தொடர்கள்
கவர் ஸ்டோரி
விநாயகர் - விநாயகி ஆன்மீக தகவல் கட்டுரை - ஆரூர் சுந்தரசேகர்.

20210808173215610.jpeg

இந்து மதத்தில் பல்வேறு தெய்வங்கள் உள்ளன. அவர்களின் முதலில் வணங்கக் கூடிய முதல் பொருள் கடவுளாக விளங்குபவர் விநாயக பெருமான். அவருக்கு விநாயகர், கணபதி, யானைமுகம் கொண்டவர் என பல பெயர்கள் உள்ளன. அதோடு அவருக்கு எண்ணிலடங்கா பல பெயர்களும் உள்ளன. ஒவ்வொரு பெயருக்குள்ளும் தெய்வீக மனம் வீசும் பல அர்த்தங்கள் புதைந்துள்ளன.

விநாயகப் பெருமானின் திருவுருவச் சிலைகளுக்கு ஒரு தனிச் சிறப்புகள் உண்டு.

“வி” என்றால் “இதற்கு மேல் இல்லை” எனப் பொருள். நாயகர் என்றால் தலைவர் எனப் பொருள். இவருக்கு மேல் பெரியவர் யாருமில்லை என்று பொருள்பட விநாயகர் என்று பெயரிடப்பட்டது. விநாயகருக்கு அர்ச்சிக்கும் போது , “ஓம் அநீஸ்வராய நம” என்பர். “அநீஸ்வராய” என்றால் தனக்கு மேல் ஒரு ஈஸ்வரனே இல்லை என்று பொருள்.
கணபதி என்பதில் “க” என்பது ஞான நெறியில் ஆன்மா எழுவதையும், “ண” என்பது மோட்சம் பெறுவதையும், “பதி” என்பது ஞான நெறியில் திகழ்ந்து பரம்பொருளை அடைதல் என்பதையும் குறிக்கும்.

விநாயக வடிவ விளக்கம்:

யானைத்தலை, கழுத்துக்குக் கீழே மனித உடல், மிகப் பெரிய வயிறு, இடது பக்கம் நீண்ட தந்தம், வலது பக்கம் சிறிய தந்தம் ஆகியவை உள்ளன. நீண்ட தந்தம் ஆண் தன்மையையும், சிறிய தந்தம் பெண் தன்மையையும் குறிக்கும். அதாவது ஆண், பெண் ஜீவராசிகள் அவருள் அடக்கம். யானை அக்ரிணைப் பொருள், மனிதர் உயர்திணை. ஆக, அக்ரிணை, உயர்திணை அனைத்தும் கலந்தவர். பெரும் வயிறைக் கொண்டதால் பூதர்களை உள்ளடக்கியவர். அவரே அனைத்தும் என்பதே இந்த தத்துவம்.

பெண் வடிவில் விநாயகர்:

20210808172426667.jpeg


ஆதிமுதல்வனான விநாயகப் பெருமானுக்குப் பல வடிவங்கள் உள்ளன. ‘வேத காலம்’ என்று கூறப்படும் தொன்மையான காலகட்டத்திற்கும் முன்பிருந்தே விநாயகர் வழிபாடு உலகின் பலபகுதிகளிலும் இருந்து வந்ததை சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். “விநாயகப் புராணம்” விநாயகர் அவதாரத்தை யுகத்திற்கொன்றாக நான்கு அவதாரமாகக் கூறுகின்றது. ஒவ்வொரு யுகத்திலும், விநாயகர் பல வடிவங்கள் தாங்கி அருள்புரிந்திருக்கிறார். அந்த வகையில், தான் ஏற்ற பெண் வடிவத்தால் அவர் விநாயகி என்றே அழைக்கப்பட்டார். இந்த விநாயகிக்கு, வட நாட்டில் தனிக்கோயில்கள் உள்ளன. தமிழகத்திலும் சில கோயில்களில், கோயில் மண்டபத்தூண்களில், பெண் உருவில் காட்சி தரும் விநாயகரைக் காணலாம்.

பவானியில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் வீணை மீட்டும் விநாயகியைக் கண்டு தரிசனம் செய்யலாம்.

20210808172341541.jpeg

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயன் கோவிலில் ஒரு தூணில் விநாயகியின் சிற்பம் காணப்படுகிறது. விநாயகி அமர்ந்த கோலத்தில் வலக்காலை மடித்து இடக்காலை தொங்கவிட்ட நிலையில் காணப்படுகிறது.

நாகர்கோவில் அருகே உள்ள வடிவீஸ்வரத்தில் உள்ள அழகம்மன் திருக்கோவிலில் வீணை வாசிக்கும் புலிக்கால்களைக் கொண்ட வியாக்ரபாத விநாயகியை தரிசிக்கலாம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கணேசினியின் உருவம் கோவில் தூணில் காணப்படுகிறது. இவர் விநாயகத்தாரணி எனப் படுகிறார். இவருடைய பாதம் புலியின் கால்களை போல இருப்பதால் வியாக்ர பாத விநாயகி எனவும் அழைப்பார்கள்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சிவாலயத்தில் உள்ள தூணிலும் பெண் உருவ விநாயகர் சிற்பம் உள்ளது.

ஆத்யேந்தய பிரபு:

விநாயகரும், ஆஞ்சநேயரும் இணைந்த வடிவ வழிபாடு சில ஆண்டுகளாகப் பிரசித்தி பெற்று வருகிறது. இவரை ஆத்யேந்தய பிரபு (அர்த்தநாதீஸ்வரர்) என அழைக்கப்படுகின்றார். ஒருபுறம் விநாயகரின் தும்பிக்கையும், மறுபுறம் ஹனுமனின் முகமும் கொண்டு இந்தச் சிலை வடிக்கப்படுகிறது. பிரம்மச்சரிய விரதம் மேற்கொள்ள விரும்புகிறவர்கள் இந்த பிரம்மச்சாரிகளை வணங்க வேண்டும். ஆஞ்சநேயர் சிவனின் அம்சமானவர். சிவனே ஹனுமனாக வடிவெடுத்து ராம பிரானுக்கு உதவியதாகவும் கூறுவார்கள். விநாயகரோ சக்தியிலிருந்து (பார்வதி) உருவானவர். எந்த ஒரு செயலையும் விநாயகரை வணங்கிய பிறகுதான் துவங்குகிறோம். அச்செயல் நிறைவு பெறும் போது ஆஞ்சநேயரை வணங்கிவிட்டு முடிக்க வேண்டும். இதன் அடிப்படையில், சென்னை தரமணி அருகிலுள்ள மத்தியக் கைலாஷ் கோயிலில், ஆத்யேந்தய பிரபு சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.

பஞ்சமுக கணபதி:

ஐந்து யானைத் தலைகளுடன் கூடிய விநாயகரை பஞ்சமுக கணபதி என்பர். பஞ்ச பூதங்களான நிலம், காற்று, நீர், நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐந்துக்கும் இவரே அதிபதி. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களையும் இவரே செய்கிறார். முக்கல புராணம் என்ற நூலில் இது குறித்துச் சொல்லப்பட்டுள்ளது.

கன்னி விநாயகர்:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ளது முக்கூட்டு மலை. மூன்று மலைகள் இணையும் இந்த இடத்தின் அடிவாரத்தில் கன்னி விநாயகர் கோயில் கொண்டுள்ளார். கன்னிப் பெண்களை பாதுக்காப்பவராக இவர் அருள் புரிகிறார். பூலோகத்திற்கு சப்த கன்னிகளுடன் வந்த சிவன் இங்கு அமர்ந்து ஓய்வெடுத்துள்ளார். இந்த இடத்தின் அழகில் மயங்கிய சப்த கன்னிகள், தாங்கள் இங்கேயே தங்கிக் கொள்வதாக சிவனிடம் வேண்டினர். ஒப்புக் கொண்ட சிவன், அவர்களுக்கு பாதுகாவலராக விநாயகரை நியமித்து நந்தியையும் பாதுகாப்பாக விட்டுச் சென்றாராம். இதனால், இங்குள்ள விநாயகருக்கு மூஞ்சூறு வாகனம் இல்லாமல், நந்தி வாகனத்துடன் காட்சி தருவது சிறப்பு. விநாயகர் சன்னதிக்கு அருகிலுள்ள ஏழு கோடுகளை சப்த கன்னியராக வழிபடுகிறார்கள்.

எந்த ஒருசெயல் துவங்கினாலும், விக்கினங்கள் - தடைகள் இன்றி செவ்வனே நடைபெற விநாயகரை வணங்குவோம்!!