தொடர்கள்
இசை
நாதஸ்வர தர்பார் - 17... - இசை விமர்சகர் வி. சந்திரசேகரன்

20211017171619104.jpg

இறுதிவரை மிடுக்கு!

ஒரு காலத்தில் தஞ்சாவூர் ஜில்லாவில் கொடிகட்டிப் பறந்த நாதஸ்வர மகா வித்வான்களில் முக்கியமானவர்கள் செம்பனார்கோயில் எஸ்.ஆர்.ஜி. சம்பந்தம் மற்றும் எஸ்.ஆர்.ஜி. ராஜண்ணா. அவர்கள் வாசித்த மல்லாரிகளும், பல்லவிகளும், கல்யாணிகளும் இன்றும் பேசப்படுகிறது. இது சம்பந்தத்திற்கு நூற்றாண்டு விழா கொண்டாடும் நேரம். கடந்த சில வாரங்களை தொடர்ந்து இந்த வாரமும் தன் பாசத்திற்குரிய அண்ணன் எஸ்.ஆர்.ஜி. சம்பந்தம் பற்றி சொல்கிறார் எஸ்.ஆர்.ஜி. ராஜண்ணா! பேச்சு கோடம்பாக்கம் பக்கம் திரும்பியது.

20211017135129437.jpg

“அண்ணனும், நானும் ஆரம்ப காலத்தில் நல்ல தரமான சினிமா பாட்டுகளை கச்சேரியின் கடைசியில் வாசிக்கத் தவறியதில்லை. அதுக்குன்னே ஒரு கூட்டம் காத்திருக்கும். அதுவும் கல்யாண வீடுன்னா கேட்கவே வேண்டாம். ‘வீர அபிமன்யு’, ‘ராஜகுமாரி’ படங்களின் பாடல்களை வாசிப்போம். அப்புறம் ‘பெரிய இடத்துப் பெண்’ படத்துல வரும் ‘கட்டோடு குழலாட ஆட..’ பாட்டுக்கு பெரிய ரசிகர் கூட்டமே உண்டு. எல்லாத்திற்கும் மேலாக ‘பராசக்தி’ படத்தில் வரும் ‘ஒரு பெண்ணின் மனசை தொட்டு போனவரே, உங்க எண்ணத்தை சொல்லிவிட்டு போங்க’ன்னு ஒரு பாட்டை எம்.எஸ். ராஜேஸ்வரியம்மா பாடுவாங்க. ‘காவடி சிந்து’ ஸ்டைலில் மெட்டு அமர்க்களமா இருப்பதால் அண்ணனும் இதை ஆசையா வாசிக்கும். ஜனங்கள் எல்லாம் ஆட ஆரம்பிச்சுடுவாங்க. என்னை ஓரக் கண்ணால் பார்த்துவிட்டு, பாட்டில் வராத சில விசேஷ சங்கதிகளை அண்ணன் போடும் பாருங்க! நானும் குஷியாகி பதிலுக்கு தருவேன். அதேப் போல ‘கொஞ்சும் சலங்கை’யில் வரும் ‘சிங்காரவேலனே... தேவா’ எங்க இருவருக்குமே பிடிக்கும்! நிறைய வாசித்திருக்கோம். ‘தில்லானா மோகனாம்பாள்’ பாட்டுக்களை கூட வாசித்திருக்கோம். ஒரு கட்டத்தில் சினிமாப் பாட்டுகளின் தரம், அதன் வார்த்தைகள் எதுவும் அண்ணனுக்கு பிடிக்கவில்லை. போதும்னு நிப்பாட்டிடுச்சு!

அப்புறம் ரொம்ப வருஷம் கழித்து, ஒரு ரசிகர் ரொம்ப கேட்டுகிட்டதால, ‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே’ பாட்டை அண்ணன் வாசிச்சது எனக்கு ஞாபகம் இருக்கு. அவர் பிள்ளை வசந்தகுமாருடன் சேர்ந்து ஒரு கல்யாணத்தில் இதை வாசிச்ச ஞாபகம். இளையராஜா ரசிகர்கள் எல்லாம் ரொம்ப சந்தோஷமாயிட்டாங்க.

அண்ணன் இறந்தபோது அதுக்கு வயசு 91. எந்த உடம்பும் இல்லை. அது முடியலேன்னு படுத்து நான் அதிகம் பார்த்தது இல்லை. அதுக்கு எல்லாமே நேரப்படி நடக்கணும். சாப்பாடுன்னா அந்த நேரத்திற்கு தட்டு போட்டாகணும்! தூக்கமும் அப்படி. அமிர்தமா இருந்தாலும் அளவோடு சாப்பிடும். கச்சேரிக்கு போற இடத்தில் கூட நமக்கு யாரோ செலவு பண்றாங்கன்னு வித விதமா வரிஞ்சு கட்டற ஆள் இல்லை. சொல்லப் போனால். கூட வரும் சக வித்வான்களிடம்... ‘அண்ணே... தேவைக்கு மீறி ஓவரா வேண்டாம். பில் எகிறிடும். நம்ம கௌரவம் முக்கியம்’ என்று மறக்காமல் சொல்லும்.

இங்கே திருவான்மியூர் வீட்டில் இறப்பிற்கு முதல் நாள் ‘சமுத்திரா’ பத்திரிகைக்கு பேட்டி கொடுத்தபோது, நான் அருகில் தான் இருந்தேன். மறுநாள் சாயந்திரம் சாதாரணமா உட்கார்ந்திருந்தது. திடீர்னு, ‘எனக்கு ஏதோ பண்ணுது. நான் இருக்க மாட்டேன்’னு சொல்லி சாய்ந்தது தான். பேட்டி எடுத்த பெண் மறுநாள் வந்து, நம்ப முடியாமல் பதறிப் போனதெல்லாம் இப்பவும் கண் முன்னே இருக்கு!

அண்ணனுக்கு மொத்தம் எட்டு பிள்ளைங்க. மூத்தவர் கோவிந்தசாமியும் நாயனம் வாசிப்பார். இப்போது இல்லை. அப்புறம் வசந்தகுமாரும் நல்லா வாசிப்பார். மோகன்தாஸ் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் ஆஸ்தான வித்வான். அப்பா வழியில் மேலே வந்து பிரபலமாயிடுச்சு. அண்ணனுக்கு மூணு பெண்கள். இரண்டு பேர் செட்டிலாகி விட்டனர். ஒருத்தர் இல்லை. எல்லா பிள்ளைகளையும் நல்லவிதமா கரையேற்றிவிட்டுதான் போயிருக்கு அண்ணன்.

எனக்கு நான்கு பிள்ளைகள். அதில் இருவர் பெண்கள். யாரையும் என் வழியில் கொண்டு வரலை. எல்லாம் சௌகரியமா இருக்கிறார்கள்.

அண்ணனைப் பொறுத்தவரை மிடுக்கா வாழ்ந்துவிட்டு மிடுக்கா போயிடுச்சு. அதுக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. நானாவது வெற்றிலை பாக்கு போடுவேன். அதுக்கு அதுவும் இல்லை. ‘சங்கீதக்காரனுக்கு வேற அக்கப்போர் கூடாது. அவனுக்கு சங்கீதமே எல்லாம். மனசு மாறினா புத்தி கெட்டுப் போகும். கூடவே வாசிப்பும் கெட்டுப் போகும்..’ என்று அடிக்கடி சொல்லும். அப்படியே ஒரு தவ வாழ்க்கை வாழ்ந்து விட்டுப் போயிருக்கு..” பேசிக் கொண்டே வந்த எஸ்.ஆர்.ஜி. ராஜண்ணா சட்டென்று மௌனமானார். அவர் விழிகளில் நீர் கோர்ப்பது தெரிந்தது. அவர்களின் ஆழமான பந்தத்தை அவ்வளவு சுலபமாக நம்மால் புரிந்து கொள்ள முடியுமா?

- மங்கலம்