தொடர்கள்
விகடகவியார்
விகடகவியார் ஸ்பெஷல் ரிப்போர்ட் - 1...

மீண்டும் சசிகலா...

20210504211738932.jpeg

அதிமுக 66 சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஒரு வலுவான எதிர்க்கட்சியாக இருந்தாலும்... ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் ஒருவரை ஒருவர் காலை வாரி விட, நாள் நட்சத்திரம் பார்த்து கொண்டிருக்கிறார்கள். எடப்பாடி சேலத்தில் அரசியல் செய்கிறார். ஓபிஎஸ் தேனியில் அரசியல் செய்கிறார். எடப்பாடி, சேலத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி, கொரோனா நோய் தடுப்பு பற்றி கூட்டிய ஆலோசனைக் கூட்டத்திற்கு, அவர் உள்பட அதிமுக, பாமாகா சட்டமன்ற உறுப்பினர்களை கலந்து கொள்ளாமல் தடுத்து, அனைவரையும் தனது வீட்டுக்கு வர செய்து கறிவிருந்து தந்து, செந்தில் பாலாஜியின் ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு... தனியாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்த கோரிக்கை மனு தந்தார் எடப்பாடி. கூடவே, தனது சக சட்டமன்ற உறுப்பினர்களையும் அழைத்துச் சென்றார்.

தேனியில் இதேபோன்றொரு ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர் ஐ. பெரியசாமி உடன் ஓபிஎஸ் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். அவர் அந்தக் கூட்டத்திலும் கலந்து கொண்டார். சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியத்திடம் சிறப்பாக செய்கிறீர்கள், வாழ்த்துக்கள் என்றார். இப்படி ஆளுக்கு ஒரு பக்கம், அவர் இப்படி.. இவர் அப்படி என்றேன். அதிமுக கட்சியின் தொண்டர்களை குழப்பி வருகிறார்கள் இந்த இரட்டையர்கள்.

இந்தச் சமயத்தில்தான் சசிகலா பேசுகிறார் என்று ஒரு ஆடியோ வெளிவந்து. ஏற்கெனவே அதிமுகவில் குழப்பம்... மேலும் குழப்பம் என்று எல்லோரையும் என்ன நடக்கிறது என்று தெரியாமல் விழிக்க வைக்கின்றது.

லாரன்ஸ் என்ற ஒரு அதிமுக தொண்டருக்கு சசிகலாவின் உதவியாளர் கார்த்திக் போன் போட்டு, “லாரன்ஸ் ஒரு நிமிடம்.. அம்மா பேசறாங்க என்று சொல்ல..” அடுத்து ஒரு நிமிடம் கழித்து சசிகலா, “லாரன்ஸ் எப்படி இருக்கீங்க... நல்லா இருக்கீங்களா” என்று கேட்டதும்... எதிர்முனையில் இருந்தவர் உற்சாகத்தில்... “அம்மா நான் நல்லா இருக்கேன். அம்மா நீங்க பேசியதே எனக்கு பெரிய விஷயம். நாங்கள் எல்லாம் உங்க பின்னாடி தான் நிற்கிறோம்” என்று சொல்ல... அதற்கு சசிகலா... “சீக்கிரம் வந்து விடுவேன், கட்சியை சரி பண்ணி விடுவோம். கவலைப்படாதீங்க...” என்று சொல்லி, உரையாடல் முடிவடைகிறது. அதிமுக தொண்டர் லாரன்ஸ், சசிகலா சிறையில் இருக்கும்போது அடிக்கடி அவருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். தொடர்ந்து அந்தக் கடிதத்தில் உள்ள தொலைபேசி எண்ணை பார்த்து தான், சசிகலா அவரிடம் பேசி இருக்கிறார். இப்படி சில தொண்டர்களிடம் பேசிய ஆடியோ, ஒலிப்பதிவு செய்யப்பட்டு தற்போது சமூக வலைத்தளங்களில் சுற்றி வருகிறது. இப்படி வெளியான இரண்டு மூன்று ஆடியோக்களில்... “கவலைப்படாதீங்க... சீக்கிரம் கட்சியை, சரி செய்து விடுவோம். நிச்சயம் வருவேன்” என்று சொல்லி வருகிறார் சசிகலா.

20210504211803243.jpeg

சசிகலா உண்மையில் கட்சியை கைப்பற்றுவாரா அல்லது இது தினகரன் செய்யும் சிண்டு முடியும் வேலையா என்று விசாரித்தபோது.... எடப்பாடி, சசிகலா வேண்டாம் என்பதில் உறுதியாக இருக்கிறார். சட்டமன்றத் தேர்தலுக்கு முன், பாரதிய ஜனதா கட்சியுடன் தேர்தல் கூட்டணி பற்றி பேசிவிட்டு வெளியே வந்த எடப்பாடி, மீண்டும் சசிகலா கட்சியில் சேர நூறு சதவிகிதம் வாய்ப்பில்லை என்றார். ஆனால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், சசிகலா மீதான நன்மதிப்பு எங்களுக்கு குறையவில்லை என்றார்.

அதாவது சசிகலாவை எதிர்த்து, ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்து... ஜெயலலிதா மரணத்தில் மர்மம் என்ற ஓபிஎஸ் தான், சசிகலா பற்றி இப்படி திருவாய் மலர்ந்தார். தேர்தல் நேரத்தில்... சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்ப்பது, தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை, அதிமுகவுடன் இணைப்பது போன்ற முயற்சிகளில் ஓபிஎஸ் ஈடுபட்டார். ஆனால், அவருக்கு அதற்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை. எடப்பாடி, சசிகலாவும் வேண்டாம்... அவர் குடும்பமும் வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தார். அப்போது அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எடப்பாடியின் இந்தக் கருத்துக்கு ஆதரவாக குரல் தந்தார்கள். இதற்கு இன்னொரு காரணமும் அப்போது சொல்லப்பட்டது. சசிகலா உள்ளே நுழைந்தால், மாதா மாதம் அமைச்சர்கள், சசிகலாவுக்கு கப்பம் கட்ட வேண்டும். அவர் நினைத்தபோது, அமைச்சர்களை நீக்கி.. புதியவர்கள் சேர்த்தல் போன்ற வேலைகளை செய்வார். இதேபோல் கட்சியிலும், அவரது குடும்பத்தினர் தலையீடு அதிகமாக இருக்கும் என்றெல்லாம் யோசித்து தான் எடப்பாடிக்கு, அமைச்சர்களும் மாவட்ட செயலாளர்களும் ஆதரவு தந்தார்கள். அமித்ஷா கூட எடப்பாடியிடம் சசிகலாவை கட்சியில் சேருங்கள் என்று வற்புறுத்தினார். அப்போதும்கூட... எடப்பாடி, வேண்டாம் சசிகலா என்பதில் உறுதியாக இருந்ததால், அமித்ஷாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில்... கிட்டத்தட்ட 30 இடங்களில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், அதிமுக வாக்குகளை பிரித்ததால் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்தது. இல்லையென்றால் கிட்டத்தட்ட நூறு இடங்களில் அதிமுக வெற்றி பெற்றிருக்கும். இதை சிலர் எடப்பாடியிடம் சுட்டிக்காட்டிய போது கூட... பரவாயில்லை, சசிகலா குடும்பம் வேண்டாம் என்று அப்போதும் உறுதியாக, தனது கருத்தை சொன்னார் எடப்பாடி.

ஆடியோ விஷயம் பற்றி அதிமுக சார்பாக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர், சட்டமன்ற உறுப்பினர் கேபி முனுசாமி கிருஷ்ணகிரியில் நிருபர்களை அவசரமாக அழைத்து பேட்டி தந்தார். அப்போது அவர் சொன்னது... அதிமுக என்ற மாபெரும் இயக்கத்துக்கும் இந்த அம்மையாருக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. அந்த அம்மையார், இந்த கட்சியிலேயே இல்லை. ஏதாவது குழப்பம் ஏற்படுத்த அவர் செய்யும் முயற்சிக்கு எந்த அதிமுக தொண்டரும் செவிசாய்க்க மாட்டார்கள் என்றார். கூடவே அவர் எண்ணம் ஈடேறாது. அவர் பேசியதை நானும் கேட்டேன்... எந்தத் தொண்டனும் அவரை தொடர்பு கொள்ளவில்லை. இவர்தான் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அழைத்துப் பேசியிருக்கிறார். அவர்களெல்லாம் தினகரன் கட்சி தொண்டர்களாக இருப்பார்கள் என்றார் கேபி முனுசாமி. அதுமட்டுமின்றி... சாதாரண நிலையில் இருந்த சசிகலா குடும்பம், இன்று விரல் விட்டு எண்ணக்கூடிய கோடீசுவரர்கள் குடும்பத்தில் ஒன்றாக இருக்கிறது. அப்படி அவர்களை உயர்த்திய ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தியடைய, அவர்கள் ஒதுங்கி இருப்பது தான் நல்லது என்றும் குறிப்பிட்டார்.

எடப்பாடியிடம் பேசிவிட்டு தான், கேபி முனுசாமி பேட்டி தந்தார். அவர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-ஸையும் தொடர்பு கொண்டார், அவர் அப்போது பேசவில்லை. அதே சமயம் பேட்டி முடிந்த மறுநாள்... ஓபிஎஸ்-ஸை தொடர்பு கொண்ட கேபி முனுசாமி, அதிமுக தொண்டர்களை மீண்டும் சசிகலாவின் அடிமைகளாக வைக்க நீங்கள் பார்க்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும், ஆனால் அது நடக்காது என்று ஆவேசமாகப் பேச... எதுவும் பதில் பேசாமல்... ஓபிஎஸ் வணக்கம் என்று சொல்லிவிட்டு, செல்பேசியை துண்டித்து விட்டார். இதன் நடுவே... சசிகலா தரப்பிலிருந்து இது கேபி முனுசாமியின் சொந்த கருத்து என்று அறிக்கை தரச் சொல்லி, பன்னீர்செல்வத்துக்கு அழுத்தம் தரப்பட்டது. ஆனால் அதை மறுத்துவிட்டார் ஓபிஎஸ்.

ஆகஸ்ட் மாதம் சசிகலா பிறந்தநாள். அதன் பிறகு அல்லது கொரோனா எல்லாம் இல்லை என்று ஆனதும், சசிகலா தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்வார் என்கிறது தினகரன் தரப்பு. ஆனால் எடப்பாடி தரப்போ, வரட்டும் பார்க்கலாம் என்று காத்திருக்கிறார்கள்.

இதன் நடுவே சசிகலா அதிமுக-விலேயே இல்லை. சிலர் வேண்டுமென்றே குழப்பத்தை விளைவிப்பதற்காக இது போன்ற ஆடியோக்களை வெளியிட்டு வருகின்றார்கள் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி.

தமிழக முதல்வர் மற்றும் திமுக தலைவர், அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் இந்தக் குழப்பத்தை தற்சமயம் அமைதியாக வேடிக்கை மட்டும் பார்க்கிறார்.