தொடர்கள்
பொது
உலகின் முதல் செயற்கை இதயம விற்பனைக்கு  ரெடி!! - ஆர்.ராஜேஷ் கன்னா.

20210021202724938.jpg

உலகெங்கும் அலோபதி வைத்திய முறையில் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைப்பெற்று வருகிறது. உயிருக்கு போராடும் இதய நோயாளிகளுக்கு அவசரமாக மாற்று இதயம் வழங்கும் இதய கொடையாளி கிடைப்பது அரிதான சூழ்நிலை நிலவுகிறது.இதய கொடையாளியிடமிருந்து மாற்று இதயத்தினை பெற பல இதய நோயாளிகள் உலகெங்கும் காத்திருக்கின்றனர்.

உலகெங்கும் 26 மில்லியன் மக்கள் இதயம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக புள்ளிவிவர தகவல் தெரிவிக்கிறது. சிலருக்கு இதயம் முழுவதுமாக செயல் இழக்கும் தருவாயில் இருப்பதால், மாற்று இதயம் பொருத்த வேண்டிய கட்டாயத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதய நன்கொடையாளர்களின் தொடர்ச்சியான பற்றாக்குறையால் இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகளுக்கு செயற்கை இதயம் ‘கார்மட்டின்’ சாதனம் ஒரு வரப்பிரசாதம் என மருத்துவ துறையினர் பெருமை அடைகின்றனர் .

செயற்கை இதய கருவியான கார்மட்டின் மனித இதயம் போலவே, மனித உடலைச் சுற்றிலும் போதுமான அளவு இரத்தத்தை செலுத்த கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் இதய கொடையாளி கிடைக்கும் வரை இதய நோயாளிகள் மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இருக்காது.

மனித இதயம் போன்று, செயற்கை இதயத்தினை பிரான்ஸ் நிறுவனம் உருவாக்க கடந்த 30 ஆண்டுகளாக விஞ்ஞானிகள் முயற்சி செய்து வந்தனர். மனித இதயம் போன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் பேட்டரியால இயங்கும் கார்மட்டின் செயற்கை இதயம், சுய ஒழங்குப்படுத்தப்பட்ட மற்றும் மனித ரத்தத்துடன் இணக்கமான சூழ்நிலையை செயற்கையாக ஏற்படுத்தி கொண்டு, மனித உடலின் எல்லா பாகங்களுக்கும் ரத்தத்தை அனுப்பும் விதத்தில் கச்சிதமாக செயல்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கார்மார்டின் என பெயரிடப்பட்டுள்ள செயற்கை இதயம், இனிவரும் காலங்களில் அதிகளவில் பிரான்ஸ் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் என்ற நல்ல தகவலும் வருகிறது. இதய செயலிழப்பு, மாரடைப்பின் காரணமாக இதயத்திலிருந்து உடல் முழவதும் ரத்தம் செல்ல முடியாத சூழ்நிலை நோயாளிகளுக்கு ஏற்படுவதை செயற்கை இதயம் தடுக்கிறது. இதனால் இதயம் மாற்று அறுவை சிகிச்சைக்காக நோயாளிகள் இனி வரும் காலத்தில் நீண்ட காலம் மருத்துவமனையில் உள்நோயாளியாக தங்க வேண்டிய அவசியம் இருக்காது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சாதாரணமாக ஒரு மனித இதயத்தின் எடை 300 கிராம், தற்போது செயற்கையாக தயாரிக்கப்பட்டு இருக்கும் இதயத்தின் எடை 900 கிராம். ஒரு பேட்டரி பொருத்திய செயற்கை இதய சாதனத்தின் விலை 1.8 லட்சம் அமெரிக்க டாலர்கள் என்று தற்போது விலை நிர்ணயித்து உள்ளனர். தற்போது ஐரோப்பிய கமிஷன், செயற்கை இதயம் விற்பனைக்கு அனுமதி அளித்துள்ளதால்... வருகிற ஜுன் மாதத்திற்கு மேல் செயற்கை இதயம் விற்பனைக்கு வரும் என்பது ஆறுதலான விஷயம். உலகின் முதல் செயற்கை இதயம் தயாரிப்பு மருத்துவ உலகின் புரட்சி என்றே ஆராய்ச்சியாளர்கள் வர்ணிக்கிறார்கள்!