தொடர்கள்
வலையங்கம்
வலையங்கம்

வேண்டாம் குண்டாந்தடி...

20210525193828631.jpeg

பொதுமக்களின் நண்பனாக இருக்க வேண்டும் என்றுதான் காவல்துறை உங்கள் நண்பன் என்று பெருமையாக சொல்லிக் கொண்டது. ஆனால், சமீபத்திய சில சம்பவங்கள் காவல்துறையை வில்லன் என்று சொல்லலாம் என்ற நிலைக்கு தற்போது காவல்துறை சென்று கொண்டிருக்கிறது.

விருதுநகர் மாவட்டம் மலையப்பட்டி குறிஞ்சி நகரை சேர்ந்த கட்டிட தொழிலாளி பாலமுருகன் நியாய விலை கடையில், ஊழியருடன் வாய்த்தகராறு செய்தார் என்பதற்காக வீட்டிலிருந்த பாலமுருகனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, பூட்ஸ் காலல் தாக்கிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவியது. இதேபோல்... தென்காசி மாவட்டம் மாற்றுத்திறனாளி ஒருவர் வாங்கிய ரேஷன் அரிசியை தனது உறவினர் வீட்டுக்கு எடுத்துச் சென்றபோது, பறிமுதல் செய்த காவல்துறையினர் அவர் மீது தாக்குதல் நடத்தி அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க அவர் மகள் போராட்டம் நடத்த... அதன் பிறகு சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதவிர... மனித உரிமை ஆணையமும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறது.

சேலம் மாவட்டம் எடயப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் என்பவரை குடிபோதையில் வாக்குவாதம் செய்தார் என்பதால், சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி முருகேசனை லத்தியால் தாக்கும் கொடூர காட்சிகள் சமூக வலைதளங்களில் இன்று வரை வைரலாகி கொண்டிருக்கிறது. குடிபோதையில் முருகேசன் வாக்குவாதம் செய்தார் என்று காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால், இதேபோல் வாக்குவாதம் செய்த, இதைவிட தரக்குறைவாக காவல்துறையிடம் நடந்துகொண்ட வழக்கறிஞரிடம், காவல்துறை மென்மையாகத்தான் இதுவரை நடந்து கொண்டு வருகிறது. அவர்களை வீட்டுக்கு பத்திரமாக அனுப்பி வைக்க பார்க்கிறது. தற்போது முருகேசன் மண்டை, முதுகு தண்டு எலும்பு உடைந்து தாக்குதலுக்கு ஆளானதால் இறந்துவிட்டார் என்று மருத்துவ அறிக்கை சொல்வதை தொடர்ந்து, சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி கைது செய்யப்பட்டிருக்கிறார்.

வழக்கறிஞருக்கு ஒரு சட்டம், ஏழை விவசாயிக்கு ஒரு சட்டம் என்று சட்டப் புத்தகத்தில் தனித்தனியாக சட்டமெல்லாம் இல்லை. சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்பது தான் உண்மை. ஆனால், அது வெறும் ஏட்டளவில் தான் என்ற சந்தேகம் தற்போது ஏற்படுகிறது.

பிரிட்டிஷ் ஆட்சியில்தான், காவல்துறையினர் போராட்டக்காரர்களை குண்டன்தடிக் கொண்டு, கொடூர தாக்குதல் நடத்தி அராஜகம் செய்தனர். சுதந்திர இந்தியாவில், குண்டந்தடிப் போய் காவல்துறையினருக்கு பிரம்பு அறிமுகப்படுத்தப்பட்டது. அதுகூட பிரம்பை பிரயோகம் செய்ய விதிமுறைகளையும், காவல்துறையினருக்கு வகுத்தது. ஆனால், அந்த விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு, குண்டந்தடி அராஜகத்தை காவல்துறை நடத்தியிருப்பது, காவல்துறை வரலாற்றில் கருப்பு பக்கங்களாக இருக்கும் என்பதை காவல்துறையினர் மறந்துவிடக்கூடாது.

காவல்துறை எவ்வளவோ மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டாலும், இதுபோன்ற சம்பவங்கள்... அவர்களின் மனிதாபிமானத்தை மறக்கடிக்கச் செய்யும் என்பதை காவல்துறை நினைவு கொள்ள வேண்டும்.