தொடர்கள்
கவர் ஸ்டோரி
அரசியலாகும் ஜி.எஸ்.டி.... - அலசல் ரிப்போர்ட் - கே. பாலஸ்வாமிநாதன்

இதுதான் ஜிஎஸ்டி...

20210504160642860.jpeg

ஜிஎஸ்டி விவகாரத்தில் தற்போது தோன்றியுள்ள முக்கியமான பிரச்சனை என்ன..? மத்திய அரசிடமிருந்து எங்களுக்கு வந்து சேர வேண்டிய ஜிஎஸ்டி தொகை இன்னும் முழுமையாக வந்து சேரவில்லை. மத்திய அரசு மாநிலங்களை வஞ்சித்து விட்டது. மத்திய அரசு கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லை. மாநில அரசுகளின், குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளின் குற்றச்சாட்டுகளை முழுமையாக புறந்தள்ள முடியாது. இந்த விஷயத்தில் மத்திய அரசு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றவில்லை என்பது உண்மைதான், என்றாலும்... இதற்காக மத்திய அரசை முழுமையாக குறை கூற முடியாது.

2017 ஆம் ஆண்டுக்கு முன்... மாநில அரசுகள் விற்பனை வரி, கேளிக்கை வரி, நுழைவு வரி, ஆடம்பர வரி (Luxury Tax) போன்ற வரிகள் மூலம் வசூல் செய்து வந்தன. இதைத் தவிர... இந்திய நிதி ஆணையம் மூலமாக பைனான்ஸ் கமிஷன் ஆஃப் இந்தியா, மத்திய அரசு வசூலிக்கும் வரிப்பணத்திலிருந்து ஒரு தொகையை பெற்று வந்தன மாநில அரசுகள். 2017-ஆம் ஆண்டு ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தும்போது, மத்திய அரசு சில வாக்குறுதிகளை மாநில அரசுகளுக்கு அளித்தன. அதில் முக்கியமானவை இரண்டு. அனைத்து மாநில அரசு வரிகளும் நீக்கப்பட்டு, ஜிஎஸ்டி மட்டுமே அமலில் இருக்கப் போவதால், மாநில அரசுகளுக்கு இதனால் ஏற்படும் பற்றாக்குறையை மத்திய அரசு ஈடு செய்யும் என்ற வாக்குறுதி முதலானது.

இந்தப் பற்றாக்குறையை 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு மாநில அரசுகளுக்கு ஈடு செய்யும். அதாவது 2017 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டுவரை மத்திய அரசு, மாநில அரசுகளின் பற்றாக்குறையை கவனித்துக்கொள்ளும். ஒவ்வொரு ஆண்டும் ஜிஎஸ்டி மூலமாக வசூலிக்கப்படும் வரிப்பணம் 14 சதவிகிதம் அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டது. அனேகமாக ஜிஎஸ்டி அறிமுகத்திற்கு முன், மாநில அரசுகள் பெற்ற வரி பணத்தை விட இனி வரும் காலங்களில் வரி வசூல் தொகை அதிகமாகவே இருக்கும் என்பது இரண்டாவது வாக்குறுதி. மத்திய அரசு எதிர்பார்த்தபடி எல்லாமே சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது.

ஆனால், இந்த வருடம் கொரோனா பாதிப்பால்... இந்திய பொருளாதாரம் இன்னும் (பல நாடுகளிலும் இதே கதி தான்) பெரும் வீழ்ச்சியைக் கண்டது. இந்த வருடம் முதல் காலாண்டில் சுமார் 24 சதவீத வீழ்ச்சியை இந்தியா சந்திக்க நேர்ந்ததால், வாக்குறுதி அளிக்கப்பட்ட 14 சதவீத வளர்ச்சியை ஜிஎஸ்டி வசூல் எட்டவில்லை. மாநிலங்களுக்கு ஏற்பட்ட பற்றாக்குறையை ஐந்து வருடங்களுக்கு ஈடுகட்டுவதற்காக மத்திய அரசு சுங்க வரியில், கூடுதல் வரியை மத்திய அரசு விதித்தது. ஆனால் கொரோனா தாண்டவத்தால், ஏற்றுமதி - இறக்குமதி பாதிப்புக்குள்ளாகி, நினைத்த தொகையை மத்திய அரசால், இந்த புதிய வரி விதிப்பின் மூலம் ஈட்ட முடியவில்லை. இதுதான் இப்போதைய நிலைமை. கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பாதிப்பு இது. இதற்காக ஜிஎஸ்டி அறிமுகமே தவறு என்றும், மத்திய அரசு நிலைமையை சரியாக கையாளவில்லை என்றும் குற்றம் சாட்டுவது நியாயமாகப் படவில்லை. மாநில அரசுகளின் நிதி பற்றாக்குறையை எப்படியாவது சரி செய்துதான் ஆக வேண்டும். இதற்கு ஒரே வழி, மத்திய வங்கிகளிடமிருந்து கடன் வாங்கவேண்டும். மத்திய அரசாங்கம் இதற்கும் ஒரு ஆலோசனையை கூறி உள்ளது. ஏற்கனவே மத்திய அரசுக்கு பொருளாதார நிர்பந்தங்கள் இருப்பதால், இந்தப் பற்றாக்குறை தொகையை மாநில அரசுகளை மத்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து குறைந்த வட்டியில் பெற்றுக்கொள்ளலாம். இதற்கான வட்டியும், அசலையும் மத்திய அரசே ஏற்கும் என்று ஆலோசனை கூறப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சமயத்தில், மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு பொருளாதார வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும்.


ஜிஎஸ்டி கவுன்சில்...

இந்தியாவில் ஜிஎஸ்டி அமைப்பின் ஆளுமை ஜிஎஸ்டி கவுன்சிலிடம் இருக்கிறது. இதை ஜிஎஸ்டி ஆட்சிமன்றக் குழு என அழைக்கலாம். இந்தியாவின் 28 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களிலிருந்து தலா ஒரு அங்கத்தினர் அடங்கிய 31 பேர் கொண்ட குழு இது. இதைத் தவிர, மத்திய அரசு சார்பாக இரண்டு உறுப்பினர்கள், இதில் உண்டு. இதில் ஒருவர் மத்திய நிதியமைச்சர், இன்னொருவர் மத்திய ராஜாங்க நிதியமைச்சர் (மினிஸ்டர் ஆஃப் ஸ்டேட் பார் பைனான்ஸ்). ஜிஎஸ்டி மாற்றங்களை கொண்டு வரும் உரிமை இந்தக் குழுவிடம் தான் இருக்கிறது.

ஜிஎஸ்டி வரி மூலம் வசூலிக்கப்படும் தொகை, மத்திய அரசுக்கும் - மாநிலங்களுக்குமிடையே எப்படி பங்கு பிரிக்கப்படுகிறது?

இந்த பங்கு பிரிப்பு, இரண்டு வகைகளில் செயல்படுகிறது. பொதுவாக வர்த்தகம் ஒரு மாநிலத்திற்குள்ளேயே நடைபெறுகிறதா அல்லது இரண்டு மாநிலங்களுக்கிடையே நடைபெறுகிறதா என்பதை பொறுத்து, வரித் தொகை பிரிக்கப்படுகிறது. பொருட்களை விற்றவரும், வாங்குபவரும் ஒரே மாநிலத்தில் இருந்தால், மத்திய அரசுக்கு 50 சதவீதமும், வர்த்தகம் நடைபெறும் மாநிலத்திற்கு 50 சதவிகிதமும் வசூலாகும் ஜிஎஸ்டி பிரிக்கப்படும். விற்பவர் ஒரு மாநிலத்தை சேர்ந்தவர் ஆகவும், வாங்குபவர் இன்னொரு மாநிலத்தை சேர்ந்தவராகவும் இருந்தால், வசூலாகும் தொகை பொருட்களை வாங்கும் மாநிலத்திற்கும் மத்திய அரசு இருவருக்கும் தலா 50 சதவீதம் என்ற விகிதத்தில் பிரித்துக் கொடுக்கப்படும். கடந்த மே மாதம் 28ஆம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூடியபோது, தமிழக நிதியமைச்சர் ஒரு பிரச்சினையைக் கிளப்பினார்.

ஜிஎஸ்டி குழு எடுக்கும் தீர்மானங்கள் அனேகமாக எல்லா உறுப்பினர்களாலும் அங்கீகரிக்கப்படும். ஆனால், ஏதாவது ஒரு தீர்மானத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால்... அந்த தீர்மானத்தின் மீது அங்கத்தினர்கள் ஒட்டு மூலம் முடிவெடுக்கப்படும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கும் தலா ஒரு ஓட்டு உண்டு. இதைத்தான் நமது தமிழக அமைச்சர் எதிர்த்தார். கோவா போன்ற சிறிய யூனியன் பிரதேசத்திற்கும் ஒரு ஓட்டு, தமிழகம் போன்ற பெரிய மாநிலத்திற்கும் ஒரு ஓட்டு தானா என்று ஆட்சேபம் தெரிவித்தார். தமிழக அமைச்சரின் இந்த அணுகுமுறை தவறு. ஒரு ஜனநாயக அமைப்பில், எல்லா மாநிலங்களையும் சரிசமமாகவே கருதவேண்டும். ஐநா பாதுகாப்பு சபையில் கூட சுமார் ஆறு கோடி மக்கள்தொகை உள்ள பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்துக்கும் தலா ஒரு ஓட்டு தான். சுமார் 140 கோடி மக்கள்தொகை உள்ள சீனாவுக்கும் ஒரு ஓட்டு தான். சர்வ வல்லமை பொருந்திய சுமார் 35 கோடி மக்கள்தொகை உள்ள அமெரிக்காவிற்கும் ஒரு ஓட்டு தான்.


ஜிஎஸ்டி எப்படி வேலை செய்கிறது?

ஜிஎஸ்டி என்பது கூட்ஸ் அண்ட் சர்வீஸ் டாக்ஸ் (GST)என்பதன் சுருக்கமே. ஜிஎஸ்டி அறிமுகம் ஆவதற்கு முன்னால்... மத்திய அரசால் விதிக்கப்படும் வரிகள் மற்றும் மாநில அரசால் விதிக்கப்படும் வரிகள் என்று ஏராளமான தலைப்புகளில் வரிகள் வசூலிக்கப்பட்டன. இவையெல்லாம் மறைமுக வரிகள் இண்டைரக்ட் டாக்சஸ். உதாரணமாக மத்திய அரசாங்க கலால் வரி, சுங்க வரி, கஸ்டம்ஸ் டியூட்டி மற்றும் சர்வீஸ் டாக்ஸ், சேவை வரி என்ற பல வரிகளையும்... மாநில அரசாங்கங்கள்.. விற்பனை வரி, கேளிக்கை வரி, ஆடம்பர வரி போன்ற பல மறைமுக வரிகளை தன் பங்கிற்கு மக்கள் மீது சுமத்தி கொண்டிருந்தன. இதனால் மக்களின் வரிச்சுமை மிக அதிக அளவில் இருந்தது. இந்த மறைமுக வரி விதிப்புகள் அனைத்தையும் ஒன்றிணைத்து, 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தேதி சரியாக இரவு 12 மணிக்கு, இந்தியாவில் ஜிஎஸ்டி அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி. இதன்மூலம் அனைத்து மறைமுக வரிகளும் அகற்றப்பட்டு, ஜிஎஸ்டி மட்டுமே மறைமுக வரியாக அமலுக்கு வந்தது. ஜிஎஸ்டி வரி விகிதம் நான்கு அடுக்குகளைக் கொண்டது. உற்பத்தியாகும் அத்தனை பொருட்களையும் இந்த நான்கு அடுக்குகளில் பொருளின் தன்மையைப் பொறுத்து, ஏதாவது ஒன்றில் அடங்கும். அதாவது முதல் அடுக்கில் வரும் பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி. இரண்டாவது 12%, மூன்றாவது அடுக்கில் வரும் பொருட்களுக்கு 18% என்றும் அதிகபட்சமாக நான்காவது அடுக்கில் வரும் பொருட்களுக்கு 28% வரி என்றும் வரி நிர்ணயிக்கப்பட்டது (பெட்ரோல் மறு உற்பத்தி போன்ற பொருட்கள் இதில் அடங்காது).

சரி... இது எப்படி செயல்படுகிறது என்பதை ஒரு உதாரணம் மூலம் பார்ப்போம். சமையல் எண்ணெய் தயாரிப்பை எடுத்துக்கொள்வோம். இது முதல் அடுக்கில் (slab) 10% ஜிஎஸ்டி வகையறாவை சேர்ந்தது. எண்ணை தயாரிப்பாளர் முதலில் அதை தயாரிப்பதற்கான கச்சாப் பொருட்களை, ரா மெட்டீரியல்ஸ் ரூபாய் 500 கொடுத்து வாங்குகிறார். இதற்கு ரூபாய் 50, அவர் ஜிஎஸ்டி செலுத்தியபின் (10%) வாங்குகிறார். பிறகு தனது செலவு மற்றும் லாபமாக ரூபாய் 50 சேர்த்து, ரூபாய் 550 மொத்த விற்பனையாளரிடம் விற்கிறார். இவர் தற்போது கூட்டிய ரூபாய் 50-க்கு ஜிஎஸ்டி வரியாக ரூபாய் 5 செலுத்தவேண்டும். ஆக மொத்தத்தில் இவர் ஏற்கனவே கச்சாப் பொருள் வாங்கும்போது செலுத்திய 50ம் சேர்த்து ஜிஎஸ்டி 55 ரூபாய் செலுத்துகிறார். ஆனால் ஏற்கனவே இவர் கச்சாப் பொருளுக்காக செலுத்திய ரூபாயை ஈடு செய்து கொண்டு, மேற்கொண்டு ஜிஎஸ்டி ஆக ரூபாய் 5 செலுத்தினால் போதும். தயாரிப்பாளரிடமிருந்து எண்ணையை வாங்கிய மொத்த விற்பனையாளர் அவருடைய செலவு மற்றும் லாபம் கருதி இன்னொரு 50 ரூபாய் சேர்த்து ரூபாய் 600-க்கு இதை சில்லறை வியாபாரியிடம் விற்கிறார். இப்போது எண்ணெயின் விலை (ரூ550+50) 600 ரூபாய்.
இந்த 600 ரூபாய்க்கு ஜிஎஸ்டி ரூபாய் 60 செலுத்த வேண்டும். ஆனால், ஏற்கனவே இவர் வாங்கிய விலையில் ரூ. 55 ஜிஎஸ்டி செலுத்தப்பட்டதால் இவர் தற்போது இதை ஈடு செய்து கொண்டு ரூ 5 செலுத்தினால் போதும். ஆக தயாரிப்பாளர் செலுத்திய ஜிஎஸ்டி ரூபாய் 5 மொத்த விற்பனையாளர் செலுத்திய ஜிஎஸ்டி ரூபாய் 5 இரண்டையும் சேர்த்து ரூபாய் 10 ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டது. இறுதியாக 600 ரூபாய்க்கு எண்ணையை வாங்கி சில்லரை வியாபாரி அதை நுகர்வோருக்கு விற்கும்போது இன்னொரு 50 ரூபாயை சேர்த்து 650-க்கு விற்கிறார். இதற்கு இவர் 10% ஆக 65 ரூபாய் செலுத்த வேண்டும் என்றாலும் ஏற்கனவே தயாரிப்பாளர் மற்றும் மொத்த விற்பனையாளர் ரூபாய் 60 செலுத்தி விட்டதால் இந்த தொகையை ஈடு செய்து கொண்டு, வெறும் ஐந்து ரூபாய் செலுத்தினால் போதும். மொத்தத்தில் தயாரிப்பாளர் மொத்த விற்பனையாளர் மற்றும் சில்லறை விற்பனையாளர் எல்லோரும் சேர்ந்து செலுத்தும் ஜிஎஸ்டி வெறும் ரூபாய் 15 /- மட்டுமே.


இதுபற்றி தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் அ. கோபண்ணா அவர்களிடமும், பாரதிய ஜனதா செய்தித்தொடர்பாளர் நாராயணன் அவர்களிடமும் கருத்து கேட்டோம்... அவர்களின் கருத்துக்கள் பின்வரும் கட்டுரைகளில்...