சென்டிமெண்ட்...
சென்டிமெண்ட் இது நம்பிக்கை தொடர்பான ஒரு வார்த்தை. நம் நாட்டில் பலர் சென்டிமென்ட்டுடன் வாழ்பவர்கள் தான். கிரிக்கெட் வீரர்கள் சிலர், ஒரு குறிப்பிட்ட ஷூ அல்லது மேல் சட்டை, பேட் போன்றவற்றை சென்டிமென்டாக தொடர்ந்து அதையே பயன்படுத்துவார்கள். அந்த சட்டை கிழிந்து போயிருக்கும், அந்த ஷூ கூட அரதல் பழசாக இருக்கும்... ஆனால், சென்டிமென்டாக அதைப் பயன்படுத்துவார்கள். காரணம், அதை அவர்கள் உபயோகித்த போது சதம் அடித்து இருப்பார்கள் அல்லது அதிக விக்கெட் எடுத்து இருப்பார்கள். இதே போல சில கிரிக்கெட் வீரர்கள் சென்டிமென்டாக ஆடத் துவங்குவதற்கு முன் வானத்தை பார்ப்பதை நேரலையில் நான் பார்த்திருக்கிறேன்.
என் மனைவி சென்டிமென்ட் உடன் சேர்ந்து வாழ்பவள். ஒரு குறிப்பிட்ட பெண்மணி எதிரே வந்தாள்... உடனே, “நீங்க போங்க... உங்க காரியம் நிச்சயம் இன்னிக்கு நடக்கும்” என்பாள். உண்மையில் அது நடந்தும் இருக்கிறது என்பதும் உண்மை. ஆனால், அந்தக் குறிப்பிட்ட பெண்மணி பாவம், என்னிடம் அடிக்கடி வந்து தனக்கு வரவேண்டிய பணம் பாக்கியை வாங்கித் தரச் சொல்லி கடிதம் எழுதச் சொல்வார். தொலைபேசியில் பேசுவார்... பணம் வந்ததும் “ரொம்ப தேங்க்ஸ்... உங்கள டிஸ்டர்ப் பண்ணிட்டேன்” என்பார். அந்தப் பெண்மணி எங்களின் சென்டிமென்ட் அடையாளம் என்பதை அப்போது நினைத்துப் பார்ப்பேன். இதேபோல் ஒரு முறை, திருப்பதியில் ஒரு டீக்கடையில் பிள்ளையாரை தண்ணீரில் போட்டு வைத்திருந்தார்கள். அந்த தண்ணீரில் காசும் போட்டு வைத்திருந்தார்கள். அதைப் பார்த்ததும் என் மனைவி எங்கள் வீட்டுப் பிள்ளையாரையும் ஒரு கிண்ணத்தில் தண்ணீரில் போட்டு வைத்தார். நான் வெளியே போகும் போதெல்லாம், இந்தப் பிள்ளையாரைப் பார்த்து ஒரு ஹலோ சொல்லிவிட்டு போவேன். இதுவும் என் மனைவி எனக்கு சொல்லிக் கொடுத்ததுதான்.
என் மனைவியைப் பொறுத்தவரை... இந்த சென்டிமென்ட் பழக்கத்தை யான் பெற்ற இன்பம் இந்த வையகம் பெறுக என்று தன் பக்கத்து வீட்டு பெண்மணியிடம், இந்த தண்ணீர் பிள்ளையார் மேட்டரை சொல்ல... அவர் உடனே அதை செயல்படுத்த... சில தினங்களுக்குப் பிறகு, “மாமி ரொம்ப தேங்க்ஸ்... இப்ப என் வீட்டுக்காரருக்கு நல்லா பிஸ்னஸ் நடக்குது” என்று சொன்னார். அப்போது, என் மனைவி சொன்னது இப்போதும் என் காதில் ஒலிக்கிறது. “நம்பிக்கையுடன் நடக்கும் என்ற முனைப்புடன் நாம் ஒரு காரியத்தை செய்தால், அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும். கடனே என்று அல்லது அவர்கள் சொல்கிறார்கள் நாம் செய்வோம் என்று ஏனோ தானோ என்று செய்யக்கூடாது” என்றாள். இது பொதுவான விதிதான். ஆனால், அவள் சொன்ன இடம்... சொன்னவிதம்.. இரண்டையும் பொருத்திப் பார்த்தால், அது உண்மைதான் என்பது எனக்கு புலப்பட்டது.
நாம் எடுக்கும் எல்லா முயற்சிகளையும், நடக்கும் என்ற நம்பிக்கையுடன் ஈடுபட்டால்... வெற்றி நிச்சயம் கிடைக்கும். இதை அவ்வையார், திருவள்ளுவர் வரை எல்லோரும் சொல்லி இருக்கிறார்கள். கீதை கூட பலனை எதிர்பார்க்காதே என்று சொல்கிறது. ஆனால், முயற்சி செய்யாதே என்று சொல்லவில்லை.
இதுபோன்ற சென்டிமென்ட் விஷயத்திற்கு என் மனைவி என்னைத்தான் பயன்படுத்துவாள். காரணம், நீங்கள்தான் சிரத்தையுடன், நம்பிக்கையுடன் செய்வீர்கள் என்று என்னைத் தட்டிக் கொடுப்பாள். சுந்தரகாண்டம் படியுங்கள் என்பாள்... படிப்பேன். விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள் என்பாள்... செய்வேன். இந்தக் கோயிலுக்கு போய் குபேரனை சேவியுங்கள் என்பாள்... போய் சேவிப்பேன். அப்போது நடக்கும் ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை, இதனுடன் தொடர்புபடுத்தி... அதனால்தான் இது என்பாள். முதலில் அவளது ஆர்வத்துக்கு தடை போடக்கூடாது என்று செய்தேன். காலப்போக்கில் எனக்கும் சென்டிமென்டாக வழக்கமாக்கிக் கொண்டேன். நான் ஈடுபாடுடன் அவள் சொல்வதை எல்லாம் செய்யத் தொடங்கினேன்.
நான் பல திவ்ய தேசங்களுக்கெல்லாம் போயிருக்கேன்... மதுரா, துவாரகா இந்த இரண்டு புண்ணிய ஸ்தலங்களிலும், குட்மார்னிங் என்பதையே “ராதே கிருஷ்ணா” என்று சொல்வார்கள். சைக்கிள் ரிக்ஷா ஓட்டுநர் “ஓரம்போ” என்பதைக் கூட“ராதே ராதே” என்று தான் சொல்வார். அவர்கள் மூச்சில், பேச்சில்... கிருஷ்ணரும் ராதையும் நீக்கமற நிறைந்து இருப்பதை பார்த்தேன். அதை அவர்கள் பயபக்தியுடன் சொல்வார்கள்.
துவாரகா கோவிலில் பல பணக்காரர்கள் கார்களில் வந்து, அந்தக் கோயிலில் பெறுக்குவது, குப்பையை அள்ளுவது, தரையை சுத்தம் செய்வது போன்ற காரியங்களை செய்வார்கள். அவர்களிடம் பேசியபோது... அன்றைய நாளை தொடங்குவதற்கு முன், கிருஷ்ணருக்கு தங்களால் ஆன சேவையை செய்து விட்டுத்தான், தங்கள் வேலையை ஆரம்பிப்பார்கள் என்றார்கள். இது கூட ஒரு மாதிரியான சென்டிமென்ட் தான். ஆனால், நம்பிக்கையுடன் உள்ள சென்டிமென்ட். அவர்கள் கிருஷ்ணருடன் பாட்டில் பேசுவார்கள்... கிருஷ்ணரை சோர் என்று சொல்லி ஒரு பாட்டுப் பாடுவார்கள். இந்தியில் சோர் என்றால் திருடன் என்று அர்த்தம். அந்தப் பாட்டில் “டேய் திருடா... நீ நேற்று என் வீட்டுக்கு வந்து, நாங்கள் உனக்காக வைத்திருந்த பலகாரங்களை எங்களுக்குத் தெரியாமல் நீ வந்து சாப்பிட்டுவிட்டு போனது தெரியும்” என்று அந்தப் பாடல் இருக்கும். இதை நான் ஒருவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.
நம்மைப் பொருத்தவரை நமக்குத் தேவை, தேடல்.. இரண்டுமே இருக்கிறது. அது கிடைக்க நமக்கு ஏதாவது வழி கிடைக்குமா என்று தேடுகிறோம்... அப்போதுதான், நாம் இதுபோன்ற சென்டிமென்ட்க்கு ஆளாகிறோம். பிரார்த்தனைக்கு நிச்சயம் பலன் கிடைக்கும் என்று சொல்வார்கள், என் மனைவிக்கு அந்த நம்பிக்கை உண்டு. இப்போது அது என்னுள்ளும் புகத் துவங்கிவிட்டது.
Leave a comment
Upload