தொடர்கள்
பொது
விஜயா பதிப்பகம் வேலாயுதம் ஐயாவோடு ஒரு நேர்காணல்... - வேங்கடகிருஷ்ணன்

20210817161323828.jpg

கோவை மாநகரின் மத்தியில் இருக்கிறது வாசகப்பறவைகளுக்கான வேடந்தாங்கல். ஆமாம்... விஜயா பதிப்பகம், வாசகர்கள் வந்து தங்கி இளைப்பாறும் தமிழ் வனம். இலக்கியம், நவீனம், சிறுவர் இலக்கியம், வரலாறு, சுயமுன்னேற்றம் என எல்லா துறைகளிலும் கால் பதித்திருக்கிறது. வாசகர்கள் தான் நடத்துகிறார்களோ என்ற சந்தேகமே நமக்கு வந்துவிட்டது, அந்த அளவு வாசகர்களை மட்டுமே நம்பி இதை நடத்தி வருகிறார் பதிப்பகச்செம்மல் திரு.வேலாயுதம் அவர்கள். அவருடன் ஒரு நேர்காணல்....

விகடகவி: வணக்கம். இப்படி எழுத்தாளருக்கு ஒரு பரிசு கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது?

வேலாயுதம் ஐயா: கோவை வாசகர்களின் உற்சாகம் தனி. சுஜாதா அவர்கள் குறிப்பிட்டது போல எழுத்துக்கும், எழுத்தாளர்களுக்கும் கொடுக்கும் மரியாதையே தனி. இன்னும் குறிப்பாகச் சொன்னால், எங்கள் பதிப்பகத்தில் மூன்று தளங்களிலும், வாசகர்கள் அவர்கள் பையோடு செல்லலாம், எந்த வித கட்டுப்பாடுகளும் கிடையாது. மேலும் கேஷியருக்கு வேலையே இருக்காது. அவர்களே சரியான பணத்தை தந்துவிட்டு போய்விடுவார்கள். உங்களுக்கு ஒன்று சொல்ல வேண்டும், நாளை முதல் கேஷியர் இருக்கமாட்டார், நீங்களே புத்தகத்தை எடுத்துக்கொண்டு பணத்தை பெட்டியில் போடவேண்டும் என்று அறிவித்தால், நமது வாசகர்கள் உடனே ஐயாவுக்கு ஏதோ பிரச்சனை போல அதுதான் இப்படி அறிவித்திருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு புத்தக விலையைவிட அதிகமாகவே பணத்தை போட்டுவிட்டு சென்று விடுவார்கள். அப்படிப்பட்ட வாசகர்கள் தான் கோவை வாசகர்கள். இப்படி ஒரு பாக்கியம் எனக்கு வாய்த்திருக்கிறது.

உங்கள் கேள்விக்கு பதிலாக இரண்டு விஷயங்கள் இருக்கிறது. முதலாவது... எழுத்தாளர்கள் நிறைய பேர் வறுமையில் உழன்று துன்பப்பட்டு உயிர் நீத்தார்கள். பாரதி, புதுமைப்பித்தன் போன்றவர்கள் இதற்கு உதாரணம். வறுமையை விட கொடுமையானது விரக்தி. இதற்கு உதாரணம் வேறு யாரும் வேண்டியதில்லை, நமது பா.சிங்காரம். எத்துணை விரக்தியோடு உயிர்நீத்தார். ‘புயலிலே ஒரு தோணி’, ‘கடலுக்கு அப்பால்’ ஆகிய மாபெரும் படைப்புக்களை படைத்தவர். எழுத்தாளர் முருகேச பாண்டியன் எவ்வளவு விரக்தி என்பதை பதிவு பண்ணி இருப்பார். யாரும் அவரைக் கண்டுகொள்ளவில்லை. புத்தகம் போடுவதற்கு எந்த படிப்பாளரும் முன்வரவில்லை, இத்தனைக்கும் ‘கலைமகள்’ பத்திரிக்கையில் பரிசு வாங்கிய படைப்பு.

இரண்டாவது... புத்தகங்கள் மனிதனை மாற்றும் என்பது அறிஞர்கள் சொன்னது. இதை வேறு எங்கும் சென்று பார்க்க வேண்டியதில்லை, புத்தகம் மாற்றிய மனிதன் நான் என்று பெருமையாய் சொல்வேன். என்னிடம் எந்த ஒரு முதலும் இல்லாமல் தான், நான் இந்த விஜயா பதிப்பகத்தை துவக்கினேன். வாசகர்களின் அன்பே என்னுடைய முதல். அவர்களுடைய ஆதரவு என்னும் அஸ்திவாரத்தில் தான் இது இப்போதும் நிற்கிறது. எந்த பரிசும் இதற்கு ஈடாகாது. ஏனென்றால்.. புத்தகத்தின் அருமை தெரிந்தவர்கள் மட்டும் தான் இந்த விருதுகளை வழங்குவதற்கு ஆதரவு தருகிறார்கள். எவ்வளவோ பேர் நாங்கள் தருகிறோம் என்று சொன்ன போதும், நாங்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

இன்னொரு விஷயமும் இதற்கு பின்னல்... அதாவது எப்படி இந்த விருது கொடுக்கணும்னு தோன்றியது என்பதற்கு, பாரதிய பாஷா விருது, 1996-ல் சி.ஆர். ரவீந்திரனுக்கு ‘ஈரம் கசிந்த நிலம்’ நாவலுக்காக வழங்கப்பட்டது. நான், அகிலன் கண்ணன் மற்றும் சி.ஆர். ரவீந்திரன் மூவரும் சென்றோம். அவரும் இதை பதிவு பண்ணி இருக்கிறார். அங்கே நாங்கள் கண்ட காட்சி, ஒவ்வொரு மொழிக்கும் விருது கொடுக்கிறார்கள். அதற்க்கான பரிசுத் தொகையை தருபவர்கள் அங்கே வருவதே இல்லை, தங்களை எங்கும் முன்னிலைப்படுத்திக் கொள்வதும் இல்லை. தங்கள் பெயரை சொல்லவேண்டாம் என்கிறார்கள். மிகுந்த கூச்சப்படுகிறார்கள். அதில் ஒருவர் “பணம் கொடுப்பதாலேயே எங்களுக்கு தகுதி வந்துவிடுமா” என்று கேட்கிறார். எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அதிலிருந்து தான் இந்த யோசனை பிறந்தது.

வி: நிறைய விருதுகள் தருவதாக அறிந்தோமே?

வே: ஆமாம், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23 அன்று, உலகப் புத்தக தினம் கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு கடந்த 5 ஆண்டுகளாக விஜயா பதிப்பகத்தின், ‘விஜயா வாசகர் வட்டம்’ சார்பில் சிறந்த படைப்பாளரைத் தேர்வு செய்து, ஜெயகாந்தன் விருது (ரூ. 100000/-), கவிஞர் மீரா விருது (ரூ. 25000/-), புதுமைப்பித்தன் விருது (ரூ. 25000 /-), அர்பணிப்பாய் சேவை செய்யும் சிறந்த அரசு நூலகருக்கு சக்தி வை. கோவிந்தன் விருது (ரூ. 15000/-), சிறந்த புத்தக விற்பனையாளருக்கு வானதி திருநாவுக்கரசு விருது (ரூ. 15000/-) ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இவை எல்லாமே வாசகர்களால் நன்கொடையாகவே வழங்கப்படுபவை தான். இது ஆறாவது வருடம் இந்த விருதுகளுக்கு. நான் கல்லுரிக்கு சென்று படிக்கவில்லை, என்னை உருவாக்கியது அரசு நூலகந்தான். அதனால் தான் அரசு நூலகருக்கு இந்த விருது.

வி: கி.ரா விருதுக்கு பரிசுத்தொகை ஐந்து இலட்சம் ஆனது எப்படி?

வே: இதற்கு முக்கியக் காரணம், என் நண்பர் நடிகர் சிவக்குமார் தான். இது போல் ஒரு எண்ணம் தோன்றியதும் அவரை அழைத்து சொன்னேன். உடனே என்னிடம், அரை மணி நேரம் கழித்து அழைக்கிறேன் என்றார். அரைமணி நேரம் கழித்து அழைத்துச் சொன்னார், சக்தி மசாலா நிறுவனம் ஒரு இலட்சம் ரூபாய் பரிசு வழங்கும் என்றார். எனக்கு மகிழ்ச்சியில் பேச வரவில்லை.

முதல் விருது வழங்கும் விழாவை கி.ரா கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்பதாலேயே அவர் இல்லத்திலேயே நிகழ்ந்தது. எழுத்தாளர் கண்மணி குணசேகரன் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. அப்போது அவரின் விருப்பம் மற்றும் விழாவில் கலந்துகொண்டவர்கள் விருப்பப்பட... உடனே சிவகுமார் அவர்கள், சக்தி மசாலா நிறுவனத்திடம் பேசி இரண்டு லட்சமாக உயர்த்தி அப்போதே அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்த ஆண்டு கி.ரா-வின் நினைவஞ்சலி நிகழ்வில், எழுத்தாளர் நாஞ்சில் நாடன் இது ஐந்து இலட்சமாக தரப்பட்டால் எழுத்தாளர் பயனடைவார் என்று சொன்னார். மேடையில் இருந்த சக்தி மசாலா நிறுவனர்கள் சிறிதும் யோசனை செய்யாமல்... உடனே, அங்கேயே அதை அமோதித்தார்கள். மேலும் அவர்கள் சொன்னதுதான் நினைத்துப்பார்க்க இயலாத ஒன்று. (ஐயா இதைச் சொல்லும்போது உணர்ச்சிவயப்படுகிறார்)

சென்ற ஆண்டு விருது பெற்ற எழுத்தாளர் கண்மணி குணசேகரன் அவர்களுக்கு மூன்று இலட்சம் தந்து விடுகிறோம். தயவு செய்து, அவரை ஏற்றுக்கொள்ளச்சொல்லுங்கள் என்று சொன்னார்கள். நான் பிரமித்துபோனேன், அவர்களின் பண்பினை எண்ணி. இதை எந்த ஒரு விருதோடும் ஏன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது என்று சொன்னேன் என்பது உங்களுக்கு தெரிகிறதா?

இனிவரும் காலங்களில் இந்த விருதினைப் பொறுத்தவரை வாசகர்கள் பரிந்துரைக்கலாம், புத்தகம் அனுப்பவேண்டியதில்லை. பரிசீலித்து முடிவு எடுக்கப்படும். அவர்கள் அதுபற்றி எழுதி அனுப்புவதே ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவிக்க இருக்கிறோம்.

வி: வாசகர்களுக்கு முக்கியத்துவம் தருவது தான் உங்கள் வெற்றியின் ரகசியம் என்று நினைக்கிறேன். அது பற்றி...

வே: செப்டம்பர் 16 அன்று கி.ரா பிறந்தநாளன்று நமது பதிப்பகத்தில் கி.ரா புகைப்படம் திறந்து வைக்கப்படுகிறது. அவரின் ஒரு நீண்ட வாசகர் தான் திறந்து வைக்கிறார். அவரைப் பற்றி நன்கு தெரிந்த, அவருடைய எல்லா படைப்புகளையும் வாசித்த ஒருவர் தான் அவர். அவரைவிட பொருத்தமானவர் யாரையும் நான் பார்க்கவில்லை. சுப்பிரமணியன் என்னும் அந்த ரசிகர் தான், எழுத்தாளர் கோணங்கிக்கு விருது, பதக்கம், சன்மானம் எல்லாம் தருகிறார்.

அதேநரத்தில் எனக்கு ஒரு வருத்தமும் உண்டு. நான் நமது எழுத்தாளர்கள் யாரையும் குறிப்பிட்டோ குறைத்தோ சொல்லவில்லை... ஜனநாயகத்திற்கு எப்படி ஜனங்கள் முக்கியமோ, அதேபோல இலக்கியம், படைப்புகளுக்கு வாசகர்கள் மிகவும் முக்கியம் என்பதை நம்ம படைப்பாளிகள் யாருமே நினைத்துப் பார்ப்பதேயில்லை. ஒன்றிரண்டு புத்தகங்கள் வெளிவந்தவுடன் தங்களை மிகவும் பெரிய ஆள் என்று அவர்களாகவே நினைத்துக் கொள்கிறார்கள். காலமும், வாசகர்களும் முடிவு செய்ய வேண்டியது அது.

விருதுகளைத் தந்து எழுத்தாளர்களையும், பதிப்பகங்களையும் போற்ற வேண்டியதை யாரும் செய்யவில்லை. நான் இந்த தொழிலை ஏன் உளமார நேசிக்கிறேன் என்றால்... மற்ற தொழில்களுக்கும் இதற்கும் ஒரு வித்தியாசம் உண்டு.

கோவையின் வாசகர்கள் எங்களைக் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு என்றும் உண்டு. கோவையில் குற்றம் குறைவு, தொழில் வளர்ச்சி அதிகம். இதற்க்கு எல்லாரும் எங்களைச்சொல்வார்கள். நான் இன்னும் அழுத்தமாய் சொல்வேன், எல்லோரையும் வாசிக்கவைத்ததின் பலன் அது என்று.

வி: உங்களைப்பற்றி ஒன்று கேள்விப்பட்டோம், நீங்கள் புதிய துணி உடுக்கும் நாட்கள் பற்றி, வியப்பின் உச்சிக்கே சென்று விட்டோம், அது பற்றி சொல்லுங்கள்...

வே: (சிரித்துக்கொண்டே சொல்கிறார் ) ஆங்கில ஹிந்து நாளிதழில் இதை ஒரு நிருபர் செய்தியாக வெளியிட்டிருந்தார். எழுத்தாளர் எஸ்.ஆர்.ரங்கநாதன் பிறந்தநாள் ஆகஸ்ட் 12, அன்றைக்கு நான் புது துணி போடுவேன், அதேபோல உலக புத்தக தினமான ஏப்ரல் 23, புத்தாடை உடுத்துவேன், பிப்ரவரி 18 தமிழ்த்தாத்தா உ.வி சா பிறந்தநாளன்று புத்தாடை உடுத்துவேன். என் பிறந்த நாள், தீபாவளி, பொங்கலுக்கெல்லாம் உடுத்துவதில்லை. ஆகஸ்ட் 12 அன்று, நான் புத்தாடை உடுத்தி, கடையில் எல்லாருக்கும் இனிப்பு வழங்கிக் கொண்டிருந்தோம். அதை பார்த்த ஒரு பெண் நிருபர், ஆங்கில ஹிந்துவில் எழுதிவிட்டார். அதைப் படித்த பலர், அன்று புதுசு உடுத்த துவங்கியுள்ளனர் என்று கேள்விப்பட்டேன். பதினைந்து வயதில் என்னை ஆட்கொண்ட வாசிப்பு பூதம், எண்பத்தியிரண்டு வயதிலும் என்னை விட்டு அகலவில்லை. வாசிப்பு பூதம் எனக்கு என்ன கொடுத்திருக்கிறதென்றால், எந்த ஒரு படைப்பையும் படிக்கத் துவங்கி சில பக்கங்களுக்குள்ளேயே, அது இந்த புத்தகத்தை தொடர்ந்து படி அல்லது நிறுத்து என்று இனம் காட்டி விடுகிறது.

வி: இன்னும் நிறைய செய்யத் துண்டிக்கிட்டே இருக்கு போல, அந்த வாசிப்பு பூதம்.. அதெல்லாம் என்னன்னு சொல்லுங்க ஐயா?

வே: எங்கள் பதிப்பகத்தின் மாடியிலேயே “ரோஜா முத்தையா அரங்கம்” அப்படீன்னு ஒரு அரங்கம் ஒன்றை அமைத்திருக்கிறோம்.எல்லா எழுத்தாளர்களின் புகைப்படங்களை அங்கே வைத்திருக்கிறோம். அந்த அரங்கத்தில் தான் கி.ரா. அவர்களின் படம் செப்டம்பர் 16 தேதி ஒரு வாசகர் கைகளால் திறந்து வைக்கப்படுகிறது.

வி: கோணங்கி இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பாராட்டுக்கள் வந்ததா, எதிர்ப்புக்கள் வந்ததா?

வே: எதிர்ப்புக்கள் எதுவுமில்லை, பாராட்டுக்கள் தான். ஒரு முறை நானும் நாஞ்சில் நாடன் அவர்களும் கி.ரா அவர்களை சந்தித்து விட்டு வரும்போது எனக்கு ஒரு யோசனை, நாஞ்சிலிடம் சொன்னேன். கி.ரா இருக்கும்போதே அவர் பெயரில் ஒரு விருது கொடுக்கவேண்டும், அந்த விருதினை அவர் கையால் கொடுக்க வைக்கவேண்டும். பின்னர் காலமெல்லாம் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று யோசனை வந்தது. அடுத்த வினாடியே நாடிகள் சிவகுமாரை அழைத்து விஷயத்தை சொல்லி, மற்றொரு நன்கொடையாளரை ஏற்பாடு செய்து தருமாறு கேட்டேன். அவர் உடனே எனக்கு ஒரு அரை மணிநேரம் தாருங்கள் என்று சொல்லி, போனை வைத்தார். அடுத்த அரைமணியில் என்னை அழைத்து சக்தி மசாலா நிறுவனம் இந்த பரிசினை வழங்கும் என்றார்.

வி: சிவகுமார் அவர்களை இதில் ஈடுபடுத்தவேண்டும் என்று உங்களுக்கு எப்படி தோன்றியது? சிவகுமாருடனான உங்கள் நட்பை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்..

வே: அனந்த விகடனில் ஜெ.வி. நாதன் இருக்கும்போது, சக்தி வை.கோவிந்தன் அவர்களுக்காக நான் நிதி வசூல் செய்து கொடுத்தேன். விகடனுக்கு கடிதம் ஒன்றும் எழுதினேன். உடனே ஆசிரியர் ஸ்ரீநிவாசன், ஜெ.வி. நாதனை அழைத்து விஜயா பதிப்பகம் பற்றியும், சக்தி வை. கோவிந்தன் பற்றியும் விசாரிக்க சொல்லி இருக்கிறார். நான் அவரிடம் சக்தி வை. கோவிந்தன் பற்றி விளக்கினேன்... அவர்தான் பாரதியார் கவிதைகளை, ஒரு ரூபாய், ஐம்பது காசுகளுக்கு அச்சிட்டு விற்பனை செய்தவர். இந்தியன் எக்ஸ்பிரஸ் கோயங்கா அவர்களிடம் சொல்லி ராமாயணம், மகாபாரதம் இரண்டையும் லட்சக்கணக்கான பிரதிகள் அச்சிட்டு விநியோகம் செய்தவர். அவருடைய பதிப்பகத்திற்கு காமராஜர் வருவார், ராஜாஜி வருவார். அவர் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனெரலான பிறகு பதிப்பகத்திற்கு வந்தபோது போலீஸ், மற்ற அதிகாரிகள் வருகையை பார்த்து கோவிந்தன் பயந்து அவருக்கு என்ன தருவது என்று ஒரு வித தயக்கத்தோடு இருந்தபோது... ராஜாஜி, ‘கோவிந்தா உனக்கும் உன் புத்தகங்களுக்கும் நான் கவர்னர் ஜெனெரல் கிடையாது. சாதாரண ராஜகோபாலாச்சாரி தான்’ என்றார். இதையெல்லாம் நான் அவரிடம் சொன்னேன். இதையெல்லாம் விகடனில் பதிவு செய்த ஜெ.வி.நாதன், முடிவாக ஒரு வார்த்தையை சேர்த்திருந்தார். இப்படிப்பட்ட பதிப்பாளரின் குடும்பம் வறுமையில் கஷ்டப்படுவது ஒவ்வொரு தமிழனுக்கும் அவமானம் என்று. சிவகுமார் அதைப் படித்துவிட்டு, எனக்கு போன் செய்தார். நான் என்ன செய்யவேண்டும்? என்று கேட்டார்.

“நீங்க என்ன செய்தலும் எனக்கு மகிழ்ச்சிதான்”. அதற்கு சிவகுமார்... “நீங்க வசூல் பண்ணி கொடுக்கறது கொடுங்க, நான் அந்த குடும்பத்திற்கு மாதம் ஆயிரம் ரூபாய் மணி ஆர்டர் செய்துவிடுகிறேன்” என்றார். இதை அவர் செய்ய துவங்கும் போது வை. கோவிந்தன் அவர்களின் பேத்தி எட்டாவது படித்துக் கொண்டிருந்தாள், இப்போது MSc., படித்துக் கொண்டிருக்கிறாள். இந்த ஜூன் மாதம் வரையில் பணம் போய்க் கொண்டிருக்கிறது. தீபாவளி, பொங்கல் சமயங்களில் இன்னொரு ஆயிரம் சேர்த்து 2000 ரூபாய் அனுப்பிவிடுவார். படிப்புக்கெல்லாம் பள்ளி, கல்லூரிக்கே நேராக பணத்தை அனுப்பிவிடுவார். இதுவரை யாருக்கும் தெரியாது இது. என்னையும் எங்கேயும் சொல்லாதீர்கள் என்பார். கி.ரா. விருதுக்கு ஏற்பாடு பண்ணிக் கொடுத்ததைக்கூட சொல்லவேண்டாம் என்று தடுத்துவிட்டார். என் பெயர் எங்கேயும் வெளியில் தெரியவேண்டாம் என்று தான் சொல்வார். உன்னதமான மனிதர்கள் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

நான் கேட்கும் உதவியை செய்யும் நண்பர்களை. உன்னதமான மனிதர்களை இறைவன் வரமாய் அளித்திருக்கிறான்,

வி: என்ன ஐயா, நீங்க உங்களுக்காகவா கேட்கறீங்க, ஒரு எழுத்தாளருக்கும், அவர் குடும்பத்துக்காகவும் தானே கேக்கறீங்க?

வே: இருந்தாலும் “உதவி எல்லாருக்கும் கேக்காமலே செய்யவேண்டும், நான் யாரிடமும் உதவி கேட்கக்கூடாது” என்ற கொள்கை உடையவன் நான்.

வி: நல்லா புரியுது ஐயா, நீங்கள் இந்த நேர்காணலின் துவக்கத்தில் சொன்னது போல, ‘பாரதி’ படத்தில் முதல் காட்சி அதை மிகச்சரியாக பதிவு செய்திருக்கும். எனக்கு அந்த நினைவு தான் வந்தது.

வே: உண்மைதான். இன்னொரு விஷயம்.. பாரதி படத்திற்கு வித்திட்டது நம்ம விஜயா பதிப்பகத்தில் தான். ஞானராஜசேகரன் அதை ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார். அதில் எங்களுக்கு சந்தோசம் தான். பாலுமஹேந்திரா போன்ற பல ஆளுமைகள் விஜயா பதிப்பகத்திற்கு வந்திருக்கிறார்கள். இன்னொன்றும் சொல்கிறேன்.. நீங்கள் வேலாயுதம், விஜயா பதிப்பகம், கோவை என்று எழுதினாலே அந்தக் கடிதம் என்னிடம் வந்து சேர்ந்து விடும். நான் விற்பது புத்தகம் தான். ஆனாலும், வாசகர்கள் அந்தப் பெருமையை எனக்குத் தந்திருக்கிறார்கள்.

வி: விஜயா பதிப்பகம் துவங்கி எவ்வளவு நாட்கள் ஆகியிருக்கிறது? உங்கள் பதிப்பகம் பற்றி சொல்லுங்கள்....

வே: துவங்கி 44 வருடங்கள் ஆகிறது. அக்டொபர் மாதம் 1977 ல் துவங்கினோம். பல்லாயிரக்கணக்கான வாசகர்களை உருவாக்கி இருக்கிறோம். கோவை மக்களை வாசிப்புக்கு வசப்படுத்தி இருக்கிறோம். நான் யாரையும், ஏன் பள்ளிகளையோ, கல்லூரிகளையோ புத்தகம் வாங்குங்கள் என்று கெஞ்சியது கிடையாது. நான் சாதாரண மனிதன் தான், ஆனால் நான் வைத்திருக்கும் ஆயுதம் மிக சக்தி வாய்ந்தது. இதை வைத்துக்கொண்டு கெஞ்சினால், அந்த ஆயுதத்திற்குத்தான் இழுக்கு. வாங்கவில்லை என்றால், இழப்பு உங்களுக்கே என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எத்தனையோ வாசகர்களுக்கு கல்யாண்ஜியை அறிமுகப்படுத்தினேன், பா. சிங்காரத்தை அறிமுகப் படுத்தினேன். ஒருவருக்கு தி.ஜெவை அறிமுகப்படுத்தி இருக்கிறேன். இங்கே தி.ஜா, அரங்கநாதன், எம் வி வி வந்திருக்கிறார்கள். அப்போது நான் அவர்களின் அருமையை முழுமையாக உணர்ந்து கொள்ளவில்லை. இப்போது வயது முதிர்ச்சியின் காரணமாக எல்லாவற்றையும் அதன் அருமையோடு உணர்ந்து கொள்ள முடிகிறது.

“பெருமாள் முருகன்” பற்றிய ஒரு புத்தகம் “எங்கள் ஐயா” என்று அவரின் 42 மாணவர்கள் எழுதிய புத்தகம். படித்தால், உங்கள் கண்ணில் கண்ணீர் வந்துவிடும். நான் அதை அதிக பிரதிகளுக்கு மேல் விற்றிருக்கிறேன். அதை படித்தால், இப்படிப்பட்ட ஒருவரையா இந்த பாடுபடுத்தினார்கள் என்று தோன்றும்.

எனக்கு ரோட்டரி கிளப் சார்பாக “வாழ்நாள் சாதனையாளர் விருது தந்தபோது, ஒரே ஒரு விஷயம் தான் சொன்னேன். மா. அரங்கநாதன் அவர்களுடைய சிறுகதை ஒன்றில் கதாநாயகன் முத்துக்கருப்பன், கிராமத்தில் ஓட்டப்பந்தயத்தில் நன்றாக ஓடியதால் அவனுக்கு பயிற்சி கொடுத்து மாவட்ட, மாநில, தேசிய அளவில் பயிற்சி கொடுத்து, அங்கெல்லாம் ஜெயித்து ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு ஜெயிக்கிறான். பேட்டியெடுக்க எல்லோரும் சுற்றி நின்று, கேமராக்கள் அவனையே படமெடுக்கும். அவன் என்ன சொல்லப் போகிறான் என்று எல்லோரும் ஆவலாக இருக்கும்போது... “எனக்கு ஓடுவது பிடிக்கும், எனக்கு ஓடுவது பிடிக்கும், எனக்கு ஓடுவது பிடிக்கும்” என்று மூன்றுமுறை சொல்லிவிட்டு சென்று விடுகிறான். அதேபோல் தான் நீங்கள் சொன்ன பாராட்டுக்கள் எதுவும் எனக்கல்ல... எனக்கு புத்தகம் பிடிக்கும், புத்தகம் பிடிக்கும், புத்தகம் பிடிக்கும்” அவ்வளவு தான்.. என்று சொன்னேன். அது தான் உண்மையும் கூட.

வி: அற்புதமான பதில் ஐயா. இந்தக் கேள்வியை யாராவது உங்களிடம் கேட்டிருப்பார்களா என்று தெரியவில்லை, உங்களுக்கு அடுத்து இதை எடுத்து செல்லப்போவது யார் என்று முடிவு செய்து இருக்கிறீர்களா ஐயா?

வே: நிச்சயமாக, எனது இரண்டாவது மகன் சிதம்பரம், இதில் மிகுந்த ஈடுபாட்டோடு வேளை செய்துகொண்டு இருக்கிறார். எனது மருமகளும் இதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர் தான்.

முடிவாக சில விஷயங்கள் சொல்ல விரும்புகிறேன். ஜெயகாந்தன் விருதுக்காக ஒரு லட்சம் ரூபாய் அவருடைய தீவிர விசிறியும் உதவியாளருமான கே.எஸ். தான் தருவதாக சொன்னார். மற்றொரு தீவிர ரசிகரான கிருஷ்ணகுமார் அவர்கள், அதனை வற்புறுத்தி தான் தருவதாக ஏற்றுக்கொண்டார். கே எஸ்ஸின் இந்த மனசுக்காக அவரை புதுமைப்பித்தன் விருது ரூபாய் 25000 அவரை தரச்சொன்னேன். அவரும் சந்தோஷமாக தந்து கொண்டிருந்தார். அவரின் மறைவுக்கு பிறகு புதுமைப்பித்தன் விருதுக்கு சென்னை சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் தி.கே. சந்திரன் அந்த விருதுக்கு பிரவலாராக இருக்கிறார். கே.எஸ். மொழிபெயர்ப்பில் மிகச் சிறந்தவர், அதனால் தொற்று முடிந்த பிறகு அடுத்து கே.எஸ். அவர்களின் பெயரில் மொழிபெயர்ப்பு நூலுக்கான விருது விஜயா வாசகர் வட்டம் சார்பாக அறிவிக்க இருக்கிறோம்.

அதேபோல ஏன் மனதிற்கு பிடித்த இலக்கியவாதிகள் பற்றி சொல்லி இருக்கிறேன். வானதி பதிப்பகம் அதனை புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார்கள். “இதயம் தொட்ட இலக்கியவாதிகள்” என்ற அந்த புத்தகத்தில் சுஜாதா, அரங்கநாதன் என எல்லாரையும் பற்றி சொல்லி இருக்கிறேன்.

20210817161521721.jpg

அதேபோல பாரதியார் தன்னுடைய புதுச்சேரி வாழ்க்கையின் போது “விஜயா” என்னும் பத்திரிக்கையை நடத்தி வந்தார். அதிலிருந்து தான் நான் இந்த பதிப்பகத்திற்கு “விஜயா பதிப்பகம்” என்று பெயர் வைத்தேன். என் பெண்ணுக்கும் விஜயா என்று பெயர் வைத்தேன். விஜயா பதிப்பகம் இன்று இவ்வாறு வளர்ந்து நிற்பதற்கு பாரதியும் ஒரு காரணம்.

இன்னும் எழுத்தாளர்களுக்கும், புத்தகங்களுக்கும் நிறைய செய்யவேண்டும் என்று எனக்கு ஆசை உண்டு. வாசகர்களும் இறைவனும் அதற்கு கருணை செய்யவேண்டும்.

நன்றி சொல்லி விடைபெறுகிறோம்.