தொடர்கள்
பொது
காற்றில் கலந்த கதக் கலைஞன் - வேங்கடகிருஷ்ணன்

20220018222403490.jpg

“தக தக தக தின தின தின, தக தக தக தின தின தின” இந்த ஜதியினை எங்கு கேட்டாலும் இப்போதெல்லாம் கமலஹாசன் முகமும் அவருக்கு கதக் நடனம் சொல்லித் தந்த “பிர்ஜு மகராஜ்” முகமும் நினைவில் வராமல் போவதில்லை. தமிழ் மக்கள் அதிகம் அறிந்திராத பெயர் அது. “உன்னைக் காணாமல்” பாடலுக்கு அவர் கமலுக்கு நடனம் சொல்லித்தந்த வீடியோ பார்த்து வியக்காதவர்களே கிடையாது. வயதான நிலையிலும் உட்கார்ந்த படியே அதனை அசைவுகளையும் கவனமாய் சொல்லித் தரும் அந்த நேர்த்தி. கலைஅவர் உடம்பின், ஆன்மாவின் ஒவ்வொரு துகளிலும் உயிர் வாழ்கிறது என்பதை சொல்லாமல் சொல்லியது. கமலிடம் உள்ள ஒரு நல்ல பழக்கம் மேக்கிங் வீடியோ எடுப்பது. இல்லாவிட்டால் இந்த அற்புதக் கலைஞன் வடக்கு தாண்டியும் பலருக்கும் சென்றடையாமல் “சலங்கை ஒலி” பாலகிருஷ்ணா போல மறைந்திருப்பார்.

20220018222526261.jpg

கதக் நடனக் குடும்பத்தில் பிறந்து, தனது சித்தப்பாக்களான லச்சு மகராஜ் மற்றும் ஷம்பு மகராஜ் ஆகிய இருவரிடமும் நன்கு பயிற்சி பெற்றவர். தந்தையும் குருவுமான அச்சன் மகாராஜிடம் நேரடியாகவே பயின்றவர். தில்லி பாரதிய கலா கேந்திராவில் ஷம்பு மகராஜோடு பணிபுரிந்து பின்னர் 1998-ம் ஆண்டு தன்னுடைய சொந்த முயற்சியில் கலாஷ்ரம் நடன பள்ளியை நிறுவினார்.

20220018222555981.jpg
அலகாபாத் மாவட்டத்தில் பிறந்தவர், தந்தை தான் முதல் குரு. அரங்கேற்றம் நிகழ்ந்தது அவருடைய 7-வது வயதில். தன்னுடைய 10-வது வயதில் தந்தையை இழந்தார். பின்னர் மூன்று வருடங்களில் கதக் நடன ஆசிரியரானார். சங்கீத நாடக அகாதெமியின் சார்பில் நடந்துவந்த “கதக் கேந்திராவின்” தலைவரானார். 1998-ல் பணி ஓய்வு பெரும்வரையில் அங்கேயே பணியாற்றினார்.

20220018222652212.jpg
திரைக்கலைஞர் சத்யஜித் ரே-வின் ‘சட்ரஞ் கே கிலாடி’ படத்தில் இரண்டு பாடல்களுக்கு இசையமைத்து, பாடி இருக்கிறார். தேவதாஸ் (2002) படத்தில் ஒரு பாடலுக்கு நடனமமைத்தும் இருக்கிறார்.

உன்னைக் காணாது (விஸ்வரூபம் ) பாடலுக்கு 2012 ஆண்டுக்கான தேசிய விருது கிடைத்தது.

‘பாஜிராவ் மஸ்தானி’ (2016 ) படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் அமைத்தமைக்கு பிலிம் பேர் விருது கிடைத்தது.

வாங்காத விருதுகள் இல்லை என்று சொல்லுமளவிற்கு விருதுகள் பத்மவிபூஷன் முதல் சங்கீத நாடக அகாடெமி விருது வரை அனைத்தும். சென்னை க்ருஷ்ண காண சபா அவருக்கு நிருத்ய சூடாமணி விருது வழங்கி கவுரவித்தது.

கதக் நடனம், பரத நாட்டியத்தை போலவே அசைவுகளும் முக அபிநயங்களுக்கும் முக்கியத்துவம் தரும் நடனமாகும். சிறு சதங்கைகள் கட்டப்பட்ட கால்கள் அசைவும் இடுப்பிலிருந்து மேலே உள்ள உடற்பகுதியின் சுழற்சியும் முக்கியத்துவம் வாய்ந்தவை. பிர்ஜு மகாராஜ் தரையிலிருந்து இரண்டடி உயரம் சென்று சுழன்று திரும்புவார். கமலும் அதை விஸ்வரூபத்தில் செய்திருப்பார். கதா என்னும் சமக்ருத வார்த்தையிலிருந்து வந்தது தான் “கதக்” கதாகார் என்பதன் சுருக்கமே அதாவது கதை சொல்பவர்கள். உடல் அசைவில், விழி அசைவில் கதை சொல்லும் நடன பாணி இது. ஜெய்ப்பூர், வாரணாசி மற்றும் லக்னோ ஆகிய இடங்களில் இருந்து உருவாகி பின் பரவலாக, கதை சொல்லிகளால் வட இந்தியா முழுவதும் பரவியது. பிர்ஜு மகராஜின் அபிநயத்திற்கு பெரிய அளவில் ரசிகர் கூட்டம் உண்டு. “கண்களும் கவி பாடுதே” என்ற வரிகள் அவருக்கு பொருத்தமானவை. அந்த கண்கள் இனி திறக்காது என்பது தான் தாங்க முடியாத சோகம்.

20220018222748939.jpg
உடல் நலமின்மையால் இறந்த குருவுக்கு அவரது சீடர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அவரது மறைவு குறித்து கமலஹாசன் தன்னுடைய ட்வீட்டில் “உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே” என்று குறிப்பிட்டிருந்தார். காற்றில் கரைந்த அந்த கலைஞனின் கலை அவரது சீடர்களின் கால் வழி வாழ்ந்துகொண்டிருக்கும்.

கலைக்கு முடிவில்லை... கலைஞனுக்கும்...