தொடர்கள்
வலையங்கம்
வலையங்கம்

தேசிய கட்சிகளை புறக்கணியுங்கள்...

மதுரை மக்களவை உறுப்பினர் சு வெங்கடேசன், உள்துறை இணை அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதினார். சிஆர்பிஎஃப் துணை மருத்துவப் பணி நியமனங்களுக்கான தேர்வு மையங்களை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அமைக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் வலியுறுத்தி எழுதியிருக்கிறார். இதற்கு பதிலளித்து அமைச்சர் எழுதிய கடிதம் முழுக்க முழுக்க இந்தியில் இருந்தது. இந்தி தெரியாத தமிழக எம்பி சு. வெங்கடேசன், ‘அந்த பதில் கடிதத்தில் என்ன எழுதி இருக்கிறது என்று எனக்கு இந்தி தெரியாததால் தெரியவில்லை. இது சட்டம் மற்றும் நடைமுறை மீறல்’ என்று சுற்றிக் காட்டி, இன்னொரு கடிதத்தை அமைச்சருக்கு மீண்டும் எழுதியிருக்கிறார். இந்தி தெரியாத மாநிலங்களில், ஆங்கிலம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று நேரு, சாஸ்திரி, இந்திரா உள்பட பல பிரதமர்கள் உறுதிபட தெரிவித்து இருக்கிறார்கள். இருந்தாலும் இந்தியை தமிழ்நாட்டில் எதிர்க்கிறார்கள் என்பதற்காக இப்படி சீண்டிப் பார்ப்பது அடிக்கடி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலை என்றால் அப்பாவி பொதுமக்கள் அமைச்சருக்கு கடிதம் எழுதினால் அவர்களின் நிலை என்ன?!

தமிழக மாநில கட்சிகள் தயவில்தான் தமிழ்நாட்டில் தேசியக் கட்சிகள் தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அப்படி இருந்தும் தில்லியில் ஆளும் தேசிய கட்சிகள், இந்தியை வைத்து அரசியல் செய்வது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தேசிய அரசியல் கட்சிகள் வேண்டாம் என்று புறக்கணிக்கும் துணிவு மாநில கட்சிகளுக்கு வந்தால், இந்த இந்தி திணிப்பு நின்று போகும். அதுவரை இந்த இந்தி அச்சுறுத்தல் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும்.