தொடர்கள்
கவர் ஸ்டோரி
கமல் ராகுல் கூட்டணி?!!! - விகடகவியார்

திமுக தனது தேர்தல் பிரச்சாரத்தில் செலுத்தும் அதீத கவனம் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு பற்றி பேசுவதில் இல்லை என்பது தான் திமுகவின் கூட்டணி கட்சிகளின் ஒட்டுமொத்த கருத்து. சமீபத்தில் திருமாவளவன் ஸ்டாலினை சந்தித்து, “தம்பிகள் 20 தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறார்கள்” என்று திருமா சொன்னபோது... ஸ்டாலின் அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை. ஆனால், திருமாவுக்கு கிடைத்த தகவல் அவருக்கு 5 இடங்கள் ஒதுக்கப்படும். அதில் இரண்டு இடங்களில் திமுக சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதுதான். மதிமுக தலைவர் வைகோ தொகுதிப் பங்கீடு பற்றி பேசியபோது ஸ்டாலின் அவரிடம் பிடி கொடுத்து பேசவில்லை.

20210022164350508.jpeg

கம்யூனிஸ்டுகள் இரண்டு பேரும் சந்திக்க முயற்சி செய்தபோது... ‘இப்போது வேண்டாம் அப்புறம் பார்க்கலாம்’ என்று அவர்களை தவிர்த்து விட்டார் ஸ்டாலின். நேற்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கூட ஸ்டாலின் முதலில் கூட்டணி பற்றியோ.. வேட்பாளர் பற்றியோ.. தொகுதி பங்கீடு பற்றியோ... இங்கு யாரும் எதுவும் பேச வேண்டாம் என்று முன்பாகவே அவர்களை உஷார் செய்து விட்டார். இதற்கெல்லாம் காரணம் - பிரசாந்த் கிஷோர் என்கிறார்கள் திமுகவினர்.

பிரசாந்த் கிஷோர் ‘திமுக 200 இடங்களில் போட்டியிட வேண்டும், அப்போதுதான் நாம் முழு மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடிக்க முடியும். சிறிய கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு வற்புறுத்துங்கள். காங்கிரசுக்கு சென்றமுறை 41 தொகுதிகள் தந்ததில் அவர்களால் எட்டு இடங்களில் தான் வெற்றிபெற முடிந்தது, எனவே அந்த எட்டு இடங்களை நாம் அவர்களுக்கு தந்து விடுவோம்.’ இப்படியெல்லாம் பிரசாந்த் கிஷோர் யோசனை சொல்லியிருக்கிறார்.

20210022164547329.jpeg

இதற்கு ஏற்றாற்போல் புதுச்சேரி திமுக நிர்வாகிகள் ஸ்டாலினை சந்திக்கும்போதெல்லாம், ‘புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி தனது செல்வாக்கை இழந்துவிட்டது. அங்கு ஏகப்பட்ட கோஷ்டி மோதல்... இந்த முறை அவர்களுடன் கூட்டணி வைத்தால், நாம் வெற்றி வாய்ப்பை இழப்போம். கிட்டத்தட்ட 22 ஆண்டுகளாக புதுச்சேரியில் திமுக ஆட்சி வாய்ப்பை இழந்திருக்கிறது. இந்த முறை நாம் தனித்து போட்டியிடுவோம், ஆட்சி அமைப்போம்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

பிரசாந்த் கிஷோர் அங்கு காங்கிரஸை ஒதுக்க சொன்னது, புதுச்சேரியில் திமுக ஆட்சி அமைக்க ஆசையை தூண்டியது, எல்லாவற்றையும் சேர்த்து ஸ்டாலின் ஒரு முடிவு செய்தார். புதுச்சேரிக்கு நன்கு அறிமுகமான அரக்கோணம் தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனை புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளராக நியமித்தார். எல்லாம் சரியாக நடந்தால், புதுச்சேரிக்கு முதல்வராகும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும் என்று அவரை உற்சாகப்படுத்தி இருக்கிறார் ஸ்டாலின். இதைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன் புதுச்சேரி திமுக நிர்வாகிகள் கூட்டத்தை ஜெகத்ரட்சகன் கூட்டினார். அவருக்கு தரப்பட்ட தடபுடல் வரவேற்பே ஜெகத்ரட்சகனை புதுச்சேரி திமுக எந்த அளவுக்கு வசீகரிக்கிறது என்பது நன்கு தெரிந்தது. கூட்டத்தில் பேசியவர்கள் பெரும்பாலும் மூன்று விஷயங்களை பேசினார்கள். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. மாநில வளர்ச்சிக்கு எந்த திட்டமும் தீட்டப்படவில்லை. சட்டம் ஒழுங்கு சரியில்லை.

கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியை புதுச்சேரி திமுக இப்போது இப்படித்தான் பார்க்கிறது. புதுச்சேரி மாநில பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் ஒரு படி மேலே போய்... “சொர்க்க பூமியான புதுவையை பார்க்கும்போது எனக்கு வயிறு எரிகிறது... புதுவையில் பல ஆலைகள் மூடிக் கிடக்கின்றன, அதனால் பல குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றது என்றெல்லாம் நாராயணசாமி ஆட்சியை கடுமையாக சாடிய ஜெகத்ரட்சகன், இறுதியாக புதுச்சேரியில் முப்பது தொகுதியில் திமுக வெற்றி பெறாவிட்டால்... இதே மேடையில் நான் தற்கொலை செய்து கொள்வேன்” என்று சொல்லி தனது உரையை முடித்து ஆரவாரமான கைத்தட்டலை பெற்றார்.

2021002216442235.jpeg
திமுக தலைமையில் கூட்டணி என்பதையே புதுச்சேரி காங்கிரஸ் ஏற்கவில்லை... இது வேறு ஏதோ திட்டம் என்று நாராயணசாமி யோசிக்க ஆரம்பித்தார். இத்தனைக்கும் நாராயணசாமி சில திட்டங்களுக்கு கருணாநிதி பெயர் கூட வைத்தார். ஸ்டாலினுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்படியிருக்கும்போது திடீரென்று ஆட்சி சரியில்லை என்ற விமர்சனம்... வேறு ஏதோ நடக்கிறது என்பது அவருக்குத் தெரிய ஆரம்பித்தது. இதைத் தொடர்ந்து, இந்த விஷயம் ராகுல் காந்தியின் கவனத்திற்கும் எடுத்துச் செல்லப்பட்டது. அதன் பிறகு இந்த மாதம் 21ஆம் தேதி ராகுல் காந்தியை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி காங்கிரஸ் தலைவர், புதுச்சேரி பார்வையாளர் குண்டுராவ் முவரும் சந்தித்தனர்.

அப்போது நாராயணசாமி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜெகத்ரட்சகன் ஆகியோர் என்ன பேசினார்கள் என்பதை அவரிடம் சொன்னார். உடனேயே ராகுல் காந்தி இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன என்று கேட்டார்... அதற்கு நாராயணசாமி ஒரு தகவலை சொன்னார்... “ஜெகத்ரட்சகனுக்கு மத்திய அரசு வருமான வரித்துறை தொடர்ந்து அழுத்தம் தந்து வருகிறது. ஜெகத்ரட்சகனுக்கு மத்திய அரசால் சில சங்கடங்கள் இருக்கிறது... எனவே பாரதிய ஜனதா தூண்டுதலால் இப்படி ஒரு திட்டத்தை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள் என்று நான் எண்ணுகிறேன். இதற்கு ஸ்டாலினும் சம்மதம் தெரிவித்திருக்கிறார்” என்று சொல்லியிருக்கிறார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.

அப்போது புதுச்சேரி தமிழ்நாடு பொறுப்பாளர் குண்டுராவ் ஒரு தகவலை சொன்னார். ‘பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து, காங்கிரஸை சற்று தள்ளி வையுங்கள். அவர்களுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யும்போது, தற்போது அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ள அந்த எட்டு தொகுதிகளை மட்டும் ஒதுக்குங்கள், அது போதும் என்று திமுகவிடம் சொல்லி இருக்கிறார். இதேபோல் பிற கூட்டணிக் கட்சிகளுக்கும் தொகுதிப் பங்கீட்டில் கரிசனம் காட்ட வேண்டாம், எல்லாமே ஒற்றை இலக்கத்தில் இருக்கட்டும் என்று சொல்லியிருக்கிறார். ஸ்டாலினும் கிட்டத்தட்ட அந்த யோசனைக்கு ஒப்புதல் தந்து விட்டார்’என்ற தகவலை ராகுலிடம் சொல்லி இருக்கிறார்.

ராகுல் அவர்களிடம் ஒரு தகவலை சொன்னார்... “ஒரு இந்திப் பட தயாரிப்பாளர் மூலம் கமலஹாசன் என்னிடம் பேசி வருகிறார். அவர் நம்முடன் கூட்டணி வர தயார், நாம் ஏன் மூன்றாவது அணி அமைக்கக் கூடாது?! இதுபற்றி தமிழக புதுச்சேரி காங்கிரஸ் தலைவர்கள் யோசியுங்கள்” என்று சொல்லி அனுப்பி இருக்கிறார்.

ராகுல்காந்தியின் இந்த யோசனைக்கு பின்னால் பா. சிதம்பரம் இருக்கிறார் என்பதுதான் உண்மை. அவர் சில தினங்களுக்கு முன்பு ஒரு குறிப்பை ராகுல் காந்தியின் பார்வைக்கு அனுப்பியிருக்கிறார். “கூட்டணிக் கட்சிகளை திமுக குறைத்து மதிப்பிடுகிறது. இடதுசாரி கட்சிகள், விடுதலை சிறுத்தை கட்சி போன்றவை திமுகவின் போக்கை பார்த்து கடும் அதிர்ச்சியில் இருக்கிறது. நாம் ஏன் மூன்றாவது அணிக்கு முயற்சி செய்யக்கூடாது?!” என்று யோசனை தெரிவித்திருக்கிறார்.

சென்ற மாதம் வரை திமுக காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருக்கிறது என்று பேசிக்கொண்டிருந்த பா சிதம்பரம், சமீபத்தில் காரைக்குடியில் நடந்த ஊழியர் கூட்டத்தில் பேசும்போது, ‘அதிமுகவை நான் குறைத்து மதிப்பிடவில்லை... அவர்களுக்கு இப்போது பண பலத்துடன் ஆட்சி பலமும் இருக்கிறது’ என்று பேசியிருக்கிறார். கார்த்தி சிதம்பரம் தை மாதம் முதல் தேதி தமிழ் புத்தாண்டு என்பதை ஏற்க முடியாது என்று திமுக கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்லியிருக்கிறார். இதேபோல் காங்கிரஸுடன் கமல் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். இதெல்லாம் மூன்றாவது அணிக்கு போடப்பட்டுள்ள பிள்ளையார் சுழி என்று சத்தியமூர்த்தி பவனில் பேச்சு வரத் துவங்கிவிட்டது.

20210022164700267.jpeg

பாண்டிச்சேரியை பொருத்தவரை, ஜெகத்ரட்சகன் தனது செல்வாக்கை பயன்படுத்தி பாட்டாளி மக்கள் கட்சி, முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் கட்சியை தன் கட்டுக்குள் கொண்டுவந்து, புதுச்சேரியில் வன்னியர் வாக்கு வங்கியை திமுக கூட்டணி வாக்கு வங்கியாக மாற்ற திட்டமிட்டிருக்கிறார். புதுச்சேரியில் பாமக - திமுகவுடன் கூட்டணி என்றால், அது தமிழ்நாட்டிலும் கூட்டணி அமைக்க வாய்ப்பாக அமைந்துவிடும். ஏற்கனவே ஸ்டாலினிடம் பாட்டாளி மக்கள் கட்சி திமுக கூட்டணிக்கு வந்தால், விடுதலை சிறுத்தைகள் கூட்டணியில் இருந்து விலகி விடும் என்று சொல்லியிருக்கிறார். இதையெல்லாம் கூட்டிக் கழித்து தான் ராகுல்காந்தி மூன்றாவது அணிக்கு முயற்சி செய்கிறார்.

20210022164509281.jpeg

அதே சமயம் திமுகவின் முக்கிய தலைவர்கள், ‘காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியை நாம் இழக்கக்கூடாது. அவர்களை நாம் சமாதானப்படுத்தி, நம்முடன் வைத்துக்கொள்ள வேண்டும்’ என்று ஒரு யோசனை சொல்லியிருக்கிறார்கள். அதற்கும் பா. சிதம்பரம், ராகுல் காந்திக்கு ஒரு யோசனையை சொல்லியிருக்கிறார். ‘நமக்கு தேவையான தொகுதிகளுடன், கூட்டணி ஆட்சிக்கு திமுகவை நாம் சம்மதிக்க வைக்க வேண்டும்’ என்றும் சொல்லியிருக்கிறார். இப்போதைக்கு திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கூட கூட்டணி பற்றியோ, தொகுதி பங்கீடு பற்றியோ, மாவட்ட செயலாளர்கள் பேச வேண்டாம் என்று சொல்லிவிட்டு தான், ஸ்டாலின் மாவட்ட செயலர் கூட்டத்தையே கூட்டினார். தேர்தல் தேதி அறிவிப்பு வரும் வரை, இந்தக் கூட்டணி தொகுதி பங்கீடு கண்ணாம்பூச்சி ஆட்டம் தொடரும். ஆனால் திமுகவின் கிச்சன் கேபினட், அதிக தொகுதியில் திமுக போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. கிச்சன் கேபினட் முடிவை எதிர்க்கும் தைரியம் தற்சமயம் ஸ்டாலினுக்கு கிடையாது. மூன்றாவது அணியா.. ஆட்சியில் பங்கா என்பதெல்லாம் தேர்தல் நெருங்கும் சமயத்தில் வெட்ட வெளிச்சம் ஆகிவிடும்.

காங்கிரஸ் தலைவர் பதவியே வேண்டாம் என்று சொன்ன ராகுல் காந்தி, இப்போது மாநில தேர்தல்களில் தெளிவாக முடிவெடுக்கும் இடத்திற்கு வந்திருக்கிறார். ‘அதே சமயம் காங்கிரஸ் கட்சியில் திமுக ஆதரவு ஸ்லீப்பர் செல்கள் சிலர் இருக்கிறார்கள், அவர்கள் ராகுல் காந்தியை குழப்பாமல் இருந்தால் காங்கிரஸுக்கு இந்த தேர்தலில் உரிய கௌரவம் கிடைக்கும்’ என்கிறார்கள் காங்கிரஸ் தொண்டர்கள். அது உண்மைதான். இதே போல் ஒரு வேளை மூன்றாவது அணி அமைந்தால் வெற்றி பெறுமா? இல்லையா என்பதையும் இப்போதைக்கு சொல்ல முடியாது. ஆனால், அப்படி அமைந்தால் அது திமுகவின் வெற்றி வாய்ப்பில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது மட்டும் உறுதி!.