தொடர்கள்
அரசியல்
மேற்கு வங்கம்... - இருவருக்குமே வெற்றி..! - ஜாசன் (மூத்தப் பத்திரிகையாளர்)

20210407160748930.jpeg

நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலை தங்கள் கௌரவப் பிரச்சனையாக மோடி. அமித்ஷா இருவரும் நினைத்தனர். மோடி, அமித்ஷா, நட்டா, ராஜ்நாத் சிங், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் என்று அங்கு பிரச்சாரம் செய்ய வராத பாரதிய ஜனதா கட்சி தலைவர்களே இல்லை என்ற அளவுக்கு அங்கு பிரச்சாரம் சூடு பிடித்தது. பாரதிய ஜனதா, ஆட்சியைப் பிடித்து நாங்கள் என்ன செய்வோம் என்று பேசியதைவிட, மம்தா பானர்ஜியை விமர்சித்துப் பேசியது தான் அதிகம்.

பாரதிய ஜனதா கடந்த மக்களவைத் தேர்தலில் 18 இடங்களில் வெற்றி பெற்று சாதித்தது. அந்த நம்பிக்கையில் தான், எப்படியும் ஆட்சியை பிடித்து விடலாம் என்று பாடுபட்டது. மோடி 17 முறை, அமித்ஷா இருபது முறைக்கு மேல் அங்கு வந்து பிரச்சாரம் செய்தது கூட, இந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான். மத்திய உளவுத்துறை, இரண்டு முறை தொடர்ந்து மம்தா பானர்ஜி ஆட்சி செய்ததில் மக்களுக்கு ஒரு அலுப்பு ஏற்பட்டுள்ளது... திருணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மீதும் அதிருப்தி இருக்கிறது. எனவே, பாரதிய ஜனதா நிச்சயம் வெற்றி பெறும் என்று தான் அமித்ஷாவுக்கு அறிக்கை தந்தது. பிரதமர் கூட உண்மையான மாற்றம் ஏற்பட எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள் என்றுதான் பேசினார். மம்தா பானர்ஜியை எதிர்த்துப் போட்டியிட்ட சுவேந்தே அதிகாரி உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட பினாமி சட்டமன்ற உறுப்பினர்கள், பாரதிய ஜனதாவில் இணைந்தார்கள். அவர்கள் பெரும்பாலோருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டது.

20210407160809725.jpeg

ஆனால் மம்தா பானர்ஜி, மோடி - அமித்ஷா எல்லோரையும் அந்நியர்கள் என்று வர்ணித்து, பிரச்சாரம் செய்தார். அன்னியர்கள் வங்காளத்தை ஆட்சி செய்ய விடலாமா என்றுதான் கேட்டார். இதையே திரும்பத் திரும்பச் சொன்னார். ஒரு கட்டத்தில், பாரதிய ஜனதா எவ்வளவு அதிகாரபலம் இருந்தாலும், மம்தாவை சமாளிக்க முடியாமல் திணறியது என்பதுதான் உண்மை.

மம்தாவின் தேர்தல் வியூக அமைப்பாளரும் பிரசாந்த் கிஷோர் தான். அவர் பாரதிய ஜனதா, இரட்டை இலக்கத்தை தாண்டாது என்றார். அவர் சொன்னது உண்மைதான். பாரதிய ஜனதா 76 இடங்களில் தான் வெற்றி பெற்றது. சென்ற சட்டசபையில் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா, இந்த முறை 76 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இது ஒரு சாதனைதான். அதே சமயம், மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்திருக்கிறார். 203 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறார். மம்தாவிற்கு இணையாக மேற்கு வங்கத்தில் செல்வாக்குள்ள பாரதிய ஜனதா தலைவர்கள் யாரும் இல்லை என்பது தான் முக்கிய காரணம். மம்தா மொழியில் சொல்வதென்றால், மோடி - அமித்ஷா போன்ற அந்நியர்களின் பிரச்சாரத்தில் தான், இந்த எழுபத்தாறு இடங்களை பாரதிய ஜனதா பெற முடிந்தது என்பதுதான் உண்மை.

அதே சமயம்... மேற்கு வங்கத்தில் இந்துத்துவ அரசியல் தற்காலிகமாக தடுக்கப்பட்டிருக்கிறது. ஆமாம், தற்காலிகமாகத் தான்.

2021040716082939.jpeg

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. 170 தொகுதிகளில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சிகள், 21 தொகுதிகளில் மட்டுமே டெபாசிட்டை தக்க வைத்துக் கொண்டது. 91 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், 11 இடங்களில் மட்டுமே டெபாசிட் வாங்கியது. இந்தத் தேர்தல் மம்தாவுக்கும் பாரதிய ஜனதாவுக்குமான தேர்தல் என்று கொண்டு போய்விட்டார்கள், இந்த இரண்டு கட்சியினரும். தேசிய அளவில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிக்கு இது ஒரு மிகப்பெரிய பின்னடைவு.

சாரதா சிட்பண்ட் ஊழலில் முதலில் ஆர்வம் காட்டிய பாரதிய ஜனதா, காலப்போக்கில் இந்தப் பிரச்சனையை தீவிரமாக அணுகவில்லை. குற்றவாளிகளை கைது செய்து தண்டனை வாங்கித் தந்திருந்தால், அது இன்னும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். பாரதிய ஜனதா கூடுதல் இடங்களை பெற்றிருக்கும் என்றும் ஒரு கருத்து சொல்கிறார்கள். பரபரப்பாக சோதனை நடந்தது... அதற்குப் பிறகு என்ன என்ற கேள்விக்கு பாரதிய ஜனதாவில் பதில் இல்லை.

திரிணாமுல் காங்கிரஸ் மகத்தான வெற்றியை பெற்றாலும், நந்தி கிராமத்தில் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாரதிய ஜனதா வேட்பாளர், முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ்காரர் சுவேந்து அதிகாரி1956 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றம் போவேன் என்கிறார் மம்தா. இருந்தாலும்... கொரோனா தாக்குதலால் இறந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கஜல் சின்கா, அதிக வாக்குகள் பெற்று கர்தாகா தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார். தற்போது அந்த தொகுதியில், விரைவில் இடைத்தேர்தல் வர இருக்கிறது. அந்தத் தொகுதியில் மம்தா போட்டியிடுவேன் என்று சொல்லியிருக்கிறார்.

20210407160853668.jpeg

அதே சமயம், தேர்தலுக்குப் பிறகு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நடத்திய வன்முறை ஆட்டம் சொல்லி மாளாது. பாரதிய ஜனதா அலுவலகம், பாரதிய ஜனதா தொண்டர்கள் என்று குறிவைத்து, அவர்கள் மீது தாக்குதலை நடத்தியது. பதிமூன்று பாரதிய ஜனதா தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். மம்தா பானர்ஜி பதவியேற்ற சில நிமிடங்களுக்குப் பிறகு, ஆளுநர் இந்தச் சம்பவத்தை விவரித்து, மம்தா முன்னிலையிலேயே கண்டித்தார், தனது எதிர்ப்பையும் தெரிவித்தார்.

20210407160913350.jpeg

ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நான்கு மாநிலங்களில் எந்த சம்பவங்களும் இன்றி அமைதியாகத் தான் இருக்கின்றன. மேற்குவங்கத்தில் தான் வன்முறை தாக்குதல் உச்சத்தை தொட்டது, இதைத்தான் ஆளுநர் குறிப்பிட்டார்.

சட்டசபையில் நிறைய பரபரப்பு காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது. அவற்றை மம்தா பானர்ஜி எப்படிப் பார்க்கப் போகிறார் என்பதுதான் தற்போது முக்கிய கேள்வி.