தொடர்கள்
கற்பனை
தமிழக தேர்தல் (கிரிக்கெட்) டீம்..! - ஆர்.ராஜேஷ் கன்னா.

தமிழகத்தில் அடுத்த சட்டசபை தேர்தல் வருவதற்கு முன்பே நமது கரை வேட்டி கட்டிய அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தை துவங்கி விட்டனர். எப்போதும் வெள்ளை உடுப்பில் இருக்கும் நமது அரசியல்வாதிகள் தேர்தல் களத்தில் சுற்றிச் சுழன்றாலும் ஒரு மாறுதலுக்காக தமிழக அரசியல் கிரிக்கெட் லீக் விளையாட்டு வீரர்களாக கற்பனை செய்து பார்த்த போது அவர்களின் ஆட்டத்திறனை அங்கும் பார்த்து வியந்துதான் போனோம்…

(தமிழக அரசியல் கிரிகெட் லீக் விளையாடும் அரசியல்வாதிகளுக்கு கொரனா தடுப்புபூசி போடுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்று டெல்லி தலைமை கிரிக்கெட் நிர்வாக போர்டு அறிவித்து உள்ளது)

முதல்வர் எடப்பாடி பழநிசாமி..

20210006204855516.jpg

எப்போதும் தனது பளிச்சென்ற வெள்ளை நிற வேட்டியும், தனது முஷ்டி வரை மடித்து கொண்டு முழங்கை வெள்ளை சட்டையை அசால்டாக அணிந்தபடி எதிர்கட்சிக்கு மைக் மூலம் சவால் விடுவதில் வல்லவரான தமிழக முதல்வர், தனது அதிமுக அணியின் கிரிகெட் கேப்டனாக பொறுப்பேற்றுகொண்ட பின், சென்ற 4 ஆண்டுகளாக எடுத்த கடும் பயிற்சியினால் எதிரணியினர் வீசும் பந்துகளை அடித்து பவுண்டிரிகளும் சிக்சர்களுமாக மாற்ற துடித்துக் கொண்டிருக்கிறார். முதல்வர் எப்போதும் தனது அணிக்காக ஒபனிங் பேட்ஸ்மேனாக தான் களமிறங்குவார். இந்த முறை தன்னுடைய வெள்ளை டி சர்டு கைகளில் தனது கட்சி கொடியினை சிம்பாலிக்காக தைத்தவர், தனது வெற்றிச் சின்னமான இரட்டை இலையை பனியனில் லோகாவாக பிரிண்ட் செய்ய மறந்து விட்டார்.

தனது அணியின் மேனேஜர் 2016 அன்று மரணமடைந்துவிட்டார். அதன் பின், அப்போது களத்தில் நைட்வாட்ச்மேன் பேட்ஸ்மேனிடம் இருந்து அணியின் பொறுப்பினை ஏற்று கொண்டு கடந்த நான்காண்டுகளாக ஒன்று மற்றும் இரண்டு ரன்களை எடுத்து களத்தில் அதிக நேரம் நின்று, எதிரணியினர் எப்படி பந்து வீசினாலும் ஹெலிகாப்டர் ஷாட் மூலம் சிக்சர் அடித்து, தனது அணியினை வெற்றி இலக்கினை நோக்கி அழைத்துச் செல்வதில் கில்லாடி என பட்டம் பெற்று விட்டார். என்ன இருந்தாலும், தனது அணியினர் சிலர் வேண்டுமென்றே வரும் மேட்சிகளில் எதிரணியின் ஃபீல்டிங்கில் ரன் அவுட் ஆகி விடுவார்களோ என்ற கவலையும் தற்போது கேப்டனுக்கு எழந்துள்ளது. எனினும் மூன்றாவது அம்பயர் உடன் இணக்கமாக செல்வதால், தனது அணிக்கு பல வெற்றிகள் தொடரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். இன்னும் சிறிது காலத்திற்கு பின் தான் இவரது அணிக்கு வெற்றியா அல்லது அவரது அணி பேட்ஸ்மேன்கள் சிலரின் உள்குத்து விளையாட்டால், அணியே லீகில் இருந்து அம்போவென வெளியேறுமா என்று பார்க்க வேண்டும்.

ஒ.பன்னீர் செல்வம்

20210006204925483.png

எப்போதும் அமைதியாக தனது டீம் மேனேஜர் சொல்படி அவரது காலில் விழந்து ஆசிர்வாதம் பெற்று, தனது அணி எப்போது எல்லாம் திணறுகிறதோ அப்போது எல்லாம் நையிட் வாட்ச்மேனாக ஆட்டகளத்தில் இறங்கி, எதிரணியின் பந்துகளில் தனது டீம் விழந்து விடாமல் காப்பாற்றுவதில் கில்லாடி. என்னதான் கடுமையாக உழைத்தாலும், தனக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக கேப்டன் பதவி மட்டும் கிடைக்கவில்லை என்ற மனக்குமுறலுடன் அணியில் இரண்டாவது பேட்ஸ்மேனாக கேப்டனுடன் சளைக்காமல் வலம் வருகிறார், இந்த துணை கேப்டன். தான் பெரிதும் நம்பி இருந்த ஒருவர், தீடீரென உடல் நலம் சரியில்லை என்று காரணம் சொல்லி, கதம் கதம் என தீடீரென வெளியேறியதால் மூடு அப்செட். தனது தற்காப்பு ஆட்டம், தனக்கு கேப்டன் பதவி தரும் என்ற நம்பிக்கையில் இருந்தவர், கர்நாடகாவில் இருந்து வெளிவரும் தனது அணியின் ஒனர் வந்தால் இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ என்று கவலையில் இருக்கிறார். கேப்டனுடன் சண்டை போட்டாலும், ஆட்ட களத்தில் இவரது பவ்வியத்தினை கண்டு மூன்றாவது அம்பயர்களே ஆச்சரியப்பட்டுப் போகிறார்கள். எப்படியாவது தனது அணியின் கேப்டன் பொறுப்பினை அடைய வேண்டும் என்று ரகசிய டீல்களில் ஈடுபட்டு வருகிறார்.

மு.க. ஸ்டாலின் (உதவி கேப்டன்)

20210006204951714.png

தனது தந்தையின் பலத்தால் அணியின் பேட்ஸ்மேனாக உள்ளே நுழைந்தவர், தனது தடுப்பு ஆட்டம் மூலம் அணியில் உதவி கேப்டனாக இருந்து வருகிறார். எப்படியாவது கேப்டன் பதவிக்கு வர வேண்டும் என்று பீகாரில் இருந்து ஒருவரை தற்போது சிறப்பு கோச்சாக அமர்த்திக் கொண்டு, களத்தில் புத்தம் புதிய பொலிவுடன் தடுப்பு ஆட்டம் மட்டும் ஆடி வருகிறார். சில நேரங்களில் இவருக்கு எதிரணியினர் போடும் பந்துக்கள் பவுன்சராகி இவர் தலையை தாக்க வரும் போதும்.. கீழே குனியும் போதும் தவறி பல தடவை ஸ்டம்ப் மீது பந்து விழந்து ஹிட் அவுட்டாகி விடுவது வாடிக்கையாகி விட்டது. தற்போது தனது மகனையும் துணைக்கு அழைத்துக் கொண்டு களமிறங்கியுள்ளார். எப்படியாவது மே மாதம் நடக்கும் தமிழக கிரிக்கெட் லீக்கில் கேப்டனாக ஆகிவிட வேண்டும் என்று பிரயத்தனம் செய்து வருகிறார். கொரோனா நேரமாக இருந்தாலும், அவ்வப்போது இவரது அண்ணனே பார்வையாளர்கள் கேலரியில் அமர்ந்து, எதிர்விமர்சனம் செய்து இவரது கேப்டன் கனவினை தகர்த்து வருவது இவருக்கு மனதளவில் பேட்டிங் ஃபீல்டில் சோர்வினை ஏற்படுத்தி வருகிறது என்பது தற்போதைய நிதர்சனம்.

கமலஹாசன்

20210006205021720.png

அணியின் புதிய வரவான இடதுகை மீடியம் பேஸ் பவுலரான இவர், கடந்த ஆண்டுகளின் போது ஆடிய பயிற்சி ஆட்டங்களில் பந்து வீச்சில் பெரிதாக சோபிக்கவில்லை. எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு பவுலிங் போடும் அது காற்றில் சிறிது திரும்பி அவுட் ஸ்வீங்காக போய்விடுவதால் நடுவர்கள் இவரது பந்துகளை வைட் பால் என அறிவித்து விடுகிறார்கள். பல நேரங்களில் இவர் பேசுவது அணியினருக்கு புரியாமல் இருந்தாலும் நேர்மையான ஆட்சி நிர்வாகம் கொண்டு வர வேண்டும் என்று நகர் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மைதானங்களில் தொடர்ந்து பந்து வீசிக் கொண்டு இருக்கிறார். துணை கேப்டன் பதவி தருகிறோம் என்று சிலர் இவருக்கு ஆசை வார்த்தை காட்டினாலும், தனது ரசிகர்களுடன் ஹெலிகாப்டர்களிலும், சாலை வழியாகவும் ஆடுகளத்திற்குள் செல்வது இவரது தற்போதைய வாடிக்கையாக இருக்கிறது. தனது இடதுகை மித வேக பந்து வீச்சு இருந்தாலும், சில இடது கை ஸ்பின்னர்களை கொண்டு ஆட்டத்தின் போக்கினை மாற்ற முடியுமா என்று யோசனையில் ஆழ்ந்து வருகிறார்.

விஜயகாந்த்

20210006205058622.png

2006-ம் ஆண்டில் தனது இன்னிங்ஸை துவக்கியவர். அப்போதைய டாப் பேட்ஸ்மேன் வரிசையில் எதிரணியினருக்கு சிம்ம சொம்பனமாக விளங்கினார். தனது பேட்டிங் திறமையால், ஏகப்பட்ட ரசிகர்கள் இவர் ஆட்டத்தினை காண ஸ்டேடியத்தில் குழுமி ஆரவார விளையாட்டாக மாறியிருந்தது. ஆட்ட களத்தில் எதிரணியின் கேப்டனை பார்த்து நாக்கை கடிக்கவும், ஒரே நாளில் பிரபலமான பேட்ஸ்மானாக வலம் வரத்துவங்கினார். எப்போது தனது அணிக்காக களமிறங்கினாலும் தனது சாதுர்யமான பேட்டிங்கால், எந்த ஒரு கடினமான பந்தையும் பவுண்டரிகளாகளவும் சிக்சர்களாகவும் மாற்றி வெற்றி பெற்றார். ஆட்டக்காரர்களுக்கே உரிய உடல் நலக்குறைவு ஏற்பட்டு, தற்போது அணியில் ரிடையர்டாக இருக்கிறார். இவர் எந்த அணிக்கு சென்றாலும் வெற்றிக்காக இவரது ரசிகர்கள் துணை நிற்பார்கள் என்பது இவரது குடும்பத்தாரின் நம்பிக்கையாக உள்ளது.

அன்புமணி ராமதாஸ்

20210006205124654.png

இலங்கை அணியின் மலிங்கா போல் பந்தினை எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு வீசுவதில் அன்புமணி வல்லவர். பல நேரங்களில் அணிக்கு இவரது பந்துவீச்சு வெற்றியை தேடி தந்தாலும், பல நேரங்களில் இவரது த்ரோ போன்ற பவுலிங்கிற்கு, அம்பயர் நோ பால் கொடுத்து விடுவதால் இவரின் கேப்டன் கனவு தகர்ந்துவிடுவது இவரது கேம் ரிக்கார்டாக உள்ளது. த்ரோ பவுலிங் பாணி தற்போது எதிரணி ஆட்டக்காரர்களிடம் சோபிக்காததால், இவரது வீசியெறியும் பந்து ஸ்டைலை மாற்றி யார்கர் பவுலிங் போட ஆரம்பித்தவருக்கு, ஆப் சைட் ஸ்டம்ப் நோக்கி பந்து செல்லாமல் லெக் சைட் ஸ்டம்ப் நோக்கி பந்து காற்றில் நகர்ந்து விடுகிறது. இதனால் அம்பயர்கள் இவரின் பந்திற்கு எல்பிடபிள்யூ அவுட் கொடுக்காமல் நாட் அவுட் சிக்னல் தருவதால் நீண்ட நாளாக அணியின் கேப்டனாக வரவேண்டும் என்ற கனவு மங்கி வருகிறது. இந்த லீக்கில் எப்படியாவது காப்டனாக வர வேண்டும் என்று டெல்லியில் உள்ள கிரிக்கெட் தலைமையகத்தின் சிபாரிசை பெரிதும் நம்பியிருக்கிறார் என்ற தகவலும் வருகிறது.

தொல் திருமாவளவன்

20210006205152815.png

எதிரணியினர் அடிக்கும் நான்கு மற்றும் ஆறு ரன்களை எல்லைக்கோட்டை தாண்டியும் தடுத்து விடுவார். சில நேரங்களில் இவரது ஃபீல்டிங் எதிரணியினர் ரன் குவிப்பை கட்டுப்படுத்தும். தனது அணியின் துணை கேப்டன் எப்படியாவது கேப்டன் ஆகிவிட வேண்டும் என்று அவ்வப்போது களப்பயிற்சியின் போது, வீர ஆவேச உரை நிகழத்தினாலும் வரும் லீகல் வெற்றி எப்படி இருக்கும் என்று கணிப்பதில் சற்று குழம்பி தான் உள்ளார். அணியின் நல்ல ஃபீல்டராக இருந்தாலும், தனது அணி வெற்றியை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற கவலையான கனவு மட்டும் நீண்ட நாளாக இவரிடம் உள்ளது.

எல்.முருகன்

20210006205223102.png

சில்லி பாயிண்டில் நிற்கும் வீரராக இருந்தாலும் எதிரணி பேட்ஸ்மேன் அடிக்கும் ஷாட்டை பிடிக்க முயன்றும், பந்து வேகமாக இவரது கால் வழியே புகுந்து பவுண்ட்ரிக்கு சென்று விடுகிறது. பேட்டிங் இவர் கையில் தற்போது “வேல்” இருப்பதால், வேகமாக ரன் எடுப்பதில் இளம் வீரர் என்ற அந்தஸ்துடன் அணியில் வலம் வருகிறார். தற்போதைய டீம் கேப்டனுடன் நல்ல உறவு இல்லை. அடுத்து வரும் கிரிக்கெட் லீக் தேர்வில் தற்போதைய கேப்டன் இருப்பாரா என்பது சந்தேகம், டெல்லியில் உள்ள தலைமை கிரிக்கெட் வாரியம் தான் அடுத்த கிரிக்கெட் கேப்டனை அறிவிக்கும் என்று அவ்வப்போது ஆடு களத்தில் இவர் அடிக்கும் கமெண்ட், தற்போதைய கேப்டனை முகம் சுளிக்க வைக்கிறது. இந்த கிரிக்கெட் லீக் கேப்டனாக வர முடியவில்லை என்றாலும், அடுத்த ஐந்தாண்டுகளில் நடக்கும் லீக் போட்டியில் தான் கேப்டனாக வருவோம் என்ற நம்பிக்கையில் பேட்டையே வேல் மாடலில் மாற்றி வைத்துக் கொண்டு எதிரணியினர் வயிற்றில் புளியை கரைத்து வருகிறார்.

ரஜினிகாந்த்

20210006205325531.jpg

தமிழக அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்பேன் என்று அவ்வப்போது பேட்டியில் சொல்லிவிட்டு மறையும் கூக்ளி பவுலர் இவர். இவரது பந்தை, எதிரணியினர் எப்படி ஆடுவது என்று திணறிக் கொண்டிருந்த நிலையில்... தீடீரென, உடல் நலக்குறைவால் மருத்துவர் அறிவுரைப்படி ஆட்டகளத்தில் இருந்து தனது காரில் புறப்பட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இனி தனது வாழ்நாளில் கிரிக்கெட் விளையாடப் போவதில்லை என்று செய்தியாளர்களுக்கு பேட்டியும் அளித்து விட்டு வழக்கம் போல் தனது வீட்டின் கேட்டினை திறந்து உள்ளே சென்று தன்னையே பூட்டிக்கொண்டும் விட்டார்…! மேட்ச் பார்க்கவாவது வெளியே வருவாரா என்றுதான் பாவம் இவரது ரசிகர்கள் வீட்டு வாசலிலேயே காத்திருக்கிறார்கள்!