தமிழகத்தில், பல தலைசிறந்த பல்நோக்கு சிகிச்சை சிறப்பு மருத்துவமனைகள், குறைந்த கட்டணத்தில் தரமான சிகிச்சைகள், இந்தியாவின் தலைமை மருத்துவ மையம், சென்னை என தமிழகத்துக்கு பல பெருமைகள் உண்டு .
ஆனால், இப்போது இதை பற்றிய கதை எல்லாம் சொல்லப்போவதில்லை. இந்தக் கொரோனா இரண்டாம் அலையில் நாடே கொந்தளிப்பாகவும், பத்தாததற்கு மீடியாக்களின் உதவியோடு எங்கெங்கும் காணினும், இறந்த உடல்கள் என அல்லோகலப்பட்டு கொண்டிருக்கும் வேளையில் தமிழக அரசின் மருத்துவ சுகாதார கட்டமைப்பு மற்ற மாநிலங்களை விட இந்தக் கொரோனா பேரழிவை சமாளிக்கிறதா..? இல்லையா?
என்பதே கேள்வி.
ஏனென்றால், தமிழக மக்களின் காதுகளில் கொரோனா இரண்டாம் அலைக்கு முன் வரை... “திராவிடத்தால் வீழ்ந்தோம் மக்களே..!” என்ற கோஷம் சில வருடங்களாகவே பலமாக விழுந்து கொண்டிருந்தது.
கொரோனா இரண்டாம் அலை வந்து தற்போது... வடமாநிலங்களில், அதுவும் டெல்லியில் ஆக்சிஜன் இல்லாமல் நோயாளிகள் சாகிறார்கள் என்ற செய்திகளை பார்க்கும் போது டெல்லியிலுமா..? அட பாவிகளா..! நாட்டின் தலைநகரம்டா அது என்று வாயடைத்து, உள்ளூரிலிருந்து உலக நாடுகள் வரை அதிர்ச்சி அடைந்து கொண்டிருக்க... ஏன்யா தமிழகத்தில் ஆக்சிஜன் இல்லை என யாராவது நோயாளிகள் இறந்து போயிருக்கிறார்களா என்று பார்த்தால்... இதுவரை அப்படிப்பட்ட மரணங்கள் இங்கே இன்னும் பதிவாகவில்லை என்றே தெரிகிறது.
இப்போது கோவிட் சிகிச்சைக்காக... அனைத்து தமிழக அரசு மருத்துவமனைகள் மற்றும் 25 தனியார் மருத்துவ கல்லூரிகள், 110 தனியார் மருத்துவமனைகள் தயார் நிலையில் இயங்கி வருகின்றன.
ஜூன் 2020லேயே 1 லட்சம் எண்ணிக்கையில் லேசான அறிகுறிகள் உள்ள நோயாளிகளை அனுமதித்து, சிகிச்சை தரும் அளவிற்கு பள்ளிகள், கல்லூரிகள் என எல்லாவற்றையும் சிகிச்சை அளிக்கும் தற்காலிக முகாம்களாக மாற்றி தயாராக வைத்திருந்தது தமிழக அரசு.
அதுமட்டுமில்லாது... உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகள், ஹெச்ஐவி, டிபி பாதித்தவர்களுக்கு கூடுதல் கவனம் எடுத்து, அடுத்த 2 மாதங்களுக்கு தேவையான மருந்துகளை அவர்களுக்கு தடை இன்றி கிடைக்கவும் ஆவண செய்தது. கொரோனோ பாதித்த கர்ப்பிணிகளை, தொடர்ந்து கண்காணித்து அவர்களை முழுமையாக குணப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தது.
போன வருடமே புதிதாக 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்கள், 1508 லேப் டெக்னீஷியன்களை வேலைக்கு எடுத்தது.
முதல் அலையில் 22,682 படுக்கைகள் அதிகரித்தார்கள். 2-ஆம் அலையில் 12,000 படுக்கைகள் அதிகரிப்பட்டன. ஆக மொத்தம் 34,062 படுக்கைகள் தற்போது இருக்கின்றன .
வெகு விரைவில் ஆக்சிஜன் படுக்கையுடன் கூடிய படுக்கைகளை மேலும் அதிகரிக்க உள்ளனர். சென்னையில் - நந்தம்பாக்கம், வணிக வளாகத்தை 500 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட மருத்துவ முகாமாக மாற்ற சென்னை மாநகராட்சி திட்டம் போட்டு விரைவாக செயல்படுத்திக் கொண்டிருக்குகிறார்கள்.
இப்படி எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு, கடந்த வருடமே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தனர். அதே போல்... சென்ற வருடமே, மதுரையில் உள்ள அரசு ராஜாஜி தலைமை அரசு மருத்துவமனையில், எம்பி சு.வெங்கடேசன் முயற்சியில் அங்கே 20,000 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்ஸிஜனை சேமித்து வைக்கக்கூடிய கொள்கலன் நிறுவப்பட்டிருக்கிறது. மதுரை அரசு மருத்துவமனை,
இந்தியாவின் மிகப் பெரிய அரசு மருத்துவமனைகளில் ஒன்று. 2,500க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளுடன், இந்தியாவிலேயே 24 மணி நேரமும் அனைத்து பிரிவுகளிலும் மூன்றாம் நிலை மருத்துவ வசதி கிடைக்கும் வெகுசில மருத்துவமனைகளில் ஒன்றாகும்.
400 படுக்கைகளுக்கு மட்டும் கொடுப்பட்டிருந்த ஆக்ஸிஜன் இணைப்பு, தற்போது மேலும் 700 படுக்கைகளுக்குத் தரப்பட்டு.. மொத்தம் 1,100 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் இணைப்பு தரப்பட்டிருக்கிறது.
இது தவிர, மதுரையில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் தோப்பூரில் அமைந்திருக்கும் அரசு நெஞ்சக மற்றும் தொற்று நோய் மருத்துவமனையிலும், புதிதாக திரவ ஆக்சிஜன் கொள்கலன்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த இரண்டு பணிகளும், கொரோனாவின் முதல் அலை சற்று ஓய்ந்திருந்த காலத்தில் நடந்து முடிந்திருக்கின்றன.
அதாவது... போன வருடம் செய்த முன்னெடுப்புகளால், இப்போது
மதுரை அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படும் முன், காத்திருக்கும் அந்த குறைந்த நேரத்திலேயே கூட... அவர்களுக்கு தடையில்லாமல் ஆக்சிஜன் அளிக்கப்படுகிறது.
தற்போது... அங்கே செல்லும் ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு உடனே இடம் கிடைப்பதுடன், அங்கே இன்னும் 502 ஆக்சிஜன் பெட்கள் காலியாக இருக்கிறது. இது இந்த வார நிலைமை.
எந்தத் தமிழக அரசு மருத்துவமனையிலும், இடம் இல்லை என்று எந்த கொரோனா நோயாளிகளையும் விரட்டிவிடவில்லை. அத்தோடு தடுப்பூசி விவகாரத்தில் கூட... புதனன்று 1.50 கோடி தடுப்பூசிகளை நேரிடையாக கொள்முதல் செய்ய, தமிழக அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது.
தமிழக சுகாதாரக் கட்டமைப்பு என்பது ஏதோ முந்தாநாள் ஆரம்பிக்கப்பட்டு, நேற்று தொடங்கி இன்று செயல்படவில்லை. இது இரு கழகங்களின் ஆட்சிகளிலும், பல வருடங்களாக கொஞ்சம் கொஞ்சமாக... அதே நேரத்தில், மிக பலமாக கட்டமைக்கப்பட்ட ஒன்றாகும்.
இந்தியாவிலேயே மிகச் சிறந்த சுகாதார கட்டமைப்பு இங்குதான் இருக்கிறது.
மத்திய அரசு, இதற்காக மாநில அரசுகளுக்கு மிகக் குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு செய்தாலும், தமிழக அரசு, சுகாதார கட்டமைப்பிற்காகவே தனது நிதியை பெரும்பாலும் செலவழித்திருக்கிறது. இன்றும் செலவழித்து வருகிறது.
“Dravidian Model” என்று ஒரு புத்தகம் சமீபத்தில் வெளியானது. முனைவர் கலையரசன் மற்றும் முனைவர் விஜயபாஸ்கர் எழுதியது. NITI ஆயோக்கின் - ஆராய்ச்சி பிரிவில், தேசிய தொழிலாளர், பொருளாதார ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தில் பணி புரிந்திருக்கிறார் முனைவர் கலையரசன். இந்திய நாட்டின் வளர்ச்சி, சாதிக் கட்டமைப்பினால் எப்படி வீழ்ச்சியை சந்திக்கின்றதை எழுதியிருக்கும் இதில்.... ஒரு அத்தியாயத்தில், தமிழ்நாட்டில் சுகாதார கட்டமைப்பு பற்றி எழுதி இருக்கிறது...
அதன்படி...
1) இந்திய சராசரியோடு ஒப்பிட்டால், தமிழ்நாட்டின் ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கை மிக அதிகம்.
2) தமிழகத்தின் கிராமங்களில் இருக்கும் சுகாதார செவிலியர்களின் மூலம், மாநிலம் முழுவதும் கர்ப்பிணி பெண்களின் தகவல்கள் பதிவு செய்யப்படுகின்றன. கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும்.. சத்து மாத்திரைகள், ஊசிகள் முதற்கொண்டு பிரசவத்திற்கு பின் தாய் - சேய்க்கான நல உதவிகளை வழங்குகிறது.
3) ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான அத்தனை தடுப்பூசிகளும் இங்கே தான் போடப்படுகின்றன.
4) தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 27,215 பேருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம். ஆனால், இந்தியாவில் சராசரியாக 32,884 பேருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் தான் இருக்கிறது.
5) தமிழகத்தில் 12 கிராமங்களுக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கிறது. இந்தியாவில் 25 கிராமங்களுக்கு ஒன்றுதான் இருக்கிறது.
6) இந்தியாவில் 73% ஆரம்ப சுகாதார நிலையங்களில், மருத்துவர்களே கிடையாது. ஆனால், தமிழ்நாட்டில் 74 % ஆரம்ப சுகாதார நிலையங்களில், மருத்துவர்கள் இருக்கிறார்கள். அதிலும் 72 % பெண் மருத்துவர்கள் இருக்கிறார்கள்.
7) தமிழகத்தில் 95 % ஆரம்ப சுகாதார நிலையங்களில், பிரசவ வார்டு இருக்கின்றன.
8) தமிழ்நாட்டில் 10,000 பேருக்கு 17.7 மருத்துவர்கள் இருக்கிறார்கள்.
ஆனால், இந்தியாவில் 10,000 பேருக்கு 8.7 மருத்துவர்களே இருக்கிறார்கள்.
9) செவிலியர்கள், தமிழ்நாட்டில் 10,000 பேருக்கு 44.4 பேர் இருக்கின்றனர். இந்திய அளவில் 10,000 பேருக்கு 22 செவிலியர்களே இருக்கின்றனர். எல்லாம் இங்கே இருமடங்காக இருக்கிறது.
10) பீகாரை ஒரு உதாரணமாக எடுத்துக் கொண்டால்... அங்கே ஆரம்ப சுகாதார நிலையங்களில் 63% பணியிடங்கள் நிரப்ப படாமல் காலியாக இருக்கின்றன. தமிழக ஆரம்ப சுகாதார நிலையங்களில், காலிப்பணியிடங்கள் என்று பார்த்தால் வெறும் 7.6% தான்.
இப்படி ஆரம்ப சுகாதார நிலையங்களை உருவாக்கிவிட்டாலும், அதில் பணிபுரிய மருத்துவர்கள், செவிலியர்கள், பல் மருத்துவர்கள், மருந்தாளுநர்கள் ஆகியோர் தேவை. இப்படியான மருத்துவ பணியாளர்களை உருவாக்குவதில், நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் இருக்கிறது தமிழ்நாடு.
தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவ பணியாளர்களை தேர்வு செய்ய மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) 2012 இல் மக்கள் நல்வாழ்வு குடும்பநலத்துறையின் அரசாணை மூலம் தோற்றுவிக்கப்பட்டது. இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் மட்டும் தான் இப்படி ஒரு தேர்வு வாரியம் தனியாக அமைக்கப்பட்டது.
இந்திய அரசின் விதிகளின்படி, 2015ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 15 மருத்துவக் கல்லூரிகள் இருந்தால் போதுமானது. ஆனால், அப்போதே தமிழ்நாட்டில் 45 மருத்துவக் கல்லூரிகள் இருந்தன.
மாநிலத்தின் எல்லாப் பகுதிகளிலும் மருத்துவக் கல்லூரிகள் இருப்பதை அரசு உறுதி செய்திருக்கிறது. இப்படியாக சுகாதார கட்டமைப்பில் தமிழகம் மற்ற மாநிலங்களை விட மேம்பட்டதாக செயல் படுகிறது.
கலைஞர் அரசு புதிய தலைமை செயலகத்திற்காக கட்டிய ஓமந்தூரார் கட்டிடத்தை கேளிக்கை வளாகம், அருங்காட்சியகம் என மாற்றாமல், அரசு மருத்துவமனையாக மாற்றி அமைத்த ஜெ அரசின் தீர்க்கதரிசனத்தை என்னவென்று சொல்வது..??!!
இன்றைக்கு இந்த ஓமந்தூரார் அரசு மருத்துவமனை கோவிட் சிறப்பு மருத்துவமனையாக அருமையாக செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில், மாநில அரசுக்குச் சொந்தமான கட்டடங்களில் பாதி கட்டடங்கள் சுகாதாரம், கல்வி சார்ந்தவை என்று சொல்கிறார்கள். ஒரு மாநில அரசு, மக்களின் நலத்துக்காக, சேவை செய்ய நினைத்தால் அந்த அரசு நாட்டின் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளை நன்கு கட்டமைத்து வளர்ச்சி பணிகளை முடுக்கி விட வேண்டும்...
ஏன்... உங்க திராவிட சிஸ்டத்தில் குறைகளே இல்லையா.... என்றால் கண்டிப்பாக இருக்கிறது. லஞ்சம், ஊழல் என எல்லா அரசு துறைகளிலும் இருப்பதை போல இங்கேயும் இருக்கிறது. ஆனால், வட மாநிலங்களை போல... அரசு மருத்துவமனைகள் முன்னால் உயிருக்கு போராடும், கொரோனா நோயாளிகளை கைகளில் வைத்துக்கொண்டு காப்பாற்றுங்கள் என்று உறவுகள் கதறும் காட்சிகள்.., இறந்த உடல்களை சைக்கிளில் வைத்து எடுத்த போகும் காட்சிகள்.., சுடுகாட்டில் தகனம் செய்வதற்காக டோக்கன் கொடுத்து, இறந்த உடல்களை வரிசையில் படுக்க வைத்திருக்கும் கொடுமையான காட்சிகள், இடுகாடுகளில் இடம் இல்லாது, சாலை ஓரங்களில் நூற்றுக்கணக்கான பிணங்களை எரிக்கும் கண்ணீர் காட்சிகள், இங்கே தமிழகத்தில் இல்லை.
கடவுளே..! எப்பேர்பட்ட துயர காட்சிகள்..! பார்த்து கண்ணீர் சிந்தாதவர்களே இல்லை..! இது போன்று எங்குமே நடக்க கூடாதுதான்.. இதை எழுதும் போதே கண்ணீர் வருகிறது. இதற்கு இடையில் உயிரை காப்பாற்றி கொள்ள... குஜராத், உபி, ஒரிஸ்ஸா என பல வட மாநிலங்களிலிருத்து தனி விமானங்களில் தமிழகம் வந்து சேரும் வசதிப்படைத்த கொரோனா நோயாளிகள்....
எனக்குத் தெரிந்து, தமிழ்நாட்டிலிருந்து யாராவது... குஜராத் மாடல் அகமதாபாத்துக்கோ, டெல்லிக்கோ, மும்பைக்கோ கொரோனா சிகிச்சைக்கு விமானத்தில் சென்ற மாதிரி தெரியவில்லை. சுகாதார கட்டமைப்பில், தமிழகம் முன்னணியில் இருக்கிறது என்று பெருமை அடித்து கொள்வதற்காக இந்த தரவுகளை இங்கே அளிக்கவில்லை. ஆனால், “குஜராத் மாடல்”, “நீட் இல்லாது உருவான தரமற்ற தமிழக மருத்துவர்கள்”, “திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்று சொல்லப்பட்ட அத்தனையும் பொய் குற்றச்சாட்டுகள் என்று நிரூபணம் ஆகியுள்ளது. திராவிடத்தால் தமிழகம் வீழவில்லை.. தன் மக்களை வாழ வைப்பது மட்டுமல்லாமல்... வெளி மாநிலங்களிலிருந்து உயிர் பிழைக்க ஓடி வருபவர்களையும் சேர்த்து, இந்த திராவிடம் தான் காப்பாற்றி வருகிறது.
தமிழக சுகாதார கட்டமைப்பை, இந்தியா முழுவதும் பின்பற்றி உருவாக்கி இருத்திருந்தால்... இன்று ஆயிரக்கணக்கான உயிர்கள் வடமாநிலங்களில் காப்பாற்ற பட்டிருக்கும் என்பதே கசப்பான உண்மை.
Leave a comment
Upload