ஜஹாங்கீர்…
மகனுக்குத் தண்டனை!
அக்பர் உயிரோடு இருந்தபோதே, ஜஹாங்கீருக்கும் பேரப்பிள்ளை குஸ்ரூவுக்கும் இடையே மோதல் ஆரம்பித்தாகிவிட்டது. வாழ்க்கையை ஒரு களியாட்டமாக ஜஹாங்கீர் கடத்திக்கொண்டிருந்தது கண்டு கடுப்பில் இருந்த அக்பர் பாதுஷா, பேரப்பிள்ளைகளான குஸ்ரூ, குர்ரம் மீது சற்று அதிகமாகவே பாசம் காட்டினார். குறிப்பாக, ஜஹாங்கீரின் மூத்த மகனான குஸ்ரூவுக்கு, அக்பர் தந்த முக்கியத்துவத்தைக் கண்ட பலர், ஜஹாங்கீரால் பட்டத்துக்கு வரமுடியுமா என்றுகூடச் சந்தேகப்பட்டார்கள். உச்சக்கட்டமாக, அக்பரின் கடைசிக் காலத்தில் அவருக்கு எதிரிலேயே ஜஹாங்கீரும் குஸ்ரூவும் மோதிக்கொண்ட ஒரு நிகழ்ச்சியும் நடந்தது!
ஒருநாள், அரண்மனை மைதானத்தில் நடந்த விளையாடடுப் போட்டிகளை உப்பரிகையில் அமர்ந்தவாறு ரசித்துக் கொண்டிருந்தார் அக்பர் பாதுஷா. திடீரென என்ன தோன்றியதோ, ‘‘சலீமின் (ஜஹாங்கீர்) பிரத்தியேக யானையும் குஸ்ரூவின் யானையும் சண்டையிடட்டும்… எது ஜெயிக்கிறது என்று பார்ப்போம்!’’ என்று ஆணையிட்டார் அரசர். மைதானத்துக்குள் வரவழைக்கப்பட்ட இரு யானைகளும் பிளிறிக்கொண்டு பயங்கரமாக மோதின. யார் கண்டது? ஜஹாங்கீர் யானை தோற்றிருந்தால், இதுதான் சாக்கு என்று ‘‘எதுவுமே சரிப்படவில்லை! உன் யானைக்கூடத் தோற்றுவிட்டது. உனக்கு எதற்கு மகுடம் வேண்டிக் கிடக்கிறது?’’ என்று சொல்லிவிட்டு, குஸ்ரூவை அழைத்து ‘‘இந்தா அரியணை!’’ என்று ஒருவழியாக அறிவித்துவிட நினைத்தாரோ என்னவோ! ஆனால், விதியின் விளையாட்டு வேறுவிதமாக அமைந்துவிட்டது. ஜஹாங்கீரின் யானை மோதிய மோதலில் தடுமாறிக் காயத்துடன் விழுந்தது குஸ்ரூவின் யானை. அதைத் தொடர்ந்து நடந்ததுதான் யாரும் எதிர்பாராத நிகழ்ச்சி!
வாளை உருவிக்கொண்டு ஜஹாங்கீரும் 17 வயது நிரம்பிய குஸ்ரூவும் நேரடியாகச் சண்டையிட ஆரம்பித்தனர். உடனே ஆவேசமாகக் குரலெழுப்பிக்கொண்டு மைதானத்துக்குள் புகுந்த இருதரப்பு ஆதரவாளர்களும், ஏதோ இந்தக் கால அரசியல் கட்சிகளுக்கு இணையாக அடிதடியில் இறங்கினார்கள். வயதான காலத்தில் தன் முன்னிலையிலேயே நடந்த இந்தக் கோஷ்டிச் சண்டையைப் பார்த்துத் திகைத்துப்போன அக்பர் பாதுஷா தன் அருகில் அமர்ந்திருந்த இன்னொரு பேரப்பிள்ளை குர்ரத்தைப் பார்த்து, ‘‘ஊரே சிரிக்கப் போகிறது. போய், உன் அப்பாவையும் அண்ணனையும் பார்த்து சண்டையை நிறுத்தச் சொல்!’’ என்று ஆணையிட… உப்பரிகையிலிருந்து குதித்த பதின்மூன்று வயது குர்ரம் ஓடிச்சென்று ஜஹாங்கீரையும் குஸ்ரூவையும் தடுத்ததோடு நில்லாமல், கடுமையாக ஒரு ‘லெக்சரும்’ கொடுத்துவிட்டுத் திரும்பினார்! இந்தக் குர்ரம்தான் பிற்பாடு ‘ஷாஹஜான்’ என்ற பெயரோடு, ஜஹாங்கீருக்குப் பிறகு பட்டத்துக்கு வந்து, உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹாலை உருவாக்கப் போகிறவர்!
அக்பர் இறந்த பிறகு, பதினேழு ஆண்டுகளுக்குப் பெரிதாக ஒரு கலவரமோ, பிரச்னையோ நாட்டில் வெடிக்கவில்லை என்பதையும், ஜஹாங்கீர் பாதுஷாவும் தன் பெரும்பாலான நேரத்தை ஓவியர்களோடும் பறவைகளோடும் செலவிட முடிந்தது என்பதையும் பார்க்கும்போது, எந்த அளவுக்குக் கச்சிதமான ஒரு சாம்ராஜ்யத்தை அக்பர் விட்டுவிட்டுப் போனார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது! இந்த அமைதியன சூழ்நிலைக்குக் களங்கம் ஏற்படுத்திய ஒரே விவகாரம் - ஜஹாங்கீர் - குஸ்ரூ மோதல் மட்டும்தான்!
ஆட்சிக்கு வந்தவுடனேயே மகன் குஸ்ரூவுக்கு ஆதரவாகச் செயல்பட்ட பிரதம அமைச்சர் மான்சிங்கை, வங்காளத்துக்கு கவர்னராக அனுப்பினார் ஜஹாங்கீர் பாதுஷா. வீட்டுச் சிறையில் எச்சரிக்கையாக வைக்கப்பட்டார் குஸ்ரூ.
தந்தையை மனதளவில் வெறுத்த குஸ்ரூ தப்பிக்கச் சமயம் பார்த்தார். அக்பர் பாதுஷாவின் நினைவு நாள் வந்தது. ‘தாத்தாவின் கல்லறைக்குச் சென்று வணங்கிவிட்டு வருகிறேன்’ என்று அனுமதி கோரிய குஸ்ரூவைப் ‘பாதுகாப்பாக’ அனுப்பி வைத்தார் ஜஹாங்கீர். போன இடத்தில் எப்படியோ கூட வந்தவர்களுக்கு டிமிக்கி தந்துவிட்டுத் தப்பித்த இளவரசர், தன் குதிரையை ஒரே மூச்சில் ஓட்டிக்கொண்டு, பஞ்சாப் பிரதேசம் போய்ப் பதுங்கிக் கொண்டார். குறுகிய காலத்தில் ஒரு படையையும் திரட்டிக்கொண்டு, தந்தையை எதிர்த்துப் போர் முழக்கம் செய்தார். முகம் சிவந்து போன ஜஹாங்கீர், மகனின் புரட்சியை அடக்க ஒரு பெரும் படையுடன் கிளம்பினார். கோபத்திலும் அவசரத்திலும் தன் ஓபியம் ‘ஸ்டாக்’கைக்கூட எடுத்துக்கொண்டு செல்ல மறந்து, போன இடத்தில் ஆட்களை அனுப்பி, எங்கிருந்தோ ஓபியம் வரவழைத்துக் கொண்டதாகச் செய்தி!
ஜலந்தர் அருகே சில மணி நேரமே நடந்த போரில் ெமாகலாயப் பெரும்படையிடம் ஈடுகொடுக்க முடியாமல் தோற்றுப்போனார் குஸ்ரூ. காபூலுக்குத் தப்பிக்க முடிவெடுத்து, விசுவாசமான சகாக்களான ஹுசேன்பெக் மற்றும் அப்துல் அஸீஸுடன் ஒரு ஓட்டைப் படகில் ஏறி, செனாப் நதியைக் கடக்கப் பார்க்க, பாதியில் படகு கவிழ்ந்தது. நீந்திச் சென்று, நதியின் நடுவில் இருந்த ஒரு திட்டின்மீது வெடவெடத்துக்கொண்டு உட்கார்ந்திருந்த இந்த மூவரையும் கைது செய்தது மொகலாயப் படை. குஸ்ரூவின் கைகளையும் கால்களையும் சங்கிலிகளால் பிணைத்து இழுத்துக்கொண்டு ஜஹாங்கீரின் முன் நிறுத்தினார்கள். தந்தையின் காலில் விழுந்து அழுத குஸ்ரூவைத் தூக்கி நிறுத்தி அணைத்துக் கொண்டாலும், உடனடியாக மனம் கலங்கி மன்னிப்பதற்கு ஜஹாங்கீர் என்ன ஹுமாயூனா?!
பாதுஷாவின் ஆணைப்படி, குஸ்ரூவின் சகாக்கள் இருவருக்கும் முழுசாக மாட்டுத் தோலை ஈரப்படுத்தி அணிவித்து, மூக்கு, கண்ணுக்கு மட்டும் சற்று இடைவெளி விட்டு இறுகத் தைத்தார்கள். பிறகு இருவரையும் கழுதைகள் மீது பின்புறம் பார்க்கும்படி அமர்த்தி, ஊர் வீதிகளில் தொடர்ந்து ஊர்வலமாகக் கொண்டு சென்றார்கள். கொளுத்தும் வெயிலில் மாட்டுத்தோல் உலர்ந்து, மேலும் உடல்களை இறுக்கியது. மாலையில் பாதுஷா முன் தோலைக் கத்தரித்துக் கழற்றிப் பார்த்ததில், குஸ்ரூவின் நண்பர்கள் இருவருமே அலறக்கூட முடியாமல் மூச்சுத் திணறி இறந்திருந்தார்கள்.
அதைத் தொடர்ந்து, கடைவீதியின் இருபுறமும் கூர்மையான முனையோடு வரிசையாகப் பொருத்தி வைக்கப்பட்ட மூங்கில் கம்பங்களில், குஸ்ரூவுக்கு ஆதரவாகப் போரிட்ட வீரர்களை உயிரோடு கழுவிலேற்றினார் ஜஹாங்கீர். முத்தாய்ப்பாக, குஸ்ரூவை ஒரு யானைமீது அமர்த்தி, அந்த வீதியில் நாள் முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக அழைத்துச் செல்லச் சொன்னார். பிறகுதான் பாதுஷாவுக்கு அமைதி திரும்பியது!
இது நடந்தது ஜஹாங்கீர் ஆட்சிப் பீடம் ஏறி ஆறு மாதங்களுக்குள். பிறகு ஓராண்டு காலத்துக்கு விலங்குகளால் பிணைக்கப்பட்டு, வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார் குஸ்ரூ. மகனின் மனதுக்குள் தகித்துக் கொண்டிருந்த புரட்சிக் கனல் அணைந்திருக்கும் என்று தப்புக்கணக்குப் போட்ட ஜஹாங்கீர், சங்கிலிகளிலிருந்து குஸ்ரூவை விடுவித்ததோடு நில்லாமல், ஒருமுறை வேட்டைக்கும் அழைத்துக்கொண்டு போக, போன இடத்தில் தந்தையைக் கொல்ல குஸ்ரூ போட்டிருந்த திட்டம் பாதுஷாவுக்குத் தெரியவந்தது. அரண்மனையில் உள்ள சுமார் நானூறு பிரபுக்களுக்கும் சில பல தளபதிகளுக்கும் இந்தச் சதித்திட்டத்தில் பங்குண்டும் என்றும் மன்னருக்குத் தகவல் வந்தது.
‘‘இந்தத் துரோகிகள் அத்தனை பேருக்கும் ஒட்டுமொத்தமாக நான் தண்டனை வழங்கினால், தேவையில்லாமல் ஊரெங்கும் பேச்சுக் கிளம்பும். ஆகவே, அவர்கள்மீது ஒரு கண் வைத்தால் போதும். மற்றபடி, எதுவும் பெரிதாகக் கண்டுகொள்ள வேண்டாம். சதித்திட்டத்தில் முன்னணியில் நின்றவர்களை மட்டும் (நாலு பேர்) பொறுக்கியெடுத்துப் பரலோகம் அனுப்புங்கள்!’’ என்று ரகசியமாக ஆணையிட்டார் ஜஹாங்கீர் பாதுஷா.
இதற்குப் பிறகும் மகனை முழு ஆளாக உலவவிடுவது ஆபத்து என்று முடிவெடுத்த ஜஹாங்கீர், குஸ்ரூவின் கண்களைப் பறித்துவிடும்படி தன் மெய்க்காவல் படையினரிடம் சொல்லி அனுப்பினார்.
சிறைப்பட்டிருந்த குஸ்ரூவின் கண்கள், பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியால் ஊடுருவப்பட்டன. (‘… மிகவும் வீறிட்டு அலறியதாகக் கேள்விப்பட்டேன்.. என்ன செய்வது..?!’ என்று சுயசரிதையில் குறிப்பிடுகிறார் ஜஹாங்கீர்!).
குஸ்ரூவின் பார்வையைப் பறிக்கப்போன மெய்க்காவல் படையிலும் குஸ்ரூ மீது பரிதாபப்பட்ட யாரோ ஓரிருவர் இருந்து வைக்க, இளவரசரின் ஒரு கண் மட்டும் அவ்வளவாகச் சேதப்படுத்தப்படாமல் இரக்கத்தோடு விடப்பட்டது.
பிற்பாடு மகன் நிலை கண்டு சற்றே நெகிழ்ந்த ஜஹாங்கீர், வைத்தியத்துக்கு ஏற்பாடு செய்தார். பாரசீகத்திலிருந்து இதற்காகவே வந்த பிரபல கண் வைத்தியரான ஹகீம் ஸாத்ரா தந்த சிகிச்சையில், குஸ்ரூவுக்கு ஒரு கண்ணில் பார்வை சற்றேறக்குறைய திரும்பி வந்துவிட்டது என்று கேள்வி. இருப்பினும், நடந்து முடிந்த இந்தப் பயங்கரங்களுக்கு பிறகு துவண்டு போயிருந்த இளவரசர், அப்பாவுக்கு எதிராகத் தலையே தூக்கவில்லை.
ஜஹாங்கீர் காலத்து வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கும்போது, பொதுவாகவே இளவரசர் குஸ்ரூவுக்கு நாட்டில் நிறைய ஆதரவாளர்கள் இருந்திருக்கின்றனர் என்பது புரிகிறது. அந்த அளவுக்கு நல்ல பெயர் எடுத்திருந்த மென்மையான இந்த இளைஞர், படிப்பறிவு மிக்கவர் மட்டுமல்ல… ஏகபத்தினி விரதம் காத்தவர் என்பதும் வியப்பான ஒரு செய்தி! எவ்வளவோ தகுதிகள் இருந்தும் விதிவசத்தாலோ, வேறு சில காரணங்களாலோ இலக்கை அடையாமல் அல்பாயுசில் இறந்தவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் உண்டு. வரலாற்று மூலையில் உள்ள அந்த ‘வாய்ப்பிழந்தவர்கள் பட்டியலில்’ குஸ்ரூவின் பெயரும் இடம்பெறுகிறது!
குஸ்ரூ சம்பந்தமாக வேறொரு துயரமான நிகழ்ச்சியும் நடந்தது…
மென்மையும் மூர்க்கத்தனமும் மாறி மாறி ஜஹாங்கர் பாதுஷாவை ஆட்டிப் படைக்கும் என்று முன்பே குறிப்பிட்டோம் அல்லவா? முன்பு குஸ்ரூ பஞ்சாப்புக்குத் தப்பிச் சென்றபோது, அவருக்குச் சீக்கிய மதகுருவான அர்ஜுன்சிங் உதவியதாகக் கேள்விப்பட்ட ஜஹாங்கீர், ‘ராஜதுரோகம்’ என்று குற்றம்சாட்டி, அந்த முதியவரைக் கைது செய்து, ஆக்ராவுக்கு இழுத்து வரச் செய்தார். குரு அர்ஜுன்சிங் செய்த ஒரே குற்றம் - குஸ்ரூவுக்கு ஐந்தாயிரம் தந்து உதவியது. விசாரணையில் அந்தப் பெருமகனார், ‘‘அரசரே! உங்கள் தந்தையார் அக்பர் பாதுஷா எங்களுக்கு எத்தனையோ உதவிகள் செய்திருக்கிறார். கையில் காசில்லாமல் அவருடைய பேரப்பிள்ளை தவித்தது கண்டு மனம் சங்கடப்பட்டது. ஆகவே, என்னிடம் இருந்த பணத்தைத் தந்து உதவினேன். மனிதாபிமான அடிப்படையில் செய்த உதவி அது. உங்களுக்கு எதிரான காரியம் என்று தயவுசெய்து தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்…’’ என்று மென்மையாக வாதிட, ‘போகட்டும்’ என்று இரண்டு லட்ச ரூபாய் அபராதம் விதித்துத் தண்டனை வழங்கினார் ஜஹாங்கீர்.
பெரியவரோ, ‘‘மன்னிக்க வேண்டும் சக்ரவர்த்தி! தவறு செய்தவர்களுக்குத்தான் அபராதம் விதிக்கப்படுவது வழக்கம். சிரமத்தில் இருந்த தங்களின் மகனுக்கு உதவி செய்ததை, நான் குற்றமாக எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?’’ என்று ஆட்சேபிக்க… ஜஹாங்கீருக்குக் கோபம் ஏறியது.
சீக்கிய மக்களின் பெருமதிப்புக்கும் வணக்கத்துக்கும் உரிய குரு அர்ஜுன்சிங்குக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது.
‘பொதுவில் ஒரு நல்ல மன்னர்’ என்று பெயரெடுத்து வந்த ஜஹாங்கீர், ஆட்சிக்குக் களங்கம் ஏற்படுத்திய நிகழ்ச்சி இது. ‘அதுவரையில் மிகவும் அமைதியாகவும் சாதுவாகவும் வாழ்ந்து வந்த சீக்கிய மக்கள், உத்வேகம் கொண்ட ஒரு போர் இனமாக மாறியது, இந்தக் கொலைக்குப் பிறகுதான்..!’ என்கிறது வரலாறு.
ஜஹாங்கீரின் ‘மற்றொரு பக்கம்’ போவோம்..!
பாரசீகத்தில் ஓரளவு வசதியான குடும்பத்தைச் சேர்ந்த கியாஸ்பெக் என்பவர் வாழ்க்கையில் மேலும் முன்னேற நினைத்துக் குடும்பத்தோடு இந்தியாவுக்குக் கிளம்பி வந்தார். அக்பர் பாதுஷாவிடம் பணிபுரிய வேண்டும் என்ற இவர் விருப்பம் நிறைவேறியது. நிர்வாகத்தில் திறமை காட்டிப் படிப்படியாக உயர்ந்து, ஜஹாங்கீர் ஆட்சியில் ‘இதி மத்-உத்-தௌலா’ (அரசாங்கத்தின் தூண்!) என்ற விருது பெயர் பெற்று, ஓர் அமைச்சர் அளவுக்கு அந்தஸ்தில் உயர்ந்தார் இவர். அற்புதமான அழகு ஜொலிக்கும் ஒரு மகளைப் பெற்ற திறமையும் இவருக்கு இருந்தது. அவள்தான் மெகருனிஸ்ஸா!
அரண்மனையில் இருந்த பிரதான பாரசீகத் தளபதிகளில் ஒருவரான ஷெர் அஃப்கன் என்பவரை மகளுக்குத் திருமணமும் செய்வித்தார் தந்தை.
ஆகஸ்ட் 1607-ல், வங்காளத்தில் தங்கியிருந்த மொகலாயப் படைக்குத் தளபதியாகப் போன ஷெர் அஃப்கன், அங்கு எதிரிகளால் கொல்லப்பட, இளம் விதவை மெகருனிஸ்ஸாவையும் அவளுைடய பெண் குழந்தையையும் சோகப்பட்டுப் போன தந்தை இதி மத்-உத்-தௌலா அரண்மனைக்கு வரவழைத்தார். மறைந்த அக்பர் பாதுஷாவின் ராணிகளின் மேற்பார்வையில் பத்திரமாக மகள் இருக்கட்டும் என்பது அவர் விருப்பம்.
நாலாண்டுகள் கழிந்தன. ஒரு நாள் அரண்மனையில் உள்ள பெண்கள் எல்லோரும் சேர்ந்து ‘லேடீஸ் கிளப்’ பாணியில் விற்பனைக் கண்காட்சி ஒன்றை ஜாலியாக நடத்தினர். பொழுதுபோக அரசகுலப் பெண்கள் இப்படி விதவிதமாக விழாக்கள் நடத்துவது, அப்போது வழக்கமாக இருந்தது. தவிர, பெரிய இடத்து இளைஞர்களும் பெண்களும் ஜாலியாகக் கலந்து பேசவும் குறும்பான சேஷ்டைகளில் ஈடுபடவும் இப்படிப்பட்ட ‘சந்தை’கள் உதவியாக இருந்ததுண்டு! மாலை மங்கிய குதூகலமான சூழ்நிலையில், பரிவாரத்துடன் கண்காட்சிக்கு சக்ரவர்த்தி ஜஹாங்கீர் வருகை தர - உற்சாக ஆரவாரம்! நண்பர்களிடம் தமாஷாகப் பேசியவாறு நடந்து கொண்டிருந்த ஜஹாங்கீரின் பார்வை, எதேச்சையாக ஒரு ஸ்டாலுக்குள் திரும்ப - அங்கே மேற்பார்வையில் இருந்தது மெகருனிஸ்ஸா! அந்தப் பெண்ணின் அழகில் உடனடியாகத் திக்குமுக்காடிப் போன ஜஹாங்கீரின் கால்கள், அதற்குமேல் நகர மறுத்ததாகக் கேள்வி! மனதைப் பறிகொடுத்து விட்டபின் மன்னர் மாதக்கணக்கிலா காத்திருப்பார்? விரைவிலேயே ஜஹாங்கீர்-மெகருனிஸா திருமணம் நடந்தது.
மகாராணியாக ஆன மெகருனிஸாவுக்குப் புதுப் பெயர் ஒன்றைப் பரவசத்துடன் சூட்டி மகிழ்ந்தார் ஜஹாங்கீர் - ‘நூர்மஹால்’ என்று! நூர்மஹால் என்றால் ‘அரண்மனையின் ஒளி’ என்று பொருள். அதோடு திருப்தியடையாத பாதுஷா, ‘நூர்ஜஹான்’ (உலகின் ஒளி!) என்று மனைவியின் பெயரில் ஒரு திருத்தம் கொண்டு வந்தார்!
அழகிலும் அறிவிலும் கிரேக்க கிளியோபாட்ராவுக்கு இணையான நூர்ஜஹான், ஜஹாங்கீரின் இதயத்தில் மட்டுமல்ல… வரலாற்றிலும் தனியிடம் பிடித்த வித்தியாசமான ஒரு பெண்மணி..!
Leave a comment
Upload