தொடர்கள்
Daily Articles
பத்மஸ்ரீ விருது வென்ற வில்லிசை கலைஞரின் நினைவலைகள்... - 06 - கலைமாமணி பாரதி திருமகன்

20210208224509805.jpg

கலைவாணர் கம்பெனி - இன்றைக்குத் திரைவானில் பிரபலமாகிய பலப்பல திரை நட்சத்திரங்கள், நட்சத்திரங்களாக இருந்து நாட்டை ஆள்பவர்களாகப் பதவி பெற்ற பெரிய பெரிய அரசியல் தலைவர்கள், கலைவானர் காலத்துக்குப் பிறகு திரை இசை அமைப்பாளராக அந்தப் பாசறையின் அனுபவத்தினால் உயர்ந்தவர்கள் என எல்லோரும் டிஸ்கஷனில் அமர்ந்து பேசுவார்களாம்.

கலைவாணர் நிகழ்த்த இருக்கும் வில்லிசை அரங்க நிகழ்வு - இதுதான் டிஸ்கஷன்…

கதை - காந்தி மகான் கதை…
தலைப்பு - ‘காந்தி வந்தார்’…
அதில், குறிப்பாக – காந்திஜியின் இயக்கமான ஆடுராட்டையின் இயக்கத்துக்கு கவிஞர் எழுதிய பாடல்!

இப்போது - நீங்கள் படிக்கவிருக்கும் பின்வரும் பாடல், தலைமுறை வென்ற கலைமுறையான பாடல். காரணம் - அன்று என்.எஸ்.கே பாடி, பிறகு என் அப்பா பாடி, அதன்பின் நான் பாடி, இன்று… என் மகன் கலைமகன் பாடியும் வெற்றி காண்கிறது.

காரணம்… கருப்பொருள் - தேச பக்தி; பாட்டுக்குள் இருக்கும் ‘தமிழ்’ என்றும் இளமை மாறா சீரிளமைத் தமிழ்..!

ஆடு ராட்டே… ஆடு ராட்டே…
சுழன்று சுழன்று சுழன்றாடு ராட்டே..!
ஜாதிகள் இல்லையென்று ஆடு ராட்டே…
சத்தியம் வெல்லுமென்று ஆடு ராட்டே..!
நீதியே தெய்வமென்று ஆடு ராட்டே…
நினைவு பலிக்குமென்று ஆடு ராட்டே..!
நூலெழுதும் மேதையினும் ஆடு ராட்டே…
நூல் நூற்போர் மேலோரென்று ஆடு ராட்டே..!
போடும் முடிச்சுகளில் ஆடு ராட்டே…
பொறுமையைக் கற்றுத் தந்தாய் ஆடு ராட்டே..!

- இப்பேர்ப்பட்ட பாடல்கள் கலைவாணர் கம்பெனியின் கலைஞர்களுக்குப் பாடப் பாட, பெருமை தந்த பாடல்..!

‘காந்தி வந்தார்’ அரங்கேற்றம் நடந்த இடம் - சங்கீத கலாநிதி எம்.எஸ். அம்மா வீடு. சதாசிவம் ஐயா, ராஜாஜி, கல்கி போன்றோர் - கவிஞர் எழுதிய, கலைவாணர் பாடிய வில்லிசைக்கு மாபெரும் ரசிகர்கள்..!

2021020822480665.jpg

கலைவாணர் குழுவில் ஆட்களை தேர்வு செய்வதில் ஒரு நகைச்சுவை நடக்குமாம்… அதாவது, தன்னைவிட சற்று ‘கலர்’ குறைந்தவராகவோ, சற்று மாநிறமாக உள்ளவர்களையே கலைவாணர் தேர்வு செய்வாராம்!
பின்னாளில் இதுகுறித்து கவிஞர் கேட்டதற்கு, ‘‘ஏலே… சுப்பு ஆறுமுகம்..! உனக்கு புதுசா மேடை விஷயம் ஒண்ணு சொல்லித் தாரேன்… எப்பவுமே நம்மைச் சுத்தியிருக்கிற கலைஞர்கள் சற்று ‘கலர்’ குறைவா இருந்தாத்தான், நாம பளிச்சுனு தெரிவோம்… புரிஞ்சுக்கிட்டியா..?’’ என்று கலைவாணர் சொல்லி சிரித்தாராம்.

அரங்கேற்றம் - பிரமாதம்..!
தொடர்ந்து பலப்பல நிகழ்ச்சிகள்…
புதுப்புது பாடல்கள்..!
சுதந்திரத்தைப் பற்றிய புதுப் பாடல்…
சிந்துபைரவி ராகம்..!

‘‘சொந்தமான நமதிந்தியாவில் பிறர்
வந்து புகுந்து சுகம் சுரண்டாவண்ணம்
வந்த சுதந்திரமே…’’

மேடையில் நிகழ்ச்சி நடக்கிறது… கலைவாணர் பல்லவி பாடுகிறார். இது சரணம் - திடீரென்று சரணத்தில் ஒரு வார்த்தையை கவிஞர் தைரியமாகத் திருத்துகிறார் பேனாவினால், கலைவாணர் பல்லவி பாடும்போதே..!

‘சொந்தமான’ என்ற வார்த்தையை மாற்றி, ‘சந்தையான நமதிந்தியாவில்’ என்று மாற்றினார் கவிஞர்..!

கலைவாணர் பழைய வார்த்தையைப் பாடினாரா… அல்லது, புது வார்த்தையைப் பாடினாரா..?

- காத்திருங்கள்