வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு...
எடப்பாடி தேர்தல் ஜுரத்தில் அவசர கோலம் அள்ளித் தெளித்தோம் என்ற கதையாக, அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 59 இல் இருந்து 60 ஆக நிர்ணயித்து உயர்த்தி அறிவித்திருக்கிறார். இதற்குக் காரணம்... 36 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வுபெற இருந்தார்கள்... அவர்களுக்கான செட்டில்மெண்ட் பண்ணுவதற்கான போதிய நிதி ஆதாரம் இல்லை என்பதால் இந்த உத்தரவு என்பதுதான் உண்மை. சென்ற ஆண்டு 58 வயதாக இருந்ததை, 59 ஆக உயர்த்தியதற்கும் இதே காரணம்தான். இதனால் வேலையின் தரம், பணித்திறன் இரண்டும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் அரசுக்கு மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தும். ஆனால், இதைப்பற்றியெல்லாம் இந்த அரசு அக்கறை பட்டதாக தெரியவில்லை.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில், 25 வருடம் பதிவு செய்தும் தனக்கு வேலை இன்னும் கிடைக்கவில்லை என்பதை ஒரு பெரிய கட்டவுட் வைத்து, ஒரு இளைஞர் தனது ஆதங்கத்தை தெரிவித்திருந்தார். இது தமிழகத்தில் உள்ள பல்வேறு இளைஞர்களின் ஆதங்கமும், கவலையும் இல்லையா? இதற்கு அரசு, எவ்வளவு முக்கியத்துவம் தந்து கவனித்திருக்க வேண்டும். ஆனால் அரசு, அப்படி எதுவும் செய்யவில்லை. வேலை வாய்ப்பகத்தில் கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் பதிவு செய்திருக்கிறார்கள். வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மேல் நம்பிக்கை இல்லாமல் எத்தனையோ லட்சம் பேர் பதிவு செய்யாமலும் இருந்திருக்கிறார்கள். ஆனால் ஆட்சியாளர்கள் இதுபற்றி எல்லாம் எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது நிச்சயம் கவலைக்குரியது.
எல்லாக் கட்சிகளும் தேர்தல் அறிக்கையில் புதிய வேலைவாய்ப்பை உருவாக்குவோம் என்று ஒவ்வொரு முறையும் சொல்கிறது. ஆனால், நாட்டில் வேலைவாய்ப்பின்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அரசு வேலைவாய்ப்பு என்பது லஞ்சம் தந்தால் தான் என்பதில் தற்போது பரவலாகப் பேசப்படும் உண்மை. இது தவிர பொய்யாக வேலை வாய்ப்புத் தருகிறேன் என்று பணத்தை வாங்கி ஏமாற்றும் அரசியல் தலைவர்கள் மீது வரும் புகார்கள் தனிக்கதை. இதைப் பற்றி எல்லாம் ஆட்சியாளர்கள் எந்த கவலையும் இல்லாமல் இருப்பது என்பது கூட ஒருவகையான தேச துரோகம் தான்.
இப்படி ஓய்வு பெறும் வயதை அதிகமாக்கி, அதன் மூலம் அரசு இளைஞர்களின் வேலைவாய்ப்பை தட்டிப் பறிக்கிறது. இது ஒரு மோசமான முன்னுதாரணம், இதற்கு இளைஞர்கள் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள்.
Leave a comment
Upload