தொடர்கள்
அனுபவம்
கண்ணில் தெரியும் கதைகள்... - மரியா சிவானந்தம்

20210022152715955.jpg

கண் முன் அக்காட்சி விரிகிறது...

மண் அடுப்பில், மண்பானையில் சமையல் நடக்கிறது. பாட்டி சமைத்துக் கொண்டிருப்பாள். பெரிய பானையில், சுடுதண்ணீர் கொதிக்கிறது. சோறும், பருப்பும் இரண்டு அடுப்பில் கொதிக்க... கிளை அடுப்பில் காப்பித் தண்ணிக்காக கருப்பட்டி நீரில் தளதளக்கும். வேலிகாத்தான் விறகும், சோளத்தட்டும், காட்டு விறகும், வறட்டியும் எரிய புகை சூழும் கரியும் சாம்பலும் பறக்கும். அவள் கண்ணில் நீர் வடிய... இரும்பு ஊதாங் குழலால் ஊதி ஊதி அடுப்பை எரிய வைப்பாள். அங்கு சோறு துழாவ தேங்காய் சிரட்டையில் செய்த அகப்பை, காய்கறி நறுக்க அருவாமனை, மசாலா அரைக்க அம்மி, நெல்லு குத்தவும், மாவு இடிக்கவும் உரலும், உலக்கையும், அரிசி திரிக்க திருகை, தானியம் சேமிக்க “உறை”, தண்ணீருக்கு கிணறு, சமைக்க கொல்லைப்புறத்து கீரைகள், காய்கறிகள் என்று இயற்கையோடு இசைந்த எளிய வாழ்வு அது.

இன்று அக்காட்சியை கிராமத்தில் கூட காண இயலாது...

குக்கிங் ரேஞ்சில் சமைக்கும் இக்கால ‘இந்தியன் கிச்சனில்’ மண்பாத்திரங்கள் விடை பெற்று விட்டன. அதன் பின் அம்மா காலத்தில் நுழைந்த பித்தளை, செம்பு பாத்திரங்களும் இன்று இல்லை. எவர்சில்வர், பீங்கான், கண்ணாடி, நான் ஸ்டிக், மெலமின், பிளாஸ்டிக், டப்பர்வேர், ஹாட் பாக்ஸ் என்று வித விதமாக பாத்திரங்கள் சமைக்க... பரிமாற, பாதுகாக்க வந்து விட்டன. ‘குக் அண்ட் செர்வ்’ தினுசில் வரும் பாத்திரங்களை அப்படியே அடுப்பில் வைத்து சமைத்து, அதே பாத்திரத்தில் உணவை டேபிளில் பரிமாறலாம். குக்கர், மிக்சி, கிரைண்டர், ஓவன் என்று விதவிதமாக உபகரணங்கள் பெருகி விட்டன. காய் நறுக்க டைசர் (Dicer), தோல் சீவ ஸ்க்ராப்பர் (scraper) என்று பலவித கேட்ஜெட்ஸ் வந்து விட்டன. நவீன கரி அடுப்பான “பார்பிகியூ” உள்ள வீடுகளும் உண்டு. ஆன்லைன் ஷாப்பிங் கலாச்சாரம் பெருக, தேவையற்ற பொருட்கள் குவிந்து விடுகின்றன. சமைத்த உணவு மிச்சமானா பிரிட்ஜ், சமைக்கவே இல்லையென்றால் இருக்கிறது ஸ்விக்கி!

நம் உணவு இயற்கை உணவாக வேண்டும், நாம் சமைக்கும் முறை பாரம்பரிய சமையல் முறையாக வேண்டும் என்று இப்போது மருத்துவர்கள் சொல்கிறார்கள். மண்பாண்ட சமையல், விறகு அடுப்பு சமையல் என்று உணவகங்கள் பெருகி வருகின்றன. பிளாஸ்டிக்கை விட அலுமினியம் மற்றும் நான் ஸ்டிக் பாத்திரங்கள் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்ற எண்ணம் வளர, மீண்டும் மண் பண்டங்களை நோக்கி நகர ஆரம்பித்துள்ளோம். மண் பாத்திரத்தில் சமைத்தல் ஆரோக்கியமானது, சுவையானது, சத்துக்கள் வீணாவதில்லை என்ற எண்ணம் மக்களிடையே பெருகி வருகிறது.

அலுமினியமும், எவர்சில்வரும் வந்த பின், நம் கிச்சனை விட்டு வெளியேறிய மண்பாண்டங்களை தயாரிப்போர் இப்போது அருகி விட்டனர். ஐம்பதாண்டுகளுக்கு முன் இருந்த குயவர்கள் வெவ்வேறு தொழில்களுக்கு மாறி விட்டனர். இப்போது மீண்டும் மண்பாண்ட சமையல் துளிர் விட, விற்பவர்கள் சிலர் வெளியில் வந்துள்ளனர். அவர்களில் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது .

ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் இருந்து திருவள்ளூர் செல்லும் சாலையில் வரிசையாக கிராமங்கள்தாம். பசுமையான வயல்கள், காய்கறி தோட்டங்கள் நிறைந்த இப்பகுதியில் உள்ள போலிபாளையம் (Bolipalayam) என்ற கிராமத்தில் பயணிக்கையில், அங்கு மண்பாண்டங்களைப் பரத்தி வைத்திருப்பதைக் கண்டு, வண்டியை நிறுத்தி குரல் கொடுத்தேன். ஒரு சின்ன குடிசையில் இருந்து வெளிப்பட்டார் அவர்...

20210022152752217.jpg

“உங்க கடையாங்க?” என்றதும் “ஆமாம்” என்று வந்தார் அவர். நான் அவரிடம் பொருள் வாங்கிய பின் மனம் திறந்து, தன்னைப் பற்றியும், தொழிலைப் பற்றியும் பேசினார்.

“என் பெயர் தொரை. இதுதான் சொந்த ஊர். நல்லா இருந்தவரைக்கும் வயலில் வேலை செய்தேன் . உடம்பு சரியில்லாம போய், இடது கை விழுந்து விட்டது. பெஞ்சாதி வயல் வேலைக்கு போகிறாள். நான் சும்மா இருக்காமல், இந்த பானைகளை விற்று பிழைப்பு நடத்தி வருகிறேன்” என்று தொடங்கினார் .

20210022152836807.jpg

“நீங்கள் ஆள் வைத்து செய்கிறீர்களா? எப்படி வியாபாரம் நடக்கிறது? எல்லோரும் மண்பாத்திரம் வாங்கிறாங்களா?” என்றேன்.

“இவை எல்லாம் இங்கு பக்கத்தில் மலைப்பட்டு என்ற ஊரில் தயாராகிறது. நான் அங்கிருந்து வாங்கி கொஞ்சம் லாபம் வைத்து விற்கிறேன். இங்கு உள்ள சாமான்களின் மதிப்பு பதினைந்தாயிரம். இவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக விற்று விடுவேன்.பொங்கலின் போது பொங்கப் பானைகள் வியாபாரம் நடந்தது. இப்ப வெயில் காலம் ஆரம்பிச்சா தண்ணீர் பானைகள் வாங்கிச் செல்வார்கள். குழாய் வைத்த பானைகளை அதிகம் விற்பனையாகும். சில நாட்கள் ஒன்றுமே விற்காது. சில நாட்கள் அதிகபட்சம் 500 ரூபாய் வரை வித்திருக்கிறேன். பெருசா லாபம் என்று ஒன்றும் வராது. போட்ட முதலை எடுப்பதே பெரும்பாடு” என்றார். ஆயினும் உறுதியுடன் பேசும் அவர் கண்களில் நம்பிக்கை மின்னிற்று,

அந்தக் கடையில் சின்னதும்,பெரியதுமான சட்டிப் பானைகள், வாணலி, பறவைகள் கூண்டில் தண்ணீர் வைக்கும் பானைகள் என்று பலவித பானைகள் இருந்தன. “பூந்தொட்டிகள் இல்லையா?” என்றதற்கு... ‘இங்கு யாரும் அதை வாங்குவதில்லை” என்றார்.

“சொப்பு இருக்கா... குழந்தைகள் வாங்குவார்களே என்றேன்.”

“இப்பல்லாம் எந்த குழந்தை சொப்பு வைத்து விளையாடுகிறது?” என்றார் தொரை. நிஜம்தான்.

அதற்குள் அவர் மனைவி வயலில் இருந்து திரும்பி வந்து விட்டார். உழைத்துக் களைத்த முகமும், ஈரமான கைகளும், நனைந்த சேலையுமாக அவர் நின்ற விதம் இன்னும் நம் பெண்கள் போக வேண்டிய தூரத்தைச் சொல்லிற்று. விடைபெறுகையில் குடிசையில் இருந்து வெளிவந்த அவர் மனைவி “தண்ணீராவது குடியுங்கள்” என்று செம்பை நீட்டினார். அந்த தண்ணீர் லேசாக உப்பு கரித்தது. அந்த எவர்சில்வர் செம்பு நசுங்கி இருந்தது. இரண்டும் அவர்களின் வாழ்க்கையை நமக்கு உணர்த்துவது போல இருந்தது.

தட்டி சரி செய்தால் சரியாகும் என்று தோன்றியது. இவர் போன்ற ஏழை வியாபாரிகளுக்கு ஆதரவளிக்க நம் கரம் நீண்டால், அது நிச்சயமாக முடியும் . அந்த கண்கள் சொல்லும் கதைகளை கேட்க நமக்கு நேரமும், மனமும் வேண்டும்... அவ்வளவே!