தொடர்கள்
ஆன்மீகம்
பிள்ளையார்பட்டியில் பிள்ளையார் சதுர்த்தி!! - சுந்தர மைந்தன்.

20210806235231684.jpeg

பிள்ளையார்பட்டி பிள்ளையார் கோயில் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர்- குன்றக்குடிச்சாலையில், திருப்பத்தூரில் இருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் சிறிய மலையின் அடிவாரத்தில் கோவில் மலையைக் குடைந்து அமைக்கப்பெற்றது. இங்கு கற்பகப் பிள்ளையாரின் திருவுருவம், சுமார் இரண்டு மீட்டர் உயரமுள்ளது.

பிள்ளையார் சதுர்த்தி திருவிழா:

பிள்ளையார்பட்டியில் ஒவ்வொரு சதுர்த்தியின்போதும், இரவு நேரத்தில் விநாயகர் மூஷிக வாகனத்தில் எழுந்தருளி கோயில் உட்பிரகாரத்தில் வலம் வருவார்.

20210806235602990.jpeg

ஆவணி மாதத்தில் நடைபெறும் பிள்ளையார் சதுா்த்தி விழாவே இங்கு நடைபெறும் பிரதான திருவிழா ஆகும். ஒவ்வொரு ஆண்டும் பிள்ளையார் சதுா்த்தி விழா, மிகுந்த கோலாகலத்துடன் பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறும். பிள்ளையார் சதுர்த்திக்கு ஒன்பது நாட்கள் முன்பாக காப்புக் கட்டி, கொடியேற்றம் செய்து திருவிழா தொடங்குகிறது.

முதல் நாள் காலையில் கொடிமரத்திற்கு தர்பை புல், மாவிலை, பூமாலைகள் மற்றும் பட்டு வஸ்திரம் கட்டப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறும். பின்னர் அங்குச தேவருக்கு பல்வேறு திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் நடக்கும். தொடர்ந்து மூலவர் சந்நிதி முன்பு உள்ள கொடிமரத்துக்கு மூஷிக வாகனம் படம் வரையப்பட்ட வஸ்திரத்தினால் ஆன கொடி, மேள தாளங்கள் முழங்க கொடி ஏற்றப்படும். பின்பு உற்சவ விநாயக பெருமானுக்கும், சண்டீகேஸ்வரருக்கும் தீபாராதனை காட்டிய பிறகு, மங்கள வாத்தியங்கள் முழங்க கொடிமரத்திற்கு அலங்கார தீபம், நாக தீபம், கும்ப தீபம் மற்றும் பஞ்சமுக கற்பூர ஆராதனை காட்டப்படும்.

20210806235854944.jpeg

பத்து நாட்கள் பிள்ளையார் சதுா்த்தி திருவிழா:

பிள்ளையார் சதுர்த்தி திருவிழாவில் தினசரியும் காலையில் வெள்ளி கேடகத்திலும், இரவு... சிம்மம், பூதம், கமலம், ரிஷபம், மயில், குதிரை உள்ளிட்ட பல வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதி உலா வருவார்.

கஜமுக சம்ஹாரம்:

ஆறாம் திருநாளன்று மாலை, கோவில் முன்புறம் கஜமுக சூரசம்ஹாரம் நடைபெறும். விநாயகரை போருக்கு அழைத்த கஜமுகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.

தேர்த்திருவிழா:

2021080623581833.jpeg

ஒன்பதாம் நாள்.... தேர்த்திருவிழா மிக விமரிசையாக நடைபெறும். காலையில் உற்சவர் திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சியில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரோட்டத்தில் வடம் பிடித்து இழுப்பார்கள். அன்றிரவு யானை வாகனத்தில் எழுந்தருளி உற்சவர் வீதிஉலா வருவார்.

பத்தாம் நாள்... விநாயகர் சதுர்த்தி தினத்தன்று காலையில் குளக்கரையில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். பின், மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இதை தொடர்ந்து 16 படி அரிசியில் மெகா கொழுக்கட்டை நைவேத்தியம் செய்து பின் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதைத் தொடர்ந்து,,,, இரவு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று இனிதே முடிவுறும்.

விநாயகர் சதுர்த்தியன்று பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை வழிபட்டு நற்பலன்களை பெறுவோம்!!