அத்தியாவசியமான விஷயங்களுக்காக பேசுவதற்கெல்லாம் நான் தயங்கியது இல்லை. ஆனால் ஒரு ஆனந்தமான அரட்டையை என்னால் என் தாய் மொழியில் மட்டுமே நிகழ்த்த முடியும் என்பதே உண்மை.

பள்ளி வரை தமிழ் வழி கல்வி பயின்று, கல்லூரியில் இருந்து ஆங்கிலத்திற்கு மாறிய பல தோழி, தோழர்களை எனக்கு தெரியும். அவர்கள் தாழ்வு மனப்பான்மையால் திண்டாடுவதை நான் பார்த்திருக்கிறேன். வருத்தமான விஷயம் என்னவெனில் அவர்களுக்கு அறிவாற்றல் அதிகமாக உண்டு, புரிந்து கொள்ளும் திறமையும் அதிகமாக இருக்கும். ஆனால், தனக்கு தெரிந்ததை வெளிப்படுத்த கூடிய மொழி தான் ஒரு தடையாகவே இருக்கும். இன்று பெரு நகரங்களில் வேலை பார்போரில் 70 விழுக்காடு நன்றாக வேலை செய்ய கூடியவர்கள். ஆனால், அவர்களுக்கு ஆங்கிலம் சரளமாக பேச வராது என்பதாலேயே பின்தங்கி இருக்கிறார்கள். துறை சார்ந்த அறிவென்பது ஒரு சிறு துளி கூட இல்லாவிட்டாலும், சரளமாக ஆங்கிலம் பேச தெரிந்த ஒரே காரணத்திற்காகவே பெரிய பதவிகளில் எத்தனையோ பேர் இருந்துதான் வருகிறார்கள். என் பள்ளி நாட்களில் கடைசி பெஞ்சில் அமர்ந்திருக்கும் ஒரு சுட்டி மாணவன், எதாவது சேட்டை செய்து கொண்டே இருப்பான். ஆனால் வகுப்பாசிரியர் கேள்வி கேட்டால் புத்திசாலித்தனமாக ஏதாவது பேசி தப்பித்து கொள்வான். அவன் இன்று ஆஸ்திரேலியாவில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மேலாளராக இருக்கிறான். வாயுள்ள பிள்ளை தான் பிழைக்கும் என்ற பழமொழி பொய்யல்லவே...!

சில நாட்களுக்கு முன்பு ஒரு நண்பரை சந்திக்க நேர்ந்தது, பேசிக் கொண்டிருந்த சில மணித்துளிகளில்... “நீங்க எந்த ஊரு? உங்க பேச்சை வச்சு கண்டு பிடிக்கவே முடியலியே?” என்றார். நிஜமாகவே வருத்தமாய் இருந்தது. நெல்லை வட்டார வழக்கை, என் கல்லூரி விடுதியில் தோழிகளின் கேலிக்கு அஞ்சி மாற்றி கொண்டது பெரிய தவறாய் தோன்றியது. “யாருலாம் மெஸ்ஸுக்கு வாறீங்க, ரொம்ப பசிக்கி” என்று சொல்லிவிட்டு, அவர்கள் என்னை கேலி செய்து தீர்த்தவுடன், கிளம்பி போய் சாப்பிடுவதற்குள் நான் பசியில் ஹீரோயின் ஆகி இருப்பேன். வட்டார வழக்கென்பது ஊரின் பெருமையை பறைசாற்றும் விஷயம், அதுவும் பண்பாட்டு கூறு தான் என்கிற புரிதல் இல்லாத அந்த இளம் பருவத்தில், நாம் எந்த விதத்திலும் கேலி பொருள் ஆகி விட கூடாது என்கிற வைராக்கியத்தில் முயன்று என் பேச்சை திருத்தி அமைத்துக் கொண்டேன். எந்தவித வட்டார வாசமும் அல்லாத மொழியில் பேச இயல்பாக வரவில்லை எனக்கு. இப்படி யோசித்து பேசிய நாட்களில், சரளமான என்னுடைய பேச்சு தடைபட்டு போனது என்பதே நிஜம். ஊருக்கு போனால் தாமிரபரணியின் சுவை போலவே அந்த வட்டார வழக்கும் இயல்பாய் பேச்சில் கலந்துவிடும். எந்த மொழியாக இருப்பினும் நன்றாக பேச தெரிந்தவரால் மட்டுமே தன்னை சரியாக வெளிப்படுத்தி கொள்ள இயலும். நாம் எடுக்கும் முடிவுகளை நியாயப்படுத்துவதும் கூட நம் பேச்சு தான். தேவையில்லாத கவலைகளுக்கு மதிப்பளித்து நமது இயல்பை நாம் இழந்து விடகூடாது என்பது நான் கற்றறிந்த விலைமதிப்பில்லா பாடம்.

20220020140138607.jpg

என்னுடைய சின்ன வயதில் அம்மாவுடன் வெள்ளி தோறும் சிவன் கோவிலுக்கு போவேன், அங்கு வார வழிபாடு நடக்கும். அதை நடத்தும் தாத்தா “நீ பாடேன் நாங்க எல்லாரும் பின்னால் பாடுறோம்” என்று சொல்வார். எனக்கு மிகவும் தயக்கமாய் இருக்கும். ஓர் இருமுறை பாடி இருப்பேன். அதற்கு பின்பு தாத்தா பாடச் சொல்வாறே என்றே கோவிலுக்கு போவதை தவிர்த்து விட்டேன். புத்தகத்தை பார்த்து தான் ஸ்லோகங்களைச் சொல்ல வேண்டும், அப்படியே தவறாய் சொன்னாலும், யாரும் எதுவும் சொல்லப் போவதில்லை. மனதிற்குள் ஆசையாகவும் இருக்கும், ஆனால் பயம் ஆசையை வென்று விடும். இப்படி நமக்கு வழங்கப்பட்ட எத்தனை வாய்ப்புகளை நாம் மறுதலித்திருப்போம். இன்னும் சொன்னால் இவை எல்லாம் வாய்ப்புகள் தான் என்பதை நமக்கு எடுத்து சொல்ல கூட ஆள் இருந்ததில்லை. இந்தத் தயக்கம் தான் மிடில் பெஞ்சர்கள் தவற விடக் கூடிய இடம். அந்த தயக்கக் கூட்டிலிருந்து வெளி வந்தாலே, வெளிச்ச கீற்றுகள் நம்மை தொட்டுவிடும். அதற்கு பின் நம் இலக்குகளுக்காக உயர உயர பறந்து கொண்டே இருக்கலாம் வானம் கூட தலையில் இடிக்கக் கூடும் யாரறிவார் !

பேசுவது மட்டும் நம் வாழ்வை முடிவு செய்யவில்லை. தேர்வில் நாம் எழுதுவதும், அதன் மூலம் பெரும் மதிப்பெண்களும் கூட நம் வாழ்வை நிர்ணயித்து விடுகின்றன. ஆனால், தேர்வுகள் என்னை எப்போதுமே பயமுறுத்தியது இல்லை. பொதுவாகவே நான் கொஞ்சம் படிக்க சோம்பல் படுவேன் என்பதால் தேர்வுகள் வந்தால் மட்டுமே படிக்க வேண்டும் என்கிற உந்துதல் ஏற்படும். கணக்கு என்கிற தனிப் பாடத்தை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், மற்ற பொறியியல் பாடங்களில் வரும் கணக்குகளை பிடிக்காது. ஏனென்றால் அவை பெரும்பாலும் புரிந்ததே இல்லை. எதற்காக இதை செய்ய வேண்டும், இதன் பயன் தான் என்ன என்ற அதிமுக்கியமான கேள்விகள் எல்லாம் தேர்வுக்கு முந்தின நாள் தான் படையெடுக்கும். அதிகமாய் சிந்தித்தால், அந்த அழுத்தத்தில் தூக்கம் வந்து விடும். என்னுடைய அறைத் தோழி எல்லாம் தீயாய் படிப்பாள், பதினோரு மணிக்கு டீ வாங்கி குடித்து விட்டு, விடிய விடிய இரண்டு மணி வரைக்கும் படிக்கக் கூடியவள். நான் கதை புத்தகத்தை வேண்டுமானால் விடிய விடிய படிப்பேன். ஆனால், பாட புத்தகத்தை படிப்பதானால் தூங்கி வழிவேன். எனக்காக டீ வாங்கி வந்து என்னை எழுப்புவாள் தோழி. அதை வாங்கி குடித்துவிட்டு, ஒரு கால் மணி நேரத்தில் மறுபடி தூங்கி போவேன். சில நேரம் புரிந்து படிக்கும் போது, எனக்குள் குற்ற உணர்வு ஏற்படும். ஒவ்வொரு நாளும் இப்படி படித்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். வருடத்தின் தொடக்கத்தில் அதிக பாடங்கள் எடுக்க படாத நாட்களில் படிப்பேன். ரெண்டு மூணு நாட்களில் “பழைய குருடி கதவை திறடி” கதை தான்.

20220020140205512.jpg

ஸ்டடி ஹாலிடேஸ் என்று தேர்வுக்கு முன் வரும் விடுமுறைகளில், பை நிறைய பெரிய பெரிய புத்தகங்களுடன் ஊருக்கு போவேன். குடும்பத்திலேயே முதல் பொறியாளர் என்பதால் ஊரே “தொற இங்கிலீஸு எல்லாம் பேசுது” என்பது போல என்னை பார்த்து வியந்து, போக வர இளநீர், நுங்கு போட்ட பதநீர், சாத்துக்குடி ஜூஸ் என்று வேளா வேளைக்கு தந்து, என்னை படிக்க ஊக்கப்படுத்துவார்கள். அதையெல்லாம் கொஞ்சமும் கூச்சமின்று வாங்கி குடித்து விட்டு தோழியுடன் போனில், “அப்புறம் இன்னுமா அந்த பய உன்னை சுத்தி வாரான்?” என்று ரகசியமாய் கதையடித்து கொண்டிருப்பேன். தேர்வுக்கு முன் ஒரு நாள் விடுமுறை இருந்தால் மட்டுமே ஒழுங்காய் படிப்பேன். மூன்று நாட்கள் எல்லாம் கொடுத்து விட்டால், அதான் மூணு நாள் இருக்கே என்று தள்ளி போட்டுக் கொண்டே போய் கடைசி நாள் ஞானோதயம் வந்து படிப்பேன்.

தேர்வெழுதுவது ஒரு அலாதி தான் என்றாலும், மை பேனாக்களை வைத்து எழுதுவது இன்னும் சிறப்பானது. பள்ளி இறுதியில் படித்து கொண்டிருந்த போது மெரூன் வண்ணத்தில் ஒரு பேனா வைத்திருப்பேன், அது தான் எனக்கு ராசியான பேனா என்றொரு நினைப்புண்டு. அந்த பேனாவை பிடித்து எழுதுவதற்கே அவ்வளவு சுகமாய் இருக்கும். முதல் முதலில் பேனா பிடித்து எழுத ஆரம்பித்த புதிதில் ஹீரோ பேனாக்களை மிகவும் பிடிக்கும். வீட்டில் கேட்டால், “அதுக்குள்ள உனக்கு ஹீரோ பேனா கேக்காக்கும்?” என்பார்கள் பெரியவர்கள். பத்தாவது படித்த போது ஹீரோ பேனாவிலேயே பிரிண்ட் செய்யப்பட்ட சித்திரங்களுடன் இருந்த பேனாக்கள் வந்தன, அதில் ஒன்றை பல நாட்களாய் வைத்திருந்தேன். கல்லூரி வந்ததும் மெல்ல மெல்ல பால் பாயின்ட் பேனாக்களுக்கு மாற தொடங்கிவிட்டேன். தற்போதுள்ள கால கட்டத்தில் பேனா பிடித்து எழுதுவதே இல்லை என்றாகி விட்டது.

தேர்வுக்காக எவ்வளவு படித்திருந்தாலும், தேர்வை எழுதுவதற்கு ஒரு தனி திறமை வேண்டும். ஒன்றுமே படிக்காதவர்கள் என்று நாம் நினைக்கும் சிலர் நாம் மெயின் ஷீட்டை முடித்திராத நிலையில் இரண்டாவது அடிஷனல் சீட் வாங்கி கொண்டிருப்பார்கள். வெறும் கணக்குகள் நிறைந்த பாடமாச்சே, இதில் கூட இவர்கள் எதை இத்தனை பக்கம் எழுதுகிறார்கள் என்று வியந்து போவேன் நான். மானே தேனே போட்டு எழுத கூட ஒரு வரைமுறை வேண்டாமா. குண்டு குண்டான கையெழுத்து எனக்கு, அதிகம் இடம் விட்டும் எழுத வராது. சிலர் ஸ்கெட்ச் பேனா, பென்சில், ஸ்கேல் எல்லாம் எடுத்து போவதை பார்த்து வியந்து போவேன் நான். கொடுக்கப்பட்ட நேரத்தின் கடைசி மணித் துளி வரை எழுதிக்கொண்டிருக்கும் எனக்கு, அதற்கெல்லாம் நேரம் இருந்ததே இல்லை. சிலர் சீக்கிரமே முடித்து விட்டு கட்டம், செவ்வகம் எல்லாம் போட்டு விடை தாளை அழகு செய்து விட்டு ஒரு மணி நேரம் இருக்கும் போதே வெளியில் போய்விடுவதை ஆச்சர்யமாய் பார்ப்பேன். ஒரு தேர்வுக்கு முன்பு உடல் நலக்குறைவால் சரியாக படிக்காமல் சீக்கிரமே தேர்வை எழுதிவிட்டு வந்த போது, மிக உல்லாசமாய் உணர்ந்தேன். அந்த தேர்வில் பாசோ பெயிலோ என்னவானால் என்ன என்று கவலையில்லாமல் எழுதியது மிகபெரிய சுதந்திர உணர்வை ஏற்படுத்தியது. பக்கங்களின் எண்ணிக்கை மதிப்பெண்கள் வாங்க மிகவும் அவசியம் என்று அறிந்திருந்த போதும் என்னால் பக்கம் பக்கமாய் எழுத முடிந்ததில்லை.

தேர்வில் எந்த கேள்வி கண்டிப்பாக வரும் என்று தெரியாமலே எப்படி தோராயமாக பிட் தயாரிக்கிறார்கள். அப்படி தயாரித்த பிட்டை ஆசிரியர் அறியாமல் சரியாக பயன்படுத்தி எப்படி எழுதுகிறார்கள் என்று நான் அடிக்கடி யோசிப்பேன். நூதனமாக செய்ய வேண்டிய இந்த வேலையில் உழைப்பும் அதிகம், அவ்வளவு கஷ்டப்பட்டு எழுதிய பிட்டாக இருந்தாலும், தேவையான நேரத்தில் புரியாமால் போனால் என்ன செய்ய, இதற்கு படித்தே எழுதி விடலாமே என்று நினைக்கும் சராசரி மிடில் பெஞ்ச் தான் நான். என் பள்ளி நாட்களில், அரசு பள்ளியில் வேலை பார்த்த வெங்கடாச்சலம் சார் தான் எனக்கு டியூஷன் எடுத்தார். அவர் சொல்லும் கதைகள் சுவாரஸ்யமானவை. “அறுவாளோட வந்து அப்பன் மிரட்டுவான்மா, மவனை ஒழுங்கா பிட் குடுத்து பாஸ் பண்ண வச்சிரு” என்று, நாமும் பரீட்சை நேரத்தில் கேள்விக்கு சரியான பதில் இருக்கும் பக்கத்தை புத்தகத்தில் இருந்து கிழித்து, அந்த பையன் கையில் கொடுத்தால்... அவன், அந்த பக்கத்தில் இருக்கும் முந்தின கேள்வியின் கடைசி இரண்டு வரியில் இருந்து எல்லாவற்றையும் காப்பியடித்து வைப்பான்மா. டேய் வினாத்தாளில் இருக்கும் கேள்விக்குரிய எண்ணை போட்டு அதற்கான பதிலை மட்டும் இதிலிருந்து பார்த்து எழுது என்று சொல்லி குடுத்து முடிப்பதற்குள் தொண்டை வறண்டு போகும். “இந்த உயிருக்காக என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கு” என்று சலித்து கொள்வார் சார். இப்படி பிட் எழுதி பாஸ் ஆனவர்கள் என்ன சாதித்து விட போகிறார்கள். இப்போதெல்லாம் வீட்டில் வைத்து தான் தேர்வே நடக்கிறது, இதில் புத்தகங்கள் விரிக்கப்பட்டிருந்தால் என்ன அல்லது மூடி இருந்தால் தான் என்ன...! இந்த தேர்வெல்லாம் நம் கற்றலின் அளவை நாமே சுயபரிசோதனை செய்துகொள்வது தானே. நம் கற்றலினால் பெற கூடிய கல்வியை தேர்வுகளும் மதிப்பெண்களும் மட்டுமே முடிவு செய்வதா? கல்லூரி நமக்கு வெறும் பாடங்களை மட்டுமா கற்றுத் தருகிறது. அதையும் தாண்டி நமக்குள் மனிதத்தையும், அன்பையும் விதைத்தால் தானே அந்த கல்வியின் நோக்கம் வெற்றியடையும்!