தொடர்கள்
பொது
டெஸ்லா கார் இந்தியாவில் ஜெயிக்குமா...? - ராம்

2021063000042247.jpeg

சின்ன வயதில் பள்ளியில் படிக்கும் போது சுஜாதாவின்விஞ்ஞானக் கட்டுரைகளில் சொன்னது நினைவுக்குவருகிறது. 2020ல் திரவ எரிபொருள் தீர்ந்து போகும்.

உலகம் மாற்று எரிபொருளை தேடும் நேரம் வந்து விட்டது என்று எழுதியிருந்தார்.

ஒரு முறை அமெரிக்காவுக்கு சென்றிருந்த போது, என் மாமா பையன் அந்த காரைப் பாத்தியா 70 ஆயிரம் டாலர். பெட்ரோலே போட வேண்டாம். எல்லாம் எலக்டிரிக் என்ற போது சுண்டியிழுத்தது. அது டெஸ்லா எஸ் மாடல்.

சில வருடங்களுக்கு முன் ஹாங்காங்கில் டெஸ்லா கார் அறிமுகப்படுத்தப்பட்ட போது அதை புதிய தலைமுறை தொலைக்காட்சிக்காக செய்தி பண்ணினோம்.

(அதை செய்திவாசிப்பாளர் டெஸ்டிலா என்று படித்ததை நல்ல வேளையாக எலான் மஸ்க் கேட்டிருக்க வாய்ப்பில்லை. கேஸ் போட்டிருப்பார்.. மனிதர்)

ஹாங்காங்கில் பழைய பெட்ரோல் கார்களை கொடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக மின்சார கார்களை சலுகை விலையில் வாங்கிக் கொள்ளலாம் என்ற திட்டம் வந்தவுடன், பழைய டொயோட்டா பெரிய வண்டியை கொடுத்துவிட்டு, மாடல் 3 டெஸ்லா வாங்குவதற்கு முதலில் மனமில்லைதான். ஆனால் ஒரு முறை டெஸ்லாவை ஒட்டத் துவங்கியதும் தான் தெரிந்தது, இனி எதிர்காலம் பெட்ரோல் கார்களுக்கு இல்லை என்பது.

இந்தியாவில் டெஸ்லா வரும் டிசம்பர் முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது என்பது நல்ல செய்தி. ஆனால், அது இந்தியாவுக்கு வேலைக்கு ஆகுமா இல்லையா என்பதுதான் கேள்வி!!

டெஸ்லா கார்களைப் பற்றி படம் வரைந்து பாகங்களை குறித்து பார்த்து விடுவோம்.

டெஸ்லாவில் எஸ், ஈ, எக்ஸ், ஒய் (S, E, X,Y) என்று நான்கு மாடல்கள் விடுவதாகத் தான் எலான் மஸ்க்குக்கு திட்டம். இதில் E என்பது பென்ஸ் காரின் உரிமை என்பதால் அதை 3 என்று மாற்றி விட்டார்கள்.

இப்படியாக நான்கு மாடல்களில் ஒவ்வொரு மாடல்களிலும் சில பல உப மாடல்கள் உண்டு.

20210630000701634.jpeg

இது போக... சைபர் டிரக் என்ற சரக்கு ஏற்றிச் செல்லும் மாடலும் இருக்கிறது. அதைப் பற்றி இங்கே பேசப்போவதில்லை.

இந்தியாவில் விற்கப் போகும் டெஸ்லாவின் விலை தோராயமாக கீழே.

20210630001014426.jpeg

மாடல் எக்ஸ். 2 கோடி

20210630001043564.jpeg

மாடல் எஸ் 1.5 கோடி

20210630001137913.jpeg

மாடல் 3 60 லட்சம்

20210630001204559.jpeg

மாடல் ஒய் 50 லட்சம்.

விலை உசந்த மாடல் எக்ஸ் எஸ்.யூ.வி. வகை.

மாடல் எக்ஸ் கந்தசாமி படத்தில் வரும் விக்ரம் உபயோகித்தது போல, கதவுகள் பக்கவாட்டில் திறக்கும்.

மாடல் எஸ். ஸெடான் வகை. ஆனாலும் கொஞ்சம் நீளம் அதிகம். சொகுசான கார் தான். சக்தி அதிகம்.

மிடில்கிளாஸ் (?) மாதவன்களுக்கான கார்கள் மாடல் 3 மற்றும் Y

இதில் ஒய் கொஞ்சம் உயரம் அதிகம். மற்றபடி எல்லா டெஸ்லாக்களுமே சக்கரம் வைத்த கம்ப்யூட்டர்கள் தான்.

ஒய், 3 வை விட ஏழு இஞ்சு உயரம் அதிகம். கொஞ்சூண்டு சக்தி குறைவு. அதனால் தானோ என்னவோ கொஞ்சம் விலை குறைவாக இருக்கிறது. மேலும் ஒய், இந்தியாவிற்கு 2023ல் தான் வரும் என்று சொல்கிறார்கள்.

இப்படி பல மாடல்கள் இருந்தாலும், ஆதார வசதிகள்எல்லாவற்றிலும் ஒன்றுதான்.

கண் முன்னே தொடுதிரை. அதில் காரின் அத்தனை சூட்சுமங்களும் ஆட்டோமேடிக்காக செல்லும் வகை. ஆட்டோமேடிக்காக பார்க்கிங் செய்வது, க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற சமாச்சாரங்கள் எல்லா மாடலுக்கும் பொது.

அது சரி பாட்டரி கார்களில் என்ன பிரச்சினை? பாட்டரிதான் என்பதை பல முறை பல இடங்களில் எழுதி விட்டதாக நினைவு. அடிக்கடி சார்ஜ் போட்டுக் கொள்ள வேண்டும்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 580 கி.மீ. ஓடும் என்று டெஸ்லாகாரன் சொல்வதை சூடம் அணைத்து சத்தியம் செய்து, அதைப் பொய் என்று என்னால் நிரூபிக்க முடியும்.

ஏ.சி. போட்டால், வேகமாக போனால், நிறைய பேர் ஏறினால் (அதிலும் நம்மூரில் தொப்பைகள் அதிகம்) அடிக்கடி பிரேக் போட்டால்... பாட்டரியின் உபயோகம் அதிகரிக்கும் கி.மீ. அளவு குறையும் என்பது டெஸ்லாவின் சப்பைக் கட்டு. இதெல்லாம் செய்யாமல் என்னத்துக்கு கார் வாங்கணும் என்று கோவித்துக் கொண்டு பிரயோஜனம் இல்லை.

அமெரிக்கா போன்ற நாடுகளில், மூலைக்கு மூலை சூப்பர் சார்ஜர்கள் டெஸ்லா கம்பெனியே வைத்துள்ளது. அதாவது ஒரு முழுக் காரை 45 நிமிடங்களில் மொத்தமாக சார்ஜ் செய்து கொண்டு விடலாம்.

அதுவே டெஸ்லாவின் ஸ்லோ சார்ஜர் இருக்கிறது. அதில் சார்ஜ் செய்து கொள்ள 6 மணி நேரம் வரை கூட ஆகும்.

இதிலுமே பல நிறுவனங்கள்... நான், நீ என்று போட்டிபோட்டுக் கொண்டு சார்ஜ் செய்யும் வசதியை கொடுக்க முன் வருகின்றன. ஆனால், யாருமே டெஸ்லாவின் சூப்பர் சார்ஜருக்கு கிட்டக்கவே வர முடியவில்லை. சூப்பர் சார்ஜுக்கு டெஸ்லா கட்டணம் வசூலிக்கிறது. ஆனால் டெஸ்லாவின் மெதுவான சார்ஜ் பல இடங்களில் இலவசம்.

சரி இந்தியாவில் என்ன ஆகும்..?

நம்மூர்... நீள - அகலத்திற்கு, சுமார் நூறு கி.மீ தூரத்திற்கு ஒருமுறை சார்ஜ் செய்து கொள்ளும் வசதி வேண்டும்.

நகர போக்குவரத்திற்கு குறைந்த பட்சம் வீட்டில் சார்ஜ் செய்து கொள்ளும் வசதியாவது இருக்க வேண்டும். அபார்ட்மெண்டுகளில் இது கொஞ்சம் கஷ்டம்.

ஹாங்காங்கிலேயே ஒவ்வொரு ஷாப்பிங் மாலுக்குள்ளும் காரை சார்ஜ் செய்து கொள்ளும் வசதி இருக்கிறது. அது போலவே நாமும் இந்தியாவில் மூலை முடுக்கெல்லாம் ஏற்படுத்த வேண்டும்.

சென்னையில் ஒரு முறை சார்ஜ் செய்து விட்டு சாகசங்கள் ஏதுமின்றி கட்டின பசு போல ஓட்டிக் கொண்டு போனால் மதுரை வரை சென்று விடும், லாங்க் ரேஞ்ச் மாடல். ஸ்டாண்டர்ட் மாடல் திருச்சி தாண்டும் என்று தோன்றுகிறது.

டெஸ்லாவின் அதிபர் எலான் மஸ்க் சொல்கையில் உலகிலேயே இறக்குமதி கார்களுக்கு அதிக வரி விதிப்பது இந்தியா தான் என்றிருக்கிறார். 40,000 டாலர்களுக்கு மேற்பட்ட கார்களுக்கு, நூறு சதவிகிதத்திற்கும் மேலே வரி விதிக்கப்படுகிறது இந்தியாவில்.

எலான் மஸ்க் சொல்கையில் இது சொகுசுக் கார் அல்ல... மின்சாரக் கார். அதனால், டெஸ்லா கார்களுக்கு இந்தியாவில் வரிச் சலுகை அளிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு மத்திய அரசு சார்பில், ஒரு வேளை டெஸ்லா கார்கள் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்டால், வரிவிலக்கு கிடைக்கும் என்று சொல்லியிருப்பதாக தெரிகிறது.

எலான் மஸ்க் மின்சாரக் கார் என்று சொன்னாலும் இதுசொகுசுக் கார் தான்.

காரை ஓட்டும் போது சாலையில் மிதப்பது போலத் தான் இருக்கிறது. அதிலும் இரண்டு விதமான டிரைவ் மோடுகள் இருக்கின்றன. ஒன்று ஸ்டாண்டர்ட். ஒன்று chill. இந்த சில் மோடில் மற்ற கார்களைப் போலத் தான் இருக்கிறது டெஸ்லா. ஆனால் ஸ்டாண்டர்டு மோடில் வைத்து விட்டால், ஆக்சிலேட்டரில் லேசாக கால் வைத்தால்... ரம் குடித்த குதிரை போல பிளிறிக் கொண்டு ஒரு பாய்ச்சல், அப்படியே அடி வயிற்றை கவ்விப் பிடிப்பது போல ஒரு வேகம்.

பொருட்காட்சிகளில் ஜெயண்ட்வீலில் மேலிருந்து கீழே வரும் போது வயிற்றைப் பிடிக்குமே, அதே வேகம். (ஒரு விமர்சனத்தில் டெஸ்லா கார்கள் ஃபெர்ராரியையும், லம்போர்கனிக்களையும் ஒரு கை பார்த்து விடும் என்று சொல்லியிருக்கிறார்கள்.) சூப்பர் மேன் சொல்வது போல் அதிக சக்தி, அதிக பொறுப்பு வேண்டும். இல்லையேல்....

டெஸ்லா கார் ஈ.சி.ஆர். ரோடுகளில் பறந்தால் விபத்துக்கள் அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அத்தனை வேகம்.

டெஸ்லா மற்றும் இதர மின்சார கார்களால் எரி பொருள் மிச்சம். பணம் நீண்டகால பயன்பாட்டில் மிச்சம்.

டெஸ்லா கார்களில் குறையே இல்லையா..?

என்னைப் பொறுத்தவரை குறைகள் என்று சொன்னால் இப்படி பட்டியலிடலாம்.

ஆப்பிள் மற்றும் ஆண்டிராயிடு போன்களின் தொடு திரை டெஸ்லா திரையில் வராது. ஏனெனில்... டெஸ்லா அவர்களுடைய இயங்குதளத்தை தான் டெஸ்லா ஓட்டுனர்கள் உபயோகிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

மாடல் 3 மற்றும் ஒய் முழுக்க முழுக்க கண்ணாடி கூரையுள்ளது. நம்மூர் வெயிலுக்கு உள்ளே காருக்குள் தொப்பி அணிந்து அமர்வது அவசியம். இல்லையெனில் என்போன்ற ஆட்களை ஹாஃப் பாயில்ட் ஆக்கி விடும் நம்மூர் வெயில். ஏசி செலவு அதிகமாகும்.

சார்ஜ் செய்ய பயன்படுத்தப் படும் கேபிள் நெல்லையப்பர் தேரின் வடம் போல கொஞ்சம் கனம். ஒல்லியானஆசாமிகள், பெண்களுக்கு கொஞ்சம் சிரமம் தான்.

ஒரு வேளை டயர் பஞ்சரானால் ஜாக்கி போட்டு தூக்கிவிடக் கூடாது. அதற்காக டெஸ்லா கம்பெனியைத் தான்கூப்பிட வேண்டும். ஜாக்கி போட்டு தூக்கினால்... சில பகுதிகள், மோட்டார் சேதமாகக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.

அது போலவே... ஏதேனும் காரணத்திற்காக வண்டி நின்றுவிட்டால், கயிறு கட்டி இழுக்கும் சமாச்சாரம் ஆகவே ஆகாது. டெஸ்லா கம்பெனியிலிருந்து வந்து நான்கு சக்கரங்களையும் தூக்கினால் தான் மோட்டார் தப்பிக்கும்.

நீண்ட தூரம் செல்லும் திட்டமிருந்தால், எங்கே சார்ஜ் செய்து கொள்வது என்பதையும் திட்டமிடுவது அவசியம். வழியில் சார்ஜ் இல்லாமல் நின்று போனாலும் டெஸ்லாவைத்தான் அழைக்க வேண்டும். அவர்களின் மையக் கணிணியில் உங்கள் வண்டி இந்த நேரத்தில் எந்த இடத்தில் இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியும். யெஸ். நீங்கள் சின்ன வீட்டுக்கு சென்றாலும்... டெஸ்லாவுக்கு தெரியாமல் செல்ல வாய்ப்பில்லை.

டெஸ்லா பற்றி எழுதும் போது.... அரசியல் கலக்கவே கூடாது என்று முயற்சி செய்தாலும்... இறுதியில்....

அணில் தொந்தரவினால் இரவில் சார்ஜ் செய்ய முடியாமல் போக நேரும் போது, அடுத்த நாள் காலை ஆஃபீஸ் செல்ல ஒரு ஆட்டோக்காரர் நம்பரும் கைவசம் இருப்பது நல்லது.

இவ்வளவு எழுதிவிட்டு டெஸ்லா காருக்குள் போகவில்லை என்றால் எப்படி...?

இங்கே.....