மாம்பழம்...
உணவாகவும் மருந்தாகவும் செயல்பட்டு, நிறைவான ஊட்டச்சத்துக்களையும் அள்ளித் தருபவை பழங்கள். காய்கறிகளில் கூட சமைக்கும் போது சத்துகள் குறைந்து விடுகிறது. பழங்கள் நம் உடலுக்கு வேண்டிய சத்துக்களை அப்படியே தருகிறது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அன்றாடம் ஒரு பழம் என்று வாழ்ந்து வந்தவர்கள் நம் முன்னோர்கள்.
இன்று நாம் பீட்சா, பர்கர் யுகத்தில் இருக்கிறோம். அதனால் பழங்களை தினசரி உணவில் எடுத்துக் கொள்வதையே இன்றைய காலகட்டத்தில் பலர் மறந்துவிட்டார்கள். பழங்களில் மிகக் குறைந்த அளவில் கொழுப்புச்சத்தும், அதிக அளவில் நார்ச்சத்தும் இருக்கிறது. இதனால் இதய நோய், உடல் பருமன், செரிமான குறைபாடு, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது.
இப்போது பழக் கடைகளில் எல்லாவித பழங்களும், அநேகமாக வருடத்தின் எல்லா நாட்களிலும் கிடைக்கின்றது. விலை பற்றிக் கவலைப்படாமல் பழங்களை நாம் வாங்குவதற்குக் காரணம் அவை அனைத்தும் உயர்ந்த சத்துள்ளவை என்ற எண்ணம்தான். ஆனால் நம் நாட்டில் நமக்காகவே விளையும் விலை குறைவாய் கிடைக்கும் பழங்களை சாப்பிட நாம் மறக்கிறோம். நம் நாட்டில் விளையும் பழங்களுக்கு மருத்துவ குணங்கள் ஏராளம். வெளிநாட்டு பழங்களை மறந்து நம் நாட்டு பழங்களையும் சாப்பிடுவோம்.
அந்தந்தப் பருவத்துக்கு ஏற்ப இயற்கையே பல பழங்களை வாரி வழங்கி இருக்கும் நிலையில், தினமும் தொடர்ந்து பழங்களைச் சாப்பிடுவது மிகவும் சிறந்தது.
அதிகச் சுவையானதும், மருத்துவக் குணம் நிறைந்ததும், அனைவரையும் ருசியில் மயங்க வைக்கும் மந்திரப்பழமான மாம்பழத்தின் பலன்கள் என்னென்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்....
இந்தியாவின் வேதங்களில் மாம்பழத்தைக் கடவுள்களின் உணவாகக் குறிக்கப்பட்டுள்ளன. மேங்கோ (Mango) என்ற ஆங்கிலப் பெயர் ‘மாங்காய்’ என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து உருவானதே ஆகும்.
இந்தியாவின் தேசியக் கனி (National Fruit) மாம்பழம் (Mango) ஆகும். உலகிலேயே மக்கள் அதிகமாக உண்ணும் பழம் மாம்பழம் மட்டும்தான்.
தமிழ் இலக்கியத்தில் மா, பலா, வாழை ஆகிய மூன்றையும் முக்கனிகள் எனக் கூறப்பட்டுள்ளன. பழங்களின் அரசன் மாம்பழம்! அதனால்தான் தமிழர்கள், முக்கனிகளில் இதற்கே முதல் இடம் கொடுத்தார்கள்.
நாரதர் சிவனிடம் கொடுத்த ஞானப்பழமும் பண்டைய இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது.
‘மாம்பழமாம் மாம்பழம்… மல்கோவா மாம்பழம்… சேலத்து மாம்பழம்… தித்திக்கும் மாம்பழம்...’ என மாம்பழத்தை குறிப்பிட்டு பாடலே எழுதப்பட்டுள்ளது.
“மாதா ஊட்டாத சோறை மாங்கனி ஊட்டும்” என்ற பழமொழி உண்டு. கோடைகாலம் வரும் முன்னே மாம்பழம் வரும் பின்னே என்பார்கள்… இதோ வெயில் தலை காட்டத் துவங்கிவிட்டது. மாம்பழ வாசனையும் வீசத் தொடங்கிவிட்டது. அதிகச் சுவையானது; மருத்துவக் குணம் நிறைந்தது. உலக அளவில் மாம்பழத்துக்கு மவுசு அதிகம்.
மாம்பழம் நாவில் நீர் ஊறவைக்கும் சுவை கொண்டது மட்டுமல்ல; உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல அருமையான குணங்களைக் கொண்டதும் கூட....
மாம்பழத்தில் ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ் எனப்படும் எதிர் ஆக்சிகரணிகள் நிறைய அடங்கியுள்ளன.
மாம்பழத்தில் வைட்டமின் ஏ உயிர்ச்சத்து நிறைந்துள்ளது.
மாம்பழத்தில் பல வகை இருந்தாலும் சில குறிப்பிட்ட ரகங்கள் அலாதியான சுவை கொண்டவை. அல்ஃபோன்சா, மல்கோவா, இமாம்பசந்த், சேலம் பெங்களூரா, நடுசாலை(பீதர்), சேலம் குதாதாத் ஆகிய மாம்பழங்கள்.
பொதுவாக 100 கிராம் மாம்பழத்தில், நீர்ச்சத்து 76 கிராம், நார்ச்சத்து 0.6 கிராம், தாதுப்பொருட்கள் 0.4 கிராம், கொழுப்பு 0.4 கிராம், புரதம் 0.5 கிராம், மாவுப் பொருள் 17 கிராம், சுண்ணாம்புச் சத்து 13 மில்லி கிராம், இரும்புச்சத்து 1.2 மில்லி கிராம், கரோட்டின் 72 கலோரி, தையமின் 0.8 மில்லி கிராம், நியாசின் 0.8 மில்லி கிராம், ரிபோஃபிளேவின் மற்றும் விட்டமின் சி 0.08 மில்லி கிராம் இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
மாம்பழம் சூட்டுத் தன்மை உள்ளது, அதிகமாக சாப்பிட்டால் உஷ்ணம் உடம்பில் ஏறும் என்பதை மருத்துவ விஞ்ஞானம் ஏற்கவில்லை.
மாம்பழத்தின் மருத்துவக் குணங்கள்:
மாம்பழத்தில் அதிக அளவில் இருக்கும் கரோட்டின் சத்து, பார்வைத் திறனை மேம்படுத்தும். கண் நோய்களில் இருந்து காக்கும்.
மாம்பழம் வயிற்றில் அமில சுரப்பு உள்ளவர்களுக்கும் நிவாரணம் அளிப்பதோடு, சரியான ஜீரணத்திற்கும் உதவுகிறது.
மாம்பழம் சாப்பிடுவதால் இருதயம் வலிமை பெறும், பசியை தூண்டும், மற்றும் கல்லீரல் குறைபாடுகள் விலகும்.
மாம்பழத்தில் ஆன்டிஆக்ஸிடென்ட் அதிகமாக இருப்பதால், புற்று நோய் மற்றும் வயது மூப்பு போன்றவற்றிற்கு காரணமாக இருக்கும் உயிரணுக்களை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.
இரத்த உற்பத்திக்கு மாம்பழங்கள் பெரிதும் உதவுவதோடுல்லாமல் உடல் வளர்ச்சியடையவும், ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது. உடல் தோல், நிறம் வளமை பெறுகிறது. முகத்தில் பொலிவு உண்டாகும்.
மாம்பழத்தை சாப்பிடுவதால் ஆண்கள் மற்றும் பெண்கள் மலட்டுத்தன்மை குணமடையும்.
கர்ப்பிணிகள் மாம்பழம் சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தை நல்ல ஊட்டத்தோடு பிறக்கும்.
பெண்களின் மாதவிடாய் பிரச்சினைக்கும் மாம்பழம் சாப்பிடுவது நல்லது. நல்ல கனிந்த மாம்பழங்களை சாப்பிட்டால் மாதவிடாய் ஒழுங்குபடும். அதே சமயம் பெண்கள் மாதவிலக்கு நாட்களில் காலை நேரத்தில் சாப்பிட்டால், உதிரப்போக்கு அதிகரிக்கும். எனவே அளவோடு சாப்பிடுவது நல்லது.
சிறுநீர் பையில் உள்ள கற்களைப் படிப்படியாகக் கரைக்கும் ஆற்றலும் மாம்பழத்திற்கு உண்டு. இரவில் மாம்பழம் சாப்பிட்டு விட்டுத் தூங்கினால், அடுத்த நாள் மலச்சிக்கல் இல்லாமல் இருக்கும்.
தேர்வு காலங்களில் படிக்கும் குழந்தைகளுக்கு மாம்பழத் துண்டுகளை சாப்பிட கொடுத்தால், அதிலிருக்கும் குளுடாமின் அமிலம் படிப்பில் கவனம் செலுத்துவதற்கும், ஞாபக சக்திக்கும் ஊட்டமாக அமைகிறது.
மாம்பழத்தில் கிளைசீமிக் இன்டெக்ஸ் எனப்படும் சர்க்கரை அளவை உயர்த்தல் குறியீடு குறைவாகவே உள்ளதாக கண்டறிந்துள்ளனர். அதாவது மாம்பழத்தை சாப்பிட்டால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். இன்சுலின் உபயோகித்து வருபவர்கள் உங்கள் மருத்துவரின் ஆலோசனையின் படி அளவாகச் சாப்பிடுங்கள்.
பயனுள்ள சில குறிப்புகள்:
சிலர் மாம்பழங்கள் பழுப்பதற்கு கால்சியம் கார்பைடு (Calcium Carbide) கற்களை பயன்படுத்துகிறார்கள். இந்த கற்கள் பயன்படுத்தப்பட்டால், மாம்பழத்தில் இருக்கும் சத்துகள் குறைந்துவிடும்.
இயற்கையான முறையில் மாம்பழத்தைப் பழுக்கவைக்க... அதனை பேப்பரில் சுற்றிவைத்து, ஓர் அட்டைபெட்டியில் போட்டு, ஊதுவத்தி ஏற்றிவைக்க வேண்டும். அதன் புகை அந்தப் பெட்டிக்குள்ளேயே இருக்கும்படி காற்றுப் புகாதவாறு மூடிவைக்க வேண்டும். இரண்டு நாட்களில் மாங்காய்கள் பழுத்துவிடும்.
எந்தப் பழமாக இருந்தாலும், அதை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து நன்கு கழுவி சாப்பிட பழத்தின் மேல் இருக்கும் ரசாயனம், பூச்சி மருந்து நீங்கிவிடும்.
அடுத்தவாரம் உடலுக்கு அதிக பலத்தைத் தரும் பலாப்பழம் பற்றி தெரிந்துக் கொள்வோம்!!
Leave a comment
Upload