தொடர்கள்
ஆன்மீகம்
முக்குறுணி விநாயகருக்கு, 18 படி அரிசியில் பிரம்மாண்டமான கொழுக்கட்டை!! - ஆரூர் சுந்தரசேகர்.

20210806170434101.jpeg

“பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா.....” - ஒளவையார்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏராளமான விநாயகர் விக்ரஹங்கள், பல பெயர்களில் இருந்தாலும்... இவர்களில் முக்கியமானவர், முக்குறுணி விநாயகர். மீனாட்சி அம்மன் சன்னிதியில் இருந்து சொக்கநாதராகிய சுந்தரேஸ்வரரை தரிசிக்கச் செல்லும் வழியில், தெற்குப் பார்த்த வண்ணம் எட்டடி உயரத்தில் நான்கு திருக்கரங்களோடு அமர்ந்த கோலத்தில் பிரமாண்டமாகக் காணப்படுகிறார்.

இவரே இக்கோவிலில் உருவத்தால் பெரியவர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருபவர்கள் இந்த பிரம்மாண்டமான முக்குறுணி விநாயகரைக் கண்டு தரிச்சிக்காமல் போக மாட்டார்கள்.
கி.பி. 17-ம் நூற்றாண்டில் திருமலை நாயக்கர், தனது மாபெரும் அரண்மனை (மஹால்) கட்டுவதற்காக வண்டியூரில் மண் எடுக்க தோண்டியபோது பூமிக்கு அடியில் 8 அடி உயரத்தில் 4 கரங்களுடன் அமர்ந்த நிலையில் பிரமாண்டமான விநாயகர் உருவ சிலை மண்ணில் புதைந்து கிடந்தது. அதனை எடுத்து திருமலை நாயக்கர் மீனாட்சி அம்மன் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்ததாகவும் வரலாறு கூறுகிறது. அப்போது தோண்டியபோது ஏற்பட்ட பள்ளத்தையே, நாயக்க மன்னர் திருக்குளமாக அமைத்தார். இப்போது இக்குளம் ‘மாரியம்மன் தெப்பக்குளம்’ என்றே பிரசித்திப் பெற்றிருக்கிறது.

விநாயகர் சதுர்த்தி விழா:

20210806170814972.jpeg

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப் படுகின்றது. விநாயகர் சதுர்த்தியன்று, விநாயகருக்கு வெள்ளியால் ஆன கிரீடம், அங்கி, மற்றும் கவசம் சாற்றப்படும். அதிகாலையிலேயே பூஜை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக விபூதி, வெண்பொங்கல், கொழுக்கட்டை கொடுப்பார்கள்.

அன்று பகல், உச்சி கால பூஜையின்போது சுமார் 11 மணி அளவில் பச்சரிசியில் வெல்லம், தேங்காய், கடலை, எள், ஏலக்காய், நெய் கலந்து தயாரான ஒரு பிரம்மாண்டமான கொழுக்கட்டையை நான்கு சிவாச்சாரியார்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க மூங்கில் கம்பில் கட்டி எடுத்து வந்து பிள்ளையாருக்கு முன் வைத்து சிறப்பு பூஜை செய்து, அதனை நைவேத்தியம் செய்வார்கள். பிறகு அந்த நைவேத்திய கொழுக்கட்டையை பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குவார்கள்.

முக்குறுணி விநாயகர் பெயர் வரக் காரணம்:
20210806170958103.jpeg
இந்த விநாயகருக்கு முக்குறுணி அரிசியில், ஒரே மோதகமாக மிகப் பெரிய உருண்டை வடிவாக வேகவைத்து பிரம்மாண்டமான கொழுக்கட்டை தயாரித்து, நைவேத்தியம் செய்யப்படுவதால் (அந்தக் காலத்தில் நான்குபடி தானியம் கொள்ளளவு உள்ள அளக்கும் படிக்கு பெயர் மரக்கா என்றும், ஆறுபடி கொண்ட அளவையின் பெயர் குறுணி என்றும் கூறுவார்கள், ஒரு குறுணி ஆறு படி என்றால் முக்குறுணி என்றால் 18 படி ஆகும்) இவர் முக்குறுணி விநாயகர் என அழைக்கப்பட்டு வருகிறார்.

விநாயகர் சதுர்த்தியில் முக்குறுணி விநாயகரிடம் நாம் செய்யும் செயல், தடையில்லாமல் வெற்றி பெற மனதார வேண்டிக்கொள்வோம்.