தொடர்கள்
பொது
தக்காளி.. தக்காளி.. - ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)

20211026212014548.jpeg

அத்தியாவசியப் பொருள் ஏதாவது ஒன்று விலை ஏறினால்... அரசாங்கம், உடனே குறைந்த விலையில் அரசாங்கம் விற்பனை செய்யும் என்பார்கள். இது சம்பிரதாய சடங்கு என்று ஆகிவிட்டது. ஏன் அதிக விலைக்கு அந்தப் பொருள் விற்கப்படுகிறது என்ற யோசனை அங்கு தவிர்க்கப்படுகிறது. நியாய விலை கடையில் கிடைக்கும் என்பார்கள். ஆனால், எல்லா நியாய விலை கடைகளிலும் அந்த அத்தியாவசிய பொருள் கிடைக்காது, இது தான் உண்மை.

தற்போது மழை வெள்ள பாதிப்பில் சேதம், அதைத் தொடர்ந்து போக்குவரத்து பாதிப்பு என்று தொடர்கதையாகி, காய்கறிகளின் விலைகள் உயர்ந்துள்ளது. குறிப்பாக தக்காளி நூற்றி ஐம்பது ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆப்பிளை விட தக்காளி விலை அதிகம் என்று மீம்ஸ் போட்டு கொண்டாடுகிறார்கள்.

தக்காளி விலை உயர்வுக்கு, கோயம்பேடு வியாபாரிகள் தரப்பு சொல்லும் காரணம்... 150 லாரிகள் வரவேண்டிய இடத்தில், 30 லாரிகள் தான் தற்போது வருகிறது. வரத்து குறைவு, தேவை அதிகம். எனவே விலை அதிகம் என்கிறார்கள்.

அதே சமயம்... கோயம்பேடு வியாபாரிகள், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த ஒரு யோசனையை நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறார்கள். கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள தக்காளி மைதானத்தை திறந்தால், தக்காளி 40 ரூபாய்க்கு விற்க தயாராக இருப்பதாக மொத்த வியாபாரிகள் சங்கம் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர்.

கோயம்பேடு காய்கறி சந்தையில், ‘தக்காளி கிரவுண்ட்’ என்ற மைதானம் உள்ளது கொரோனா உச்சத்தில் இருந்தபோது, கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது. அப்போது தக்காளி மைதானமும் மூடப்பட்டது. அதன் பிறகு, படிப்படியாக கடைகள் திறக்கப்பட்டது. ஆனால், இந்த மைதானம் திறக்கப்படவில்லை. இது சம்பந்தமான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கோயம்பேடு வியாபாரிகள் சங்க வழக்கறிஞர், இந்தக் கோரிக்கையை நீதிபதி முன்வைத்தார். நோய் தொற்று காலத்தில் இந்த மைதானத்தில் தக்காளி ஏற்றி வந்த பதினோரு லாரிகள் நிறுத்தப்பட்டிருந்தது. தக்காளி அழுகிய நிலையில், லாரியை விடுவிக்க நீதிமன்றத்தை நாடியதையும் வழக்கறிஞர் நினைவுபடுத்தினார். இதைத் தொடர்ந்து நீதிபதி இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிப்பதாக உறுதி கூறினார்.கோவையில் உழவர் சந்தையில் ஒருவருக்கு இரண்டு கிலோவுக்கு மேல் தக்காளி விற்கக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு, ஆதார் ஆவணம் கட்டாயம் என்று வேளாண்துறை அதிகாரிகள் அறிவுரை சொல்லி இருக்கிறார்கள். இதன் மூலம் அதிக அளவு தக்காளியை விற்கக்கூடாது என்று கட்டுப் படுத்தப் பட்டிருக்கிறது.

பெட்ரோல், டீசல் விலையைவிட காய்கறிகள் விலை தற்சமயம் அதிகமாக உயர்ந்து வருகிறது. முருங்கை, அவரை, வெண்டை எல்லாம் 100 ரூபாய். மற்ற காய்கறிகளின் விலையும் அதிகம் தான். இதற்குக் காரணம் தமிழக பகுதிகளில் கடும் மழை காரணமாக காய்கறி சாகுபடி பெருமளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. பல இடங்களில், லாரிகள் வரும் சாலைகள் பாதிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதும் ஒரு காரணம். இதெல்லாம் சீராக எப்படியும் குறைந்தபட்சம் ஒரு மாதமாகும். அதுவரை விலை ஏற்றம் கட்டுப்படுத்த முடியாது என்கிறார்கள் கோயம்பேடு வியாபாரிகள்.

தமிழகத்தில் வெளிச் சந்தை விலையை கட்டுப்படுத்த, பண்ணை பசுமை கடைகளில் 85 முதல் நூறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் பண்ணை பசுமை கடைகள் எத்தனை இருக்கிறது, எங்கு இருக்கிறது என்று அதிகாரிகளை கேட்டால்... தெரியாது என்பதுதான் அவர்கள் பதிலாகவே இருக்கும். தமிழ்நாட்டில் எல்லா இடத்திலும் பண்ணை பசுமைக் கடைகள் இல்லை என்பதுதான் உண்மை. அரசு இப்படி ஏதாவது காய்கறிகள் விலை உயர்ந்தால், இப்படி பண்ணை பசுமை கடை என்ற பெயரை பயன்படுத்துவதுதான் உண்மை. காய்கறி விலை உயர்வை கட்டுப்படுத்தி, பண்ணைப் பசுமை கடைகளில் நிறைய தந்தால் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும். ஆனால், அப்படி செய்தால்... கோயம்பேடு வியாபாரிகள் கோபத்துக்கு, ஆளும் கட்சி ஆளாக நேரிடும் என்பதுதான் உண்மை. அமைச்சரே தனது செய்திக்குறிப்பில்... 65 பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்வதாக குறிப்பிட்டிருக்கிறார். இது எப்படி விலையைக் கட்டுப்படுத்தும் என்று தெரியவில்லை.

தக்காளி விற்பனை மைதானம் திறக்க கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது சிஎம்டி தரப்பில் லாரிகள் வந்து பொருட்கள் இடமாற்றம் செய்யும் இடத்தில் விற்பனை செய்யக் கூடாது என்ற விதி உள்ளதாகவும் அந்த விதியை மீறி மைதானத்தில் விற்பனை செய்ததால்தான், மைதானத்தை மூடியதாக பதில் சொல்லியிருக்கிறார்கள். இப்போதைக்கு மைதானம் திறக்க வாய்ப்பு இல்லை. தக்காளியே இறக்கப்பட்டு, விலையை குறைத்தால் தான் உண்டு.