தொடர்கள்
கவர் ஸ்டோரி
மிஸ்டர் ரீல்...! - ஜாசன்

20210525193754746.jpeg

மின் தடைக்கு காரணம் அணில் தான் என்ற திடுக்கிடும் தகவலை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்லி, அதைத் தொடர்ந்து பலர், மின்வாரியத்திடம் மின் தடை ஏற்படும் போது... அணில் மேல் புகார் சொல்லத் தொடங்கினார்கள். அமைச்சரும், சட்டவல்லுனர்களை கலந்து ஆலோசித்து அணிலுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க திட்டமிட்டிருந்தார்.

உண்மை நிலவரம் தெரிய மிஸ்டர் ரீல், அணிலை சந்திக்கப் போனபோது... அணிலார் கண்ணீர்விட்டு அழுதுக் கொண்டிருந்ததால் அந்த இடமே கண்ணீர் வெள்ளமாக இருந்தது.

அணிலுக்கு ஆதரவு தெரிவித்து... குரங்கு, பாம்பு, காகம், மைனா, குருவி, ஓனான் போன்ற சக விலங்குகள் ஒன்றுகூடி ஆறுதலும் சொல்லிக்கொண்டிருந்தன.

அப்போது ஆக்ரோஷமான ஒரு குரங்கு “போன வாரம் கும்மிடிப்பூண்டியில், 2 மின் கம்பி ஒயர்களில் தொங்கி ஊஞ்சல் ஆடியதில் அறுந்து போனது... என் மீது வழக்கு போடட்டும் பார்க்கிறேன்” என்றது ஆவேசமாக.

அப்போது ஒரு காக்கா, நான் ஒரு டிரான்ஸ்பார்மர் மேல் கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சு பொரித்தேன். குஞ்சு வெளியே வந்து, தனது அலகை பரிசோதிக்க ஒரு ஒயரை பிடித்து இழுத்தது. அது உடனே பிய்ந்துபோனது. அதனால், மின்தடை ஏற்பட்டது. உண்மையில்... மின்கம்பி மின் வயர் வாங்கியதில் ஊழல், அமைச்சருக்கு 90 சதவீதம் கமிஷன். இது சம்பந்தமான ஆதாரம் அண்டங்காக்கா வசம் இருக்கிறது. நாளை நிருபர் கூட்டத்தை கூட்டி, அந்த ஆதாரங்களை வெளியிட்டு ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் கேட்க இருக்கிறோம் என்றது.

அப்போது பாம்பு... நான் கூட போன வாரம், பெருங்களத்தூரில் ஒரு மின் வயரை கடித்தேன். திமுக ஆட்சியில் கரண்ட் இருக்காது என்று நம்பி கடித்தேன் ஆனால் ஷாக்கடித்தது, இதை நான் யாரிடம் முறையிடுவது என்று மிஸ்டர் ரீலிடம் கேட்க... அவர் முழித்தார்.

அப்போது அணில், பாடப்புத்தகங்களில் நாங்கள் அணில் படத்தை பயன்படுத்த தடை கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க இருக்கிறோம். இது தவிர... அமைச்சர் மீது, அணில் அவமதிப்பு வழக்கு இந்தியா முழுவதும் உள்ள எல்லார் கீழமை நீதிமன்றங்கள், உயர் நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் என்று எல்லா நீதிமன்றங்களிலும் அவர் மீது வழக்குத் தொடுக்க இருக்கிறோம். டெல்லி வழக்கறிஞர்கள் எங்களுக்கு வாதாட தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்கு சன்மானமாக கொய்யா, சப்போட்டா போன்ற பழங்களை நாங்கள் தர இருக்கிறோம். அதற்கு அந்த வழக்கறிஞர்களும் சம்மதித்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டில், திருமதி நளினி சிதம்பரம் எங்களுக்கு ஆதரவாக வாதாட இருக்கிறார். அதற்கு சன்மானமாக அவருக்கு சொந்தமான பண்ணை தோட்டத்தில் உள்ள கொய்யா மற்றும் சப்போட்டா மரங்களில் உள்ள பழங்களை கடிக்கக் கூடாது என்று எங்களிடம் எழுத்துப்பூர்வமான உத்தரவாதம் வாங்கிக் கொண்டிருக்கிறார் என்ற அணில்... கூடவே பாரதிய ஜனதா பாராளுமன்ற உறுப்பினர், விலங்குகள் ஆர்வலருமான திருமதி மேனகா காந்தி, எங்களுக்காக பாராளுமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அணில் கண்டன தீர்மானம் கொண்டு வர இருக்கிறார். இது தவிர... பாரதிய ஜனதா எல்லா ராமர் கோயில்களிலும், அணிலுக்கு என்று தனி சன்னதி கேட்டு போராட்டம் நடத்த இருக்கிறார்கள். ராமருக்கு பாலம் கட்ட, நாங்கள் உதவி செய்தோம் என்ற சரித்திர சான்று இந்தத் தலைமுறையினருக்கு சரியாக தெரியவில்லை.

எனவே அணில்... அணில் தான் என்று ஒரு வெப் சீரியல் விரைவில் வர இருக்கிறது. அனில் அம்பானி மிகுந்த பொருட்செலவில் இதை தயாரிக்க இருக்கிறார் என்று சொன்னபோது... மிஸ்டர் ரீல் குறுக்கிட்டு... “திடீரென உங்கள் மீது இப்படி அமைச்சர் பழி போட காரணம் என்ன என்று கேட்க..” அதற்கு அணில்... அந்த விவரம் இப்போது எங்கள் கையில் இருக்கிறது. அமைச்சர் முதல் வகுப்பு படிக்கும் போது, அவரது ஆசிரியர் சுமதி மிஸ், இவரை அணில் படம் வரைய சொல்லியிருக்கிறார். ஆனால், இவர் எலி படம் வரைந்து விட்டார். அதனால், சுமதி மிஸ் இவர் முதுகில் டின் கட்டி விட்டார். அதுமுதல் இவருக்கு அணில் என்றால் ஆகாது, அலர்ஜி. இந்த விவரத்தை சுமதி மிஸ் எங்களிடம் சொன்னார். அவர் நான் எங்கு வேண்டுமானாலும் வந்து பேட்டி தர தயார் என்று என்னிடம் சொல்லியிருக்கிறார். அந்தப் பழைய பகை தான். இப்போது அமைச்சர் எங்கள் மீது காட்டியிருக்கிறார். இந்த விவரத்தை நாங்கள் ஆதாரத்துடன் சுமதி மேடத்தை அழைத்துச் சென்று, அமைச்சர் மீது புகார் மனு தர இருக்கிறோம் என்ற அணில், அதுமட்டுமல்ல... பிராணிகள் நல வாரியம், அமைச்சரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. உண்மையில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், நாங்கள் தோட்டங்களுக்கு கூட அவ்வளவாக வருவதில்லை. அங்குள்ள பழங்களை கடிப்பதற்கே எங்களுக்கு நேரமில்லை... அப்படியிருக்கும்போது நாங்கள் ஏன் மின்சார வயர் பக்கம் போக வேண்டும். இந்த அடிப்படை விஷயம் கூட அமைச்சருக்கு தெரியவில்லை.

இது தவிர இப்போது இருக்கும் அணில்களின் எண்ணிக்கையில் 80% மூத்தகுடி அணில்கள். அவர்களுக்கு பல்லே இல்லை, எல்லோரும் பொக்கை வாய். அப்படி இருக்கும்போது... ஒயரை கடிக்கிறார்கள், அதனால் மின்தடை என்பது அபாண்டமான பொய். இப்படி நிறைய ஆதாரங்கள் எங்கள் வசம் இருக்கிறது.

திருமதி துர்கா ஸ்டாலினிடம் மகளிர் அணில் அமைப்பு, இது ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு செய்யும் அபவாதம். இதற்கு பரிகாரம்... அமைச்சர் பதவி பறிப்பு தான் என்று நேரில் சொல்ல இருக்கிறார்கள். இதற்காக துர்கா ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார்கள்... நாளை அஷ்டமி, மறுநாள் நவமி. நவமி அன்று வாருங்கள் என்று சொல்லி இருக்கிறார். அப்போது திருமதி முதல்வரை சந்தித்து, அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு வலியுறுத்துவோம் என்று சொன்ன அணிலிடம்...

அமெரிக்கா, இங்கிலாந்து ஐரோப்பா போன்ற நாடுகளில் அணில்கள் மின்தடை ஏற்படுத்தும் என்று கூகுள் சொல்கிறதே என்று கேட்டபோது... அதற்கு அணில்... “அமைதியாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா போன்ற நாடுகளில் இருப்பதெல்லாம் அணில்கள் அல்ல.. அது ஒருவகை பெருச்சாளி. ஆனால், அணில் ஜாடையில் இருக்கும் இந்தியாவில் உள்ள அணில்கள் முதுகில் மூன்று கோடு இருக்கும். ஆனால், நீங்கள் சொல்லும் அந்த மேலை நாடுகளில் உள்ள அணில்களின் முதுகில், அந்த கோடுகள் இருக்காது. இதைவிட வேறு ஆதாரம் தேவையா. அமைச்சர் வெறும் கலைஞர் டிவி மட்டும் பார்த்தால் போதாது... அவ்வப்போது டிஸ்கவரி சேனல் பார்க்க வேண்டும், அப்போதுதான் விஞ்ஞான அறிவு வளரும், ஆதாரம் தெரியும் என்று அணில் சொல்ல...” அமைச்சர் நிலைமை கொஞ்சம் பரிதாபம் தான் என்று யோசித்தபடியே மிஸ்டர் ரீல் கிளம்பினார்.