அமெரிக்கா
கடித்து வைத்த வெள்ளை மாளிகை நாய்.
சில வாரங்களுக்கு முன் வெள்ளை மாளிகையில் குடியேறிய முதல் நாய் என்று சாம்ப், மேஜர் என்று அதிபர் பைடனின் நாய்கள் பற்றி விலாவாரியாக பார்த்தோம்.
இந்த வாரம், பாவம் ஒரு பாதுகாப்பு அதிகாரியை கடித்து வைத்து விட்டது மூன்று வயதான மேஜர் என்ற அமெரிக்க அதிபரின் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்.
இந்த நாய்களை கண்டால் பயம் என்பதால் தான் வெள்ளை மாளிகையில் அதிபர் பைடனின் பதவியேற்புக்கு கூட போகமால் தவிர்த்தேன் என்று எழுதியிருந்தேன். நான் பயந்தது சரியாகத்தான் போய் விட்டது. நல்ல காலம் அரை கிலோ கறியை எடுத்திருக்கும். தற்போது வந்த செய்திகளின் படி இந்த நாய்களை பைடனின் ஊரான வில்மிங்டனுக்கு அனுப்பி விட்டனராம்.
இது தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா என்பது இன்னமும் தெரியவில்லை. அதற்குப் பிறகு தான் வெள்ளை மாளிகைக்கு செல்வது பற்றி முடிவெடுக்க வேண்டும்.
என் மனைவிக்கும் நாயென்றால் படு பயங்கர கிலி. ஆனால் ஒரு முத்திரை வைத்திருக்கிறாள்.
இரண்டு கை கட்டை விரலையும் சுண்டு விரலில் மடக்கி வைத்திருந்தால் நாய் கிட்டே வராதாம்.
இது அந்த பாதுகாப்பு அதிகாரிக்கு தெரியாமல் போனது துரதிருஷ்டமே.!
ஆங்.... அந்த கடிபட்ட பாதுகாப்பு அதிகாரியைப் பற்றியும் தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
டெக்ஸாசில் எல்லை கடக்கும் அகதிகள்.
மெக்சிகோவிலிருந்து டெக்ஸாஸ் எல்லை வழியாக அமெரிக்கா வந்து சேரும் அகதிகள் தூக்கிப் போடும் ஒரு வினோத குப்பை அவர்கள் கையில் கட்டியிருக்கும் கலர் கலரான பிளாஸ்டிக் காப்புகள்.
இது நம்மூரில் கலர் கலராக கைகளில் கட்டிக் கொள்ளும் காசிக் கயிறு போல நம்பிக்கை சம்பந்தப்பட்டது அல்ல.
உண்மையில் டெக்ஸாஸ் எல்லையில் உள்ள ரியோ கிராண்டே வேலி செக்டார் 34,000 சதுர மைல்கள் உள்ள இடம். அங்கு வந்து சேரும் மெக்சிகோ அகதிகளின் கைகளில் தான் இந்த பிளாஸ்டிக் வளையங்கள் சிகப்பு, நீலம் வெள்ளை போன்ற வண்ணங்களில் ஸ்பானிய மொழியில் “வருகை” “நுழைவு” என்று எழுதி எல்லை தாண்டியதும் கடாசி எறியப்படுகிறது.
அமெரிக்க போலீஸ் விசாரிக்கையில் இதெல்லாமே போதை மருந்து மற்றும் ஆள் கடத்தும் கும்பல்களின் சங்கேத வளையங்கள் என்று தெரிய வருகின்றன. இந்த வளையங்கள் மூலம் பல தரவுகள் அந்த குழுக்களுக்கிடையே பகிரப்படுகின்றனவாம்.
இந்த கும்பல்களுக்கு இது ஒரு வியாபாரம். ஆள் கடத்தும் கும்பல்கள் போதை கும்பலுக்கு கப்பம் கட்டினால் தான் எல்லையில் கடத்தவே விடுவார்கள்.
இது பற்றி பல முறை எழுதியிருக்கிறேன். அமெரிக்க பொருளாதாரம் உலகை ஆகர்ஷிக்கும் வரை இந்த எல்லை தாண்டலும், போதை மருந்து கும்பலும், ஆள்கடத்தும் கும்பலும் தொடர்ந்து இருக்கும்.
ஒரு விசை வங்காளதேசத்தின் எல்லையிலும் விசாரிக்க வேண்டும். இது போல சங்கேத வளையங்களோடு மேற்கு வங்கத்திற்கும் அகதிகளை சட்ட விரோதமாக கடத்தும் கும்பல்கள் இருக்கக் கூடும்.
லாஸ் ஏஞ்சலிஸ்
அவரை விதை குளியல்
உங்களுக்குத் தெரிந்த ஒரு உணவகம் நொடித்துப் போய் வியாபாரத்தை விட்டு விட்டு செல்கிறார்கள் என்றால் என்ன செய்வீர்கள் ?? மிஞ்சிப் போனால் வருத்தப்படுவீர்கள்.
ஆனால் லாஸ் ஏஞ்சலிஸில் இருக்கும் ஒரு உள்ளூர் மெக்சிகோ உணவகம் வியாபாரத்தில் நொடித்துப் போய் மூடும் நிலை வந்ததும் அதன் உரிமையாளரின் நண்பர் ஸ்டண்ட்மேன் ஒரு யோசனை சொன்னார்.
மெக்சிகோ உணவகத்தில் மிகவும் பிரபலமான பீன் ( அவரை விதை சூப் ?) உணவை ஒரு தொட்டியில் ஊற்றி அதில் 24 மணி நேரங்கள் அமர்ந்து போக வரும் ஆட்களிடம் இந்த உணவகத்தை காப்பாற்றுங்கள் என்று சொல்லி விளம்பரம் செய்திருக்கிறார்.
இது குறித்து அவர் சொல்கையில் என்னிடம் நிறைய பேர் கேட்டார்கள் நிஜமாகவே இதை செய்யப் போகிறாயா என்று ?? ஆமாம் என் நண்பனின் உணவகத்தை காப்பாற்ற, ஒரு விளம்பரத்திற்காக நிச்சயம் செய்யப் போகிறேன் என்றேன். சரி 24 மணி நேரத்தில் அவசரமாக பாத் ரூம் போக வேண்டுமென்றால் எப்படி என்று இழுத்ததற்கு… ஒன்றாக இருந்தால் அதற்கு ஒரு டியூப் போல வைத்து ஏற்பாடு இருக்கிறது. மற்றொன்றாக இருந்தால் யோசிக்கணும். பார்க்கலாம் என்று பதில் சொல்லியிருக்கிறார்.
நல்ல காலம் மனிதரின் நண்பர் மெக்சிகோ உணவகம் வைத்திருக்கிறார். அதுவே இந்திய உணவகமாக இருந்தால் காரமான சாம்பாரில் 2 மணி நேரம் உட்கார்ந்திருப்பதே பெரிய தண்டனையாக இருந்திருக்கும்.
ஆசியா
சவூதி அரேபியா.
அல் ஹத்லவுல். பெண் விடுதலைப் போராளி.
உண்மையில் பெண் விடுதலை என்றால் அரபு நாடுகளில் கிலோ என்ன விலை தான்.!
ஒரு சின்ன உதாரணம்.
சவூதி அரேபியாவில் பெண்கள் கணவரோ அல்லது சகோதரரோ இல்லாமல் தனியே எங்கும் போக அனுமதி இல்லை.
இதில் தனியாக கார் ஓட்டுவதற்கு அனுமதியே கிடையாது. (தற்போது இந்த சட்டம் தளர்த்தப்பட்டு வருகிறது)
இப்படி இருக்கையில் சில வருடங்களுக்கு முன் இது குறித்து குரலெழுப்பத் துவங்கினார் அல் ஹத்லவுல் என்ற பெண்மணி.
அது மட்டுமல்லாது ஆண்களுடன் தான் பெண்கள் எங்கு வேண்டுமானாலும் வெளியே செல்ல வேண்டும் என்ற சட்டத்தை எதிர்த்தும் போராடத் துவங்கினார்.
2014ல் அவர் துபாயிலிருந்து சவுதி அரேபியாவுக்கு தனியாக வண்டி ஓட்டிக் கொண்டு வரும்போது கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.
73 நாட்கள் சிறையில் இருந்த பின் பிணையில் வெளியே வந்தார் அல் ஹத்லவுல். பின்னர் மீண்டும் கலவரத்தில் ஈடுபட்டதாக 2018ல் கைது செய்யப்பட்டு தற்போது விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.
அவருக்கு கொடுத்த தண்டனைக் காலம் ஆறு ஆண்டுகள். மூன்று ஆண்டுகளுக்கு பின் விடுதலையான ஹத்லவுல் மிச்சமிருக்கும் தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்திருக்கிறார். அவருக்கு இன்னமும் ஐந்து ஆண்டுகள் பயணம் செய்ய தடை இருக்கிறது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் பைடனின் தலைமையில் மனித உரிமை மீறல்களுக்காக சவுதி அரசின் மீது கடுமை காட்டி வருகிறது அமெரிக்கா. அரசியல் கைதிகளை விடுவிக்க வற்புறுத்துகிறது.
சரி இப்படி பொத்தி பாதுகாத்து வைக்கப்படும் பெண்களுக்கு ஒரு வேளை இந்த நாட்டில் வன்கொடுமைகள் நடப்பது கிடையாதா என்று தேடினால் அந்த ஆசையிலும் மண். சட்டங்கள் கடுமையாக இருந்தாலும் அதுவும் நடக்கிறது. இன்னும் கொடுமை என்னவெனில் ஒரு வேளை பெண் வன்கொடுமை செய்யப்படும் போது அவள் தனியாக ஒரு வேற்று ஆணுடன் இருந்தாள் என்று தெரிந்தால் அவளுக்கும் கசையடியும் சிறைத்தண்டனையும் உண்டாம்.
அடிப்படை சுதந்திரம் அனுவளவும் இல்லாத சவூதி பெண்களுக்காக போராட எந்த போராளிகள் இந்தியா உட்பட, உலகில் தோன்றுகிறார்கள் என்று காத்திருந்தால், ஒருவர் கூட குரல் கொடுப்பதாக இல்லை. ஹூம்.
அரபுக் கவிதைகள் எழுதி அங்கும் ஒரு பாரதி பிறந்தால் தான் நடக்கும். !!
ஐரோப்பா
நடந்தது அமெரிக்காவில் என்றாலும் ஐரோப்பா சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் இங்கு......
எதற்கெடுத்தாலும் ஏகாதிபத்தியம் பாசிசம் அது இது என்று கூவும் நம்மாட்களுக்கு சமீபத்திய அரச குடும்பத்திலிருந்து வெளியேறிய இளவரசர் ஹாரீ மற்றும் அவரது மனைவி மேகனின் பேட்டி அதிர்ச்சியை கொடுத்திருக்கும்.
அரச குடும்பத்தின் நிற வெறி தெரிய வர, அவர்களுக்கு உலகம் முழுவதும் பெரிய தலைகுனிவு ஏற்பட்டிருக்கிறது.
இராணி எலிசபெத் இருக்கும் வரை அரச குடும்பத்தின் மானம் மரியாதை கொஞ்சம் தாங்கும் என்று வலைஞர்கள் கருத்துச் சொல்லியிருக்கிறார்கள்.
அப்படி என்ன சொன்னார் ஹாரி. ??
நான் மாட்டிக் கொண்டேன். ஆனால் மாட்டிக் கொண்டது தெரியாமல் மாட்டிக் கொண்டேன். என் தந்தை என் சகோதரர் வில்லியம் மாட்டிக் கொண்டார்கள். அவர்களால் இந்த அரச சிறையிலிருந்து விடுபட முடியாது. எனக்கு அவர்கள் மேல் பரிதாபம் தான் வருகிறது.
ஹாரீயின் தாய் டயானா எப்படி நடத்தப்பட்டார் எப்படி இறந்தார் என்ற வடு அவரது மனதில் நீங்காமல் இருக்கிறது.
ஓப்ரா வின்ஃப்ரேவுக்கு அளித்த ஹாரியின் பேட்டி பல பிரிடிஷ் அரச குடும்பத்தைப் பற்றிய பிம்பங்களை தகர்த்தெறிந்திருக்கிறது.
மேகன் ஒரு அமெரிக்க நடிகை. அவரைப் பற்றிய பல கட்டுக் கதைகளை பிரிட்டிஷ் பத்திரிகைகள் எழுதிய போதும அதை எதிர்த்து எந்த ஒரு கருத்தும் அரச குடும்பம் தெரிவிக்கவில்லை.
அவர் நடிகை என்பதாலா அல்லது அவர் சுத்தமான வெள்ளையர் இல்லை என்பதாலா தெரியவில்லை. மேகன் ஒரு கலப்பின பெண். அமெரிக்க ஆப்ரிக்க பெற்றோர்களுக்கு பிறந்தவர். இது தான் அரச குடும்பத்தின் பிரச்சினை. ஹாரியிடம் மேகனின் பாதுகாப்பு செலவுகளுக்கு தம்படி தரமுடியாது என்று மறுத்து விட்டதாம் அரச குடும்பம்.
அரண்மனை என்பது சுகவாசம் அல்ல அது ஒரு பெரும் சிறை என்பது தான் இந்த பேட்டியின் சாராம்சம்.
மேகன் மார்கலுக்கு ஹாரி இரண்டாவது கணவர். முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டு தான் ஹாரியை பல வருடங்கள் கழித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டிருக்கிறார் மேகன்.
மேகன் கருவுற்றிருக்கும் போது அதாவது அவர்களது மகன் ஆர்ச்சி பிறக்குமுன் அரச குடும்பத்தில் கேட்டார்களாம் குழந்தை கறுப்பாக இருக்குமா எப்படி என்று ?
அந்த அளவிற்கு அவர்கள் இந்த திருமணத்தை உள்ளூர வெறுத்திருக்கிறார்கள்.
இத்தனையையும் பொறிந்து தள்ளி விட்டார் ஹாரீ.
இந்த பேட்டியின் மூலம் வருமானத்திற்கு கஷ்டப்படும் ஹாரி மேகன் தம்பதிக்கு ஏதேனும் வரும்படி உண்டா ?? ஹுஹூம். ஆனால் பேட்டியெடுத்த வின்ஃப்ரே ஓப்ரா நிறுவனத்திற்கு எட்டு மில்லியன் டாலர்கள் வரை வருமானமாம்.
மேகனின் வாழ்க்கையில் எனக்கு பிடித்த ஒரு சம்பவம்.
மேகன் 11 வயதாக இருக்கும் போது அமெரிக்காவில் வந்த பாத்திரம் தேய்க்கும் விளம்பரம் ஒன்று பெண்களுக்காக பிரத்யேகமாக என்று விளம்பரம் செய்திருந்தது. மேகன் தன் தந்தையிடம் சொன்னார் பெண்களுக்காக என்று இப்படி விளம்பரம் செய்தால் குழந்தைகள் என்ன நினைப்பார்கள் பெண்கள் இதற்காகத் தான் பிறக்கிறார்கள் என்று நினைக்க மாட்டார்கள். அவர் தந்தை சொன்னார் இதை ஒரு கடிதமாக உனக்கு தெரிந்த பிரபலங்களுக்கு எழுது என்றார். ஹிலாரி கிளிண்டன் முதல் பல விளம்பர கம்பெனிகளுக்கும் இதை எதிர்த்து எழுதினார் மேகன்.
பிராக்டர் அண்ட் காம்பிள் நிறுவனம் அடுத்த சில வாரங்களில் இந்த விளம்பரத்தை பெண்களுக்காக தயாரிக்கப்பட்டது என்பதை அமெரிக்க மக்களுக்காக தயாரிக்கப்பட்டது என்று மாற்றினார்கள்.
ஆனால் அதே மேகன் தற்போது அரச குடும்பத்தின் கொடுமைகளை யாரிடம் எழுதி கேட்பது ????
ஆஸ்திரேலியா / நியூசிலாந்து
தவறான லேண்டிங்.
நியூசிலாந்தில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்க்கும் சிசிடிவி காமிராக்களில் சமீபத்தில் ஒரு அல்பட்ராஸ் பறவை ஒன்று வேகமாக வந்து தரையிறங்கும் காட்சி படமாகி வைரலாகியிருக்கிறது.
பாவம் தமிழ்நாட்டுக்கு வந்து டாஸ்மாக்கில் சரக்கு அடித்திருக்கும் போல.
பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட் வீக்கு என்பதைப் போல வேகமாக வந்து தவறாக தரையிறங்கி கைப்புள்ள ஸ்டைலில் விடுரா விடுரா..இதெல்லாம் ஒரு மேட்டரா என்பது போல நடந்து போகிறது.
தன்னுடைய கீழ விழுந்தாலும் அலகில் மண் ஒட்டவில்லை மேட்டர் உலகம் முழுவதும் வைரலானது தெரிந்தால் பாவம் வருத்தப்படும்.
ஆப்பிரிக்கா
நைஜீரியா
ஆப்பிரிக்கா என்றாலே பள்ளியில் குழந்தைகள் கடத்தப்பட்ட செய்திகள் தான்.
ஆனால் இந்த முறை ஒரு ஆறுதல்.
சென்ற வாரம் நைஜீரியாவில் கடத்தப்பட்ட (இரண்டாவது முறை இந்த வருடத்தில்)
317 மாணவிகளில் 38 பேரை தவிர அனைவரையும் விடுவித்து விட்டது தீவிரவாதக் குழு.
இன்னமும் விடுவிக்கப்படாத 38 மாணவிகளையும் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகிறது.
இது போன்று மாணவ மாணவிகளை கடத்தும் கும்பல்களை மொத்தமாக உட்கார வைத்து தீ வைத்துக் கொளுத்த வேண்டும் என்று ஆத்திரம் வருவதை தவிர்க்க முடியவில்லை.
தென் அமெரிக்கா
அர்ஜெண்டினா
அர்ஜெண்டினா அருகே ஒரு ஆழ்கடல் ஆராய்ச்சி.
மூழ்கிய கப்பலில் சில பேரல்களில் பீர்களை வைத்து மூழ்க வைத்திருக்கிறார்கள்.
சில மாதங்கள் கழித்து அதை எடுத்து பதப்படுத்தி பீர் தயாரிப்பதாக திட்டம்.
ஆனால் குறிப்பிட்ட நாளில் அந்த பேரல்களைப் போய் எடுக்கப் போகும் போது அதை யாரோ அபேஸ் செய்து கொண்டு போனது தெரிய வந்திருக்கிறது.
அங்கு ஆழ்கடல் டைவிங் பள்ளி வைத்திருக்கும் கார்லோஸ் என்பவருக்கு அதைப் பார்த்ததும் அழுகையே வந்து விட்டதாம்.
அவர் தான் இந்த ஆழ்கடல் கப்பலில் புதைத்து வைக்கும் திட்டத்தை தன்னுடைய பீர் கம்பெனி நண்பர் எடுவார்டோ ரிகார்டோவுக்கு இரண்டு வருடங்களுக்கு முன் சொல்லியிருக்கிறார்.
இன்னும் சில பீர் கம்பெனிகளும் இந்த திட்டத்தில் சேர்ந்திருக்கிறார்கள். கடைசியில் வெண்ணை திரண்டு வரும் போது யாரோ பீர் பேரலை லவட்டிக் கொண்டு போயிருக்கிறார்கள்.
இந்த ஆழ்கடல் திட்டம் ஓரு புதிய பீர் ஆராய்ச்சிக்காக செய்யப்பட்டது. ஹுவான் வின்செண்ட் என்ற பீர் தயாரிப்பாளர் சொல்லும் போது திருடர்கள் இந்த பேரலைக் கொண்டு சென்றிருந்தாலும் இதை குடித்து கொண்டாட செய்ய முடியாது. அதை பதப்படுத்தி மற்ற பீருடன் கலந்து தொழிற்சாலையில் புது வகை பீராக செய்யும் வரை அது ஒரு பழுப்பான, பீருக்குண்டான வீரியம் இல்லாமல் ஒரு வகை கச்சா திரவம் அவ்வளவு தான். தூக்கி தான் எறிய வேண்டும் என்றிருக்கிறார்.
தேர்தல் வருது தேவைப்படும் என்று நம்ம 'கட்சி' ஆளுங்க யாராச்சும் அர்ஜெண்டினா ஆழ்கடல் பக்கம் போயிருப்பாய்ங்களோ ????
ராம்
Leave a comment
Upload