இரண்டு வாரங்களுக்கு முன்பு ஹைதராபாத் ஸ்டூடியோவில் ரஜினியின் ‘அண்ணாத்தே’ படக்குழுவினர், நடிகர்கள், துணை நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் என்று 120 பேர் தனிமைப்படுத்திக் கொண்டு தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டு, படப்பிடிப்பு மீண்டும் துவங்க இருந்த நாளுக்காக வெகு ஆர்வத்துடன் காத்திருந்தனர்.
படப்பிடிப்பு தொடங்க இருந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கலாநிதி மாறனை திருமதி லதா ரஜினிகாந்த் செல்பேசியில் தொடர்பு கொண்டார். “மாறன் சார், இவர் ஷூட்டிங் போகவேண்டும் என்று பறக்கிறார். ஆனால், இப்போது இருக்கும் சூழ்நிலையில் அவர் படப்பிடிப்புக்கு வந்து கலந்து கொள்ள வேண்டாம் என்று நான் நினைக்கிறேன். அவர் உடல்நிலை, வயது காரணமாக எனக்கு பயமாக இருக்கிறது” என்று கவலையுடன் சொல்ல... மாறன் உடனே, “மேடம் நான் ஷூட்டிங்கை கேன்சல் செய்து விடுகிறேன். செலவு பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை, அவர் உடல்நிலை தான் எனக்கு முக்கியம். அவர் என்று படப்பிடிப்பு நடத்தலாம் என்று சொல்கிறாரோ அன்று நாம் ஷூட்டிங்கை வைத்துக் கொள்ளலாம். இதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை” என்று கூலாக சொல்ல... திருமதி ரஜினிகாந்த் “ரொம்ப தேங்க்ஸ் மாறன் சார்” என்று மகிழ்ந்து போனார்.
ரஜினிக்கு விருப்பமிருந்தும் திருமதி லதா ரஜினிகாந்த் தடுக்கிறாரோ என்ற சந்தேகமும் சிலருக்கு இருந்தது. அவர்கள் “எதற்கும் ரஜினியிடம் ஒரு தரம் பேசிவிடலாமா..நிறைய செலவு செய்திட்டமே” என்று தங்கள் பாஸ் கலாநிதியிடம் கேட்க...அவரோ “வீட்டில் பெண்கள் பயப்படுகிறார்கள் என்றால் அதை மதிப்பது மட்டுமே நியாயம். படப்பிடிப்பை ரத்து செய்து அனைவரையும் உடனடியாக ஊர் திரும்பச் செய்யுங்கள்” என போன் வழியே உத்தரவிட்டு விட்டார். இத்தனைக்கும் அவர் அப்போது தன் அணியின் ஐபிஎல் விளையாட்டை துபாய் ஸ்டேடியத்தில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்.
ஆக..ஒரு படப்பிடிப்புக்கே இன்று ரஜினி வீட்டில் தடை என்றால் மற்றதை நீங்களே ஊகித்துக் கொள்ள வேண்டியதுதான்!
கொரோனாவுக்கு முன் அரசியல் கட்சி பற்றி தேர்தல் பற்றி எல்லாம் பலவாறாக யோசித்தார் ரஜினி. பிறரிடம் ஆலோசனைகள் கூட செய்தார். கொரோனா தொற்று பரவி, தமிழகத்தில் ஊரடங்கு அமலுக்கு வந்த பிறகு, ரஜினிக்கு தனது உடல்நிலை பற்றிய கவலை அதிகரித்தது. அவர் தன்னைத்தானே எல்லோரிடமிருந்தும் தனிமைப்படுத்திக் கொண்டார், குடும்ப உறுப்பினர்கள் தவிர யாரையும் சந்திக்கவில்லை. காலையில் எழுந்ததும் தனது பண்ணை வீடான கேளம்பாக்கதிற்கு சென்று ஓய்வெடுப்பார். தேவைப்பட்டால் மட்டுமே செல்பேசியில் பேசினார்.
தற்போது அவரது குடும்பத்தினர், ‘அரசியல், கட்சி இதெல்லாம் வேண்டாமே’ என்று பேசத் துவங்கி விட்டார்கள். லதா ரஜினிகாந்த் தன் கணவரது அரசியல் ஆசையை மழுங்கச் செய்யும் வேலையை மெல்ல துவங்கி விட்டார். முதலமைச்சர் வேட்பாளர் நான் இல்லை என்று ரஜினி சொன்னது கூட, லதா ரஜினிகாந்த் யோசனைதான் என்பதாக தற்போது ரஜினிக்கு நெருங்கிய வட்டாரத்திலேயே கூட பேச்சு உலாவத் தொடங்கி விட்டது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் செப்டம்பர் வரை அவர் யாரையும் சந்திக்கவில்லை. அக்டோபர் மாதம் முதல் வாரம் துக்ளக் நிருபர் ரமேஷ் மற்றும் மன்ற ஒருங்கிணைப்பாளர் சுதாகர், அவரது மேனேஜர் முரளி ஆகியோரை மட்டும் சந்தித்துப் பேசியிருக்கிறார். ஆனால் அவர்கள் யாரிடமும் அவர் அரசியல் பேசவில்லை.
ரஜினிக்கு ஏற்கனவே இதய சிகிச்சை நடந்திருக்கிறது. சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிறுநீரகம் தொடர்பான பரிசோதனை, அதைத் தொடர்ந்து அமெரிக்காவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. அதை தொடர்ந்து, அவரது உடல் நிலையை நன்கு கண்காணித்து கவனித்து வர வேண்டும் என்ற மருத்துவர்களின் எச்சரிக்கையை அவர் கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கிறார். அதனால் தான் ரஜினி, இந்த நோய் தொற்று காலத்தில் தன்னை அதி கவனமாக பார்த்துக் கொண்டார். அவர் தொடர்பு எல்லையை விட்டு மொத்தமாக விலகி இருக்க காரணமும் இதுதான்.
கொரோனா இல்லாமலிருந்தால், அவர் ஏப்ரல் மாதம் அமெரிக்காவிற்கு இறுதி செக் அப்புக்கு சென்று இருப்பார். அமெரிக்காவிலும் கொரோனா அச்சம் உச்சத்தில் உள்ளதால் அவரது அமெரிக்க பயணம் தள்ளிப் போடப்பட்டது. அதே சமயம் அமெரிக்க மருத்துவர்களின் ஆலோசனையை இணையம் வழி கேட்டு, அதன்படியே நடந்து கொள்கிறார் ரஜினி. அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக மாதம்தோறும் அமெரிக்காவுக்கு அனுப்பப்படுகிறது. அந்த ரத்த மாதிரிகளின் பரிசோதனைக்கு பிறகு, ரஜினிக்கு மருத்துவ அறிவுரைகள் அவ்வப்போது வழங்கப்படுகிறது.
அமெரிக்க மருத்துவர்கள் ஆலோசனைப்படி, இந்த மாதம் சென்னையில் 28 மற்றும் 29 தேதியில் பிரபல மருத்துவ நிபுணர்கள் அவர் உடல் நிலையை பரிசோதனை செய்து, மருத்துவ அறிக்கையை அமெரிக்காவுக்கு அனுப்ப இருக்கிறார்கள். அந்த அறிக்கை கிடைக்கப்பெற்றதும், அதன் முடிவுகளைப் பொறுத்துதான் சினிமா மற்றும் அரசியல் பற்றிய அவரது முடிவு இருக்கும், இதுதான் உண்மை.
இதற்கிடையே ‘விஜயதசமி அன்று கட்சி அறிவிப்பு, தேர்தல் கமிஷனில் பதிவு செய்யும் வேலை துவங்கியாச்சு, பொங்கலுக்கு ரஜினி அரசியல் பிரவேசம் உறுதி’ என்று ஆளாளுக்கு ஏதேதோ சொல்கிறார்கள். ஆனால், ரஜினி இதுபற்றி இதுவரை எதுவுமே வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை குஷ்பு, காவல்துறை அதிகாரி அண்ணாமலை ஆகியோர் ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என்று காத்திருந்தார்கள். ‘ரஜினி கட்சி எல்லாம் ஆரம்பிக்க மாட்டார்’ என்று பிஜேபி தரப்பு ஆதாரத்துடன் சொல்லி, இவர்கள் இருவரையும் தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டது.
இது தவிர திமுக, ரஜினியிடம் அவர் அரசியலுக்கு வர வேண்டாமென அழுத்தம் தருவதாகவும் சொல்கிறார்கள். முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன்ராவ் அவர்களின் நண்பர் வழக்கறிஞர் அ...நாதன். இவர் ஒரு அரசியல் தரகர். அவர் ரஜினிகாந்தை சந்தித்து, குறைந்தபட்சம் இந்தத் தேர்தலுக்காவது அவர் அரசியலுக்கு வர வேண்டாம் என்று திமுக சார்பாக வற்புறுத்தி இருக்கிறார். தேவைப்பட்டால் திமுக தலைவர் ஸ்டாலினே நேரில் வந்து பேசுவார் என்றும் அவரிடம் சொல்லியிருக்கிறாராம். அதற்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்திருப்பதாக அ...நாதன் எல்லோரிடமும் பரவலாக சொல்லி வருகிறார்.
அதனால் தான் அவர் உடல் நிலையை காரணம் காட்டி ‘இப்போதைக்கு சினிமா அரசியல் என எதுவுமே வேண்டாம்’ என்று ரஜினியை முடிவெடுக்க லதா ரஜனிகாந்த் திட்டமிட்டு காய் நகர்த்துகிறார் என்ற ஒரு பேச்சும் வரத் துவங்கிவிட்டது. இந்தச் செய்தி அரசல்புரசலாக சமூக ஊடகங்களில் வந்ததும், உடனேயே திமுக இதை மறுத்திருக்கிறது. அதே சமயம், ரஜினியின் நண்பரான அமெரிக்க மருத்துவர் மூலமும் தொடர்ந்து ரஜினிக்கு திமுக அழுத்தம் தந்து கொண்டிருப்பதாக தகவல்!
“அரசியலுக்கு வருவேன், கட்சி தொடங்குவேன், 234 தொகுதிகளிலும் போட்டி போடுவேன்” என்று முன்பு உரக்கச் சொன்ன ரஜினி, தற்போது மௌனம் சாதிக்கிறார்.
தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்கள் தான் இருக்கிறது. திமுக தேர்தல் வேலையில் ஜரூராக இறங்கிவிட்டது. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் வேலையைக் கூட துவங்கி விட்டது. அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி என்று அறிவித்து, அவர்களும் தேர்தல் வேலையை கவனித்து வருகிறார்கள். ஆனால் இவர்கள் இருவரும், இப்போது ரஜினி பற்றி பேசுவது இல்லை. இது பற்றிக் கேட்டால், “அவர் ஒதுங்கிவிட்டார். இப்போது அவரைப் பற்றி பேச என்ன இருக்கிறது?” என பட்டவர்த்தனமாகவே இரண்டு திராவிட கட்சிகளும் சொல்கின்றன.
அதே சமயம் பாரதிய ஜனதா தனது பக்கம் ரஜினியை இழுப்பதில் முழு முனைப்போடு இருக்கிறது. நடிகர் விஜய் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தபோது, அவரை குற்றவாளி போல் படப்பிடிப்பு நடந்த நெய்வேலியில் இருந்து தங்களது காரில் நடிகர் விஜய்யை அழைத்து வந்தது வருமானவரித்துறை. ஆனால், ரஜினி விஷயத்தில் மிகுந்த கரிசனம் காட்டி, அவருக்கு வெறும் அபராதம் மட்டும் விதித்தது. அப்போதுகூட அவர்கள் வருமானம் பற்றிய சர்ச்சையில் அவர் வட்டிக்கு விட்டு சம்பாதித்ததாக அவரது ஆடிட்டர்கள் வருமானவரித்துறை அறிக்கையில் குறிப்பிட்டதை ஒரு முறை ஒரு குறும்பு நிருபர் சுட்டிக்காட்டி ரஜினி வீட்டு வாசல் பேட்டி ஒன்றில் கேட்டபோது... “அதெல்லாம் ஆடிட்டர் பார்த்துக்கொள்வார்” என்று கூலாகச் சொல்லிவிட்டு நகர்ந்து விட்டார் ரஜினி.
ஆனால் அவரது ஆதரவாளர்கள் இது எதையுமே நம்பத் தயாராக இல்லை. ரஜினி கட்சி தொடங்குவார் என்று இன்னமும் அவர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். “இப்ப என்ன தேர்தல் தேதியா அறிவித்து விட்டார்கள்? இன்னும் நிறைய நாட்கள் இருக்கிறது, அவர் வருவார், அரசியல் கட்சி தொடங்குவார்!” என்கிறார்கள் ஆணித்தரமாக.
இதற்கிடையே தனது ராகவேந்திரா மண்டபம் சொத்துவரி விஷயத்தில், ‘மாநகராட்சியிடம் மேல்முறையீடு செய்வதற்கு பதில் நீதிமன்றம் சென்றதை தவிர்த்திருக்கலாம்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினி குறிப்பிட்டுவிட்டு, அனுபவமே பாடம் என்று சொல்லியிருக்கிறார். ‘234 தொகுதியில் போட்டியிடுவேன், கட்சி தொடங்குவேன்’ என்ற முந்தைய கருத்துக்கும் இப்படி ஒரு காமெண்ட் வந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!
Leave a comment
Upload