சரித்திர சாதனை செய்யுங்கள்...
தேர்தல் முடிந்து விட்டது... மே இரண்டாம் தேதி, முதல்வர் நாற்காலி யாருக்கு என்பது உறுதியாகிவிடும். ஜெயலலிதா, கருணாநிதி என்ற இருவரும் ஆளுமைமிக்க தலைவர்கள் என்று சொல்லப்பட்டாலும், பரஸ்பரம் இருவரும் ஒருவரை ஒருவர் எதிரிகளாக தான் பார்த்தார்கள்.
கருணாநிதி தீயசக்தி என்றார் ஜெயலலிதா. பதிலுக்கு கருணாநிதியும் ஜெயலலிதாவை தரக்குறைவாக விமர்சித்தார். அவர்கள் இறப்பு என்பது தனிமனித அரசியல், துதிப்பாடல், சாடல் என கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது என்றே சொல்லலாம். அதனால் தான் எடப்பாடியாரின் தாயார் இறந்தபோது, திமுக தலைவர் ஸ்டாலின் அவருக்கு அனுதாபம் தெரிவித்து, துக்கம் விசாரிக்க எடப்பாடியின் வீட்டுக்குப் போனார். இதெல்லாம் கருணாநிதி - ஜெயலலிதா காலத்தில் சாத்தியமில்லாத ஒன்றாகத்தான் இருந்தது.
சட்டசபையில் கூட நாகரீகமான விமர்சனங்கள் தான், கடந்த 3 ஆண்டுகளாக இருந்தது. ஜெயலலிதாவை திருப்திபடுத்த வேண்டும் என்று கருணாநிதியை தரக்குறைவாக பேசுவது போன்ற அவலங்கள் எல்லாம் இந்த மூன்று ஆண்டுகள் சட்டசபையில் இல்லை. எனவே யார் ஆட்சிக்கு வந்தாலும், பெரும் இலவசமாகத் தந்து மக்களை ஏமாற்றாமல்... சரியான கல்வி, தரமான சாலை, சுகாதாரமான மருத்துவமனைகள், லஞ்சம் இல்லாத ஆட்சி என்று ஒரு புதிய ஆட்சி முறையை தமிழகத்திற்கு ஆட்சிக்கு வருபவர்கள் அறிமுகப்படுத்த வேண்டும்.
ஒரு சில கம்யூனிஸ்ட் வேட்பாளர்களைத் தவிர, திராவிட கட்சிகள் மற்றும் அவர்களின் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் எல்லோரும் கோடிஸ்வரர்கள் தான். அவர்கள் ஊழல் செய்து, ஊழல் பணத்தில் வாழ்க்கை நடத்த வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தேர்தல் ஆணையத்திடம் சொல்லியிருக்கும் சொத்துக் கணக்கே இதற்கு சாட்சி. அப்படி இருக்கும்போது... ஊழல் செய்து பணம் சம்பாதிப்பதால் என்ன பயன். ஊழல் செய்யாமல் மக்கள் நலனே என்று மக்களுக்கான திட்டங்கள், மக்களுக்கு சரியாக போய் சேர்ந்தால்... அடுத்த தேர்தலில் ஓட்டுக்கு பணம் தந்தால் கூட வேண்டாம் என்று சொல்லிவிட்டு, மக்கள் உங்களையே தேர்ந்தெடுப்பார்கள். அந்த அளவுக்கு மக்கள் நலனில் அக்கறையுடன் உங்கள் செயல்பாடு இருந்தால், இது சாத்தியம்தான்.
இரண்டு திராவிட கட்சிகளும் பணக்கார கட்சிகள் தான். தேர்தல் ஆலோசனைக்கே பல கோடிகள் செலவு, தனி விமானத்தில் பவனி வருவதும் என்று இருப்பதால் எந்தக் கட்சிக்கும் பணம் பஞ்சமில்லை. எனவே தமிழகத்தின், கடன் சுமையை குறைக்க ஆக்கபூர்வமாகச் சிந்தித்து, லஞ்சம் இல்லாத ஆட்சியை தந்தால், கடன் சுமை நிச்சயம் குறையும்.
சாதனைப் பட்டியல் என்று சொல்லி கண்மாய் தூர் வாரினோம், சாலை போட்டோம், மருத்துவமனை கட்டினோம் என்ற வெற்று காகித அறிவிப்புகளே. மழை வெள்ளத்தில் சாலைகள் பல் இளிப்பதும், தூர் வாராத நீர்நிலைகளில் மழைநீர் செமிக்க முடியாமல் வீணாகும், மருத்துவமனையில் போதிய வசதிகள் இன்றி மக்கள் அலைக்கழிக்கப்படுவதும் தான், 50 ஆண்டு கால திராவிட ஆட்சி சாதனை. புதிய ஆட்சியாளர்கள் அந்த சரித்திர சாதனையை மாற்றி எழுத வேண்டும்.
மக்கள் முட்டாள்கள் அல்ல... மக்களே எஜமானர்கள் என்பதை முதல்வர் வேட்பாளர்களுக்கு, மே 2ஆம் தேதி வாக்காளர்கள் தெளிவு படுத்தி விடுவார்கள்.
Leave a comment
Upload