ஜலாலுதீன் கில்ஜி...
வஞ்சகத்தின் மறு உருவம்!
வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கும்போது, ‘மனைவி மட்டுமல்ல - மன்னன் அமைவதும் இறைவன் கொடுத்த வரம்’ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது...!
குத்புதீன் அய்பெக்கும் இல்தூத்மிஷும் அடிமைகளாக வாழ்க்கையை ஆரம்பித்து பிற்பாடு திறமை மிகுந்த அரசர்களாக உயர்ந்தார்கள். மாமன்னர் பல்பனுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கெய்கூபாத் மிக விரைவில் கெட்டுச் சீரழிந்தார்.
சில இஸ்லாமிய அரசர்கள் இந்துக்களைத் தேர்ந்தெடுத்துத் துன்புறுத்தினார்கள். சில சுல்தான்௧ளோ குத்திச் சாய்ப்பதற்குமுன் ‘இந்துவா, முஸ்லிமா’ என்றெல்லாம் பார்த்ததில்லை. கஜினி முகமது இறந்த பிறகு சுல்தான் அலாவுதீன் ஹுசேன் (இவர் மருமகன்தான் கோரி முகமது) படையெடுத்துச் சென்று கஜினி மாநகரைத் தீக்கிரையாக்கித் தரைமட்டமாக்கினார். பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியக் குடிமக்கள் (பெண்கள், குழந்தைகள் உட்பட) இரக்கமில்லாமல் வெட்டிக் கொல்லப்பட்டார்கள். அதேசமயம் சிந்து நாட்டு இளவரசர் முகமது பின் காஸிம், இந்து மன்னர் ஒருவரை வெற்றிகொண்டபோது அவருக்குச் சிந்து சுல்தானிடமிருந்து வந்த கடிதத்தில் ‘அவர்கள் தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டதால் அந்த ஊரில் உள்ள, உடைக்கப்பட்ட கோயிலைப் பழுதுபார்க்கவும். அவர்கள் தங்கள் கடவுளை வழிபடுவதில் நமக்கு ஆட்சேபணையும் இல்லை. மற்றபடி அந்த மக்களின் வழிபாட்டு முறையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் இடையூறு எதுவும் ஏற்படுத்த வேண்டாம்’ என்கிற ரீதியில் கடிதம் வந்தது.
டெல்லியை பிற்பாடு ஆண்ட சுல்தான் சிகந்தர் லோடி, ஜான்பூரில் ஆட்சி புரிந்து வந்த முஸ்லிம் மன்னரை வென்றதைத் தொடர்ந்து அந்த ஊரில் இருந்த மசூதிகளை உடைத்துத் தள்ள ஆணையிட்டதாகச் சரித்திரக் குறிப்பு உண்டு!
டெல்லி சுல்தான் முகமது துக்ளக் இறந்த பிறகு பட்டத்துக்கு வந்த பிரோஸ் துக்ளக் ஆட்சியில் இந்துக்களின் கோயில்கள் உடைக்கப்பட்டன. அதே சமயம் இந்து மதம் பற்றிய நூல்களை அரபு மொழியிலும் பாரசீக மொழியிலும் மொழிபெயர்க்கவும் தக்க ஏற்பாடுகள் செய்தார் பிரோஸ்!
பிற மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களை உடைப்பதைக் கடமையாகக் கருதிய மன்னர்களும் உண்டு. கொள்ளையடிக்க ஒரு சாக்காகப் பயன்படுத்தியவர்களும் உண்டு. சிலர் கோயில்களை உடைப்பதைத் தங்கள் வெற்றியின் அறைகூவலாக மட்டும் கருதினார்கள். (பிற முஸ்லிம் மன்னர்கள் நாட்டிலுள்ள மசூதிகளைச் சில சுல்தான்௧ள் உடைத்ததற்கு இதுதான் காரணம்!)
இந்தியாவின் தெற்குப் பகுதியை அலசினால் பீஜப்பூர் சுல்தான்கள் மராத்தியையும் ஒரு ஆட்சி மொழியாக ஏற்றுக்கொண்டதாகச் சரித்திரம் கூறுகிறது. வங்காளத்தை ஆண்ட ஒரு முஸ்லிம் மன்னர், வங்காள மொழியில் ராமாயணத்தை மொழி பெயர்க்க அறிஞர்களை நியமித்தார். சிட்டகாங் பிரதேசத்தை கி.பி.1500-ல் ஆண்ட ஒரு இஸ்லாமிய குறுநில மன்னர், மகாபாரதத்தை வங்காளத்தில் மொழி பெயர்க்கச் சொல்லி அதற்கென தன் ஆஸ்தான கவிஞரை நியமித்தார். இந்து மதத்தைச் சேர்ந்த அந்தக் கவிஞரின் பெயர் இந்திர பரமேஸ்வர் என்பது குறிப்பிடத்தக்கது!
பொதுவாக மன்னர்களை, அவர்கள் எந்த மதமாக இருந்தாலும் சரி - ஹீரோக்கள், வில்லன்கள் என்றுதான் வரலாறு பிரிக்கிறது. மன்னர்களில் குள்ளநரிகளும் உண்டு. புள்ளிமான்களும் உண்டு. தங்கள் ஆட்சி எப்படி அமைய வேண்டும் என்பதை அவர்களின் மனநிலைதான் முதற்கண் நிர்ணயித்தது. பெரும்பாலானவர்களுக்கு மதம், இனம் எல்லாம் கடைக்கண்தான்!
இந்த ரீதியில், சுல்தான் ஜலாலுதீன் கில்ஜி என்னும் உணர்ச்சிவசப்படும் இரக்கக் குணமுள்ள, மென்மையான புள்ளிமான் பாலூட்டி வளர்த்த அலாவுதீன் கில்ஜி ஒரு வஞ்சக வேங்கையாக உருவானது துரதிஷ்டவசமான வரலாற்று நிகழ்ச்சி! ஜலாலுதீனின் சகோதரரின் மகன் அலாவுதீன். சிறு வயதிலேயே தந்தையை இழந்த அலாவுதீனை மிகுந்த பாசத்துடன் வளர்த்தார் சுல்தான் ஜலாலுதீன். வயதுக்கு வந்தவுடன் காரா பகுதிக்கு (இன்றைய அலஹாபாத் சுற்றுப்புறம்) தன் வைஸ்ராயாக நியமித்தார். தன் மகளையும் அலாவுதீனுக்கு மணம் செய்வித்தார்.
கி.பி.1292-ல் மால்வா பகுதியை வெற்றி கொண்டு, சூறையாடிய செல்வத்தை ஜலாலுதீன் காலடியில் சிறுமலையாக குவித்து பவ்யமாக வணங்கி ‘நன்றி நாடகம்’ போட்டார் அலாவுதீன். பெருமிதத்தில் ஆழ்ந்த சுல்தான் - பதில் மரியாதையாக மருமகனுக்கு அயோத்தி நகரைப் பரிசாக அளித்தார்.
இரண்டாண்டுகள் கழிந்தன. திடீரென்று எட்டாயிரம் குதிரை வீரர்களை அழைத்துக் கொண்டு தெற்கு நோக்கிப் புயலெனக் கிளம்பினார் மருமகன் அலாவுதீன் கில்ஜி. அந்தப் படை (மராட்டிய) தேவகிரி நாட்டில் (பிற்பாடு தெளலதாபாத் என்று அழைக்கப்பட்டது) சூறாவளியாகப் பாய்ந்தது. மன்னர் ராமச்சந்திரதேவ் எதிர்ப்பு எடுபடவில்லை. அலாவுதீன் படை ஆர்வத்துடன் அபகரித்த வைர, வைடூரியங்கள், தங்க நகைகள் இன்று அடுக்கி வைத்து எடுத்துச்செல்ல வேண்டும் எனில், பல லாரிகள் தேவைப்படும்!
வெற்றி முழக்கத்துடன் அலாவுதீன் படை தேவகிரியிலிருந்து கிளம்பியபோது... எதிர்பாராத நிகழ்ச்சி ஒன்று நடந்தது. முன்பே தப்பிச் சென்றுவிட்டிருந்த ராமச்சந்திரதேவ் மகன் - பட்டத்து இளவரசர் சங்கர்தேவ் ஒரு பெரும் படையுடன் அலாவுதீன் படையை வீர முழக்கத்துடன் வழிமறித்தார்! “மகனே! நாங்கள் சமாதானம் செய்து கொண்டாயிற்று!” என்று தந்தை ராமச்சந்திரதேவ் கோட்டை உச்சியிலிருந்து குரல் கொடுத்தது யார் காதிலும் விழவில்லை! “யார் இந்த இளைஞன்?” என்று கர்ஜித்த அலாவுதீனுக்கு விஷயம் தெரிந்தவுடன் கோபம் தலைக்கேறியது. பிறகு துரிதகதியில் நடந்த கடும் போரில், அனுபவம் வாய்ந்த அலாவுதீன் படையை வெகுநேரம் சங்கர்தேவ் வீரர்களால் சமாளிக்க முடியவில்லை. இந்த முறை தேவகிரி அரண்மனையில் மிச்சமிருந்த செல்வத்தையும் அலாவுதீனுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டி வந்ததில், மன்னர் ராமச்சந்திரதேவ் மற்றும் மகாராணிகள் அணிவதற்குக்கூட ஆபரணம் இல்லாமல் போனது என்று கேள்வி!
அலாவுதீன் பெருமிதத்துடன் பல யானைகளில் வைத்து எடுத்துச் சென்றது சுமார் இருபதாயிரம் பவுண்ட் எடையுள்ள தங்கம், இருநூறு பவுண்ட் எடையுள்ள முத்துக்கள், முப்பதாயிரம் பவுண்ட் வெள்ளி மற்றும் இலவச இணைப்பாகப் பல மூட்டைப் பட்டுத்துணிகள்!
வெற்றிக்கொடி தகதகக்க, வீர மருமகன் திரும்பி வரும் செய்தி கேட்ட சுல்தான் ஜலாலுதீன் மகிழ்ச்சியில் கூத்தாடாத குறை! அவருடைய அருமை மனைவி முல்லிக் ஜஹான் முகத்திலோ கவலை ரேகைகள்... சுல்தானிடம் “மன்னா! அலாவுதீனை நான் நம்பவில்லை. அவன் ஆபத்தானவன் என்று என் உள்மனது எச்சரிக்கிறது!” என்றார் ராணி.
ஜலாலுதீனுக்கு சிரிப்பும் கோபமும் வந்தன. “நான் எடுத்து வளர்த்த மகனை இப்படிச் சந்தேகப்படுவதா? போரில் வெற்றி என்பதை லட்சியப் பயணமாகக் கொண்ட வீரன் அலாவுதீன். இப்படிப்பட்ட வீரர்கள் சற்று அளவு மீறிய துடிப்புடன்தான் செயல்படுவார்கள்! தேவையில்லாத கற்பனையில் மிதந்து கலவரப்படாதே!” என்று சமாதானம் சொல்லிவிட்டு அரசவையைக் கூட்டினார் ஜலாலுதீன்.
தர்பாரில் அமர்ந்திருந்தவர்களின் முகங்களிலும் சுரத்தில்லாதது கண்டு சுல்தானுக்குத் திகைப்பு! புருவங்களை வில்லாக உயர்த்திய சுல்தான், “வெற்றிப் படைக்குத் தலைமைதாங்கி வரும் என் மருமகனை எதிர்கொண்டு வரவேற்க நான் கிளம்ப வேண்டாமா? ஏன் இந்த மெத்தனம்?” என்று அவையோரைக் கேட்டார்.
அறிவுக்கூர்மையும் துணிவும் கொண்ட முல்லிக் அஹமது ஹுபீப் என்ற அமைச்சர் எழுந்து வணங்கிவிட்டு, “மேன்மைதாங்கிய சுல்தானிடம் சற்று வெளிப்படையாகப் பேச விரும்புகிறேன். அலாவுதீனிடம் நாம் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது என்பது என் எண்ணம். முதலில் அலாவுதீன் தங்கள் அனுமதி இல்லாமலேயே தெற்குப் பகுதிக்குப் படையெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிச் செய்ய வேண்டிய அவசரம்தான் என்ன? அவர் எடுத்து வரும் அளவுக்கு அதிகமான செல்வம், மேன்மைதங்கிய சுல்தானுக்கா அல்லது தன்னைப் பலப்படுத்திக்கொள்ளவா? இளவரசரை தாங்கள் வரவேற்பதற்கு பதிலாக, ஒரு படையுடன் சென்று வழிமறிப்பது இந்தச் சூழ்நிலையில் நல்லது என்று தோன்றுகிறது. தேவகிரியிலிருந்து கொண்டுவரப்படும் செல்வத்தின் கனம் தாங்காமல் திணறிக்கொண்டிருக்கும் அலாவுதீன் படை, அந்த மூட்டைகளை விட்டுவிட்டு நம் படைக்கு எதிராக வாளைத் தூக்க விரும்பமாட்டார்கள். நேரடி மோதலைத் தவிர்த்துப் பதுங்கத்தான் பார்ப்பார்கள். மொத்தத்தில், அலாவுதீனைப் புரிந்துகொள்ள இது ஒரு வாய்ப்பு!” என்று விளக்கமாகப் பேசினார் அமைச்சர் ஹபீப்.
பாசம் ஒரு போதைப் பொருளாக மூளையைப் பேதலிக்கச் செய்திருந்ததால், அமைச்சரின் அறிவுரை சுல்தான் முகத்தில் சுளிப்பைதான் வரவழைத்தது. இது கண்ட மற்ற அமைச்சர்கள் சற்றுப் பின்வாங்கி ஜால்ராக்களைக் கையிலெடுத்தார்கள்! சுல்தான் எரிச்சலுடனும் புன்னகையுடனும் பேச ஆரம்பித்தார்: “அமைச்சர்களே! முல்லிக் அஹமது ஹபீப் சொன்னதில் எனக்கு உடன்பாடில்லை. அலாவுதீனை என் மார்பில் அணைத்து வளர்த்தவன் நான். அவன் எனக்குத் தரோகம் இழைப்பான் என்று சொல்வது, நானே எனக்குத் துரோகமிழைத்துக் கொள்வேன் என்று சொல்வதைப் போல! ஆகவே, வெற்றிக் கனியோடு வரும் நம் வீரப்படையை வரவேற்க நானே நேரடியாகச் செல்ல முடிவெடுத்துள்ளேன்!’’
சுல்தான் முடிவாக அறிவித்ததும் சபை கலைந்தது. அமைச்சர் ஹபீப் முகத்தில் வேதனை... “அறவு என்றும் ஒளியைப் பாசம் என்று கிரகணம் பிடித்துவிட்டது. அறிவுரைகள் எப்படி எடுபடும்?” என்று குமுறிக்கொண்டே அவர் வெளிநடப்பு செய்ததாகக் கூறப்படுகிறது.
சுல்தான் ஜலாலுதீன் கில்ஜி தன்னை வரவேற்கக் கிளம்பிவரும் செய்தி அலாவுதீனுக்குப் போய்ச் சேர்ந்தது. துரிதமாகக் கங்கை நதியைக் கடந்து கரையோரமாகப் பெரும்கூடாரம் போட்டு, வரப்போகும் மாமனுக்கு வரவேற்பு வளைவுகள் அமைத்தார் அலாவுதீன்!
கங்கை நதிக் கரையோரமாக மிதந்து வந்து நின்ற ஒரு அழகிய பெரிய படகிலிருந்து உற்சாகக் குரலுடன் இறங்கினார் சுல்தான் ஜலாலுதீன் கில்ஜி. தேதி: ஜூலை 19, 1296.
விதி மேலும் விளையாடியது...
மருமகன் கலவரப்படப் போகிறான் என்று நெகிழ்ச்சியுடன் நினைத்த அப்பாவி சுல்தான் ஜலாலுதீன், தன்னுடன் படை வீரர்களைக்கூட அழைத்துச் செல்லவில்லை. நெருங்கிய ஆலோசகர்கள், சில அமைச்சர்கள் மட்டுமே கூட இருந்தார்கள். அவர்களையும் படகிலேயே இருக்கச் சொல்லிவிட்டு, இரு கைகளையும் நீட்டியவாறு “அலாவுதீன்!” என்று சொல்லிக்கொண்டே முன்னேறினார், அந்த எண்பத்திரண்டு வயதான சுல்தான்!
கூடாரத்திலிருந்து வெளியே வந்து அவரை எதிர்கொண்ட அலாவுதீன், சுல்தானை நெருங்கியவுடன் ‘உணர்ச்சிகரமாக’க் குனிந்து அவர் பாதங்களைத் தொட்டு வணங்கி... ஓரக்கண்ணால் தன் தளபதிகளைப் பார்த்து தலையசைத்தார். மன்னரும் மிகுந்த அன்புடன் குனிந்து அலாவுதீனின் தோளைத் தொட்டுத் தூக்க, முகமது பின் சலீம் என்னும் அலாவுதீனின் மெய்க்காவலன் பின்னாலிருந்து வாளை உயர்த்தி சுல்தான் முதுகில் பாய்ச்சினான்!
எதேச்சையாக மன்னர் நகர, அவர் தோள்பட்டையருகில் தோலைக் கிழித்தது வாள். அலறித் திரும்பிய சுல்தான், “துரோகி அலாவுதீன்!” என்று கதறியவாறு தட்டுத் தடுமாறி படகை நோக்கி ஓடத் துவங்கினார். “உம்... விடாதீர்கள்” என்று அலாவுதீன் ஆணையிட, யக்தியாருதீன் என்னும் ஒரு காவலாளி ஓடிச்சென்று அந்த முதிய மன்னரின் முடியைப் பிடித்துக் கீழே தள்ளினான். “ஐயோ...” என்று பரிதாபமாக மன்னரிடமிருந்து கிளம்பிய கதறல், சில விநாடிகள்தான் கேட்டது. இந்த முறை அடியாளின் வாள்வீச்சில் சுல்தான் ஜலாலுதீன் கில்ஜியின் தலை முழுமையாகத் துண்டிக்கப்பட்டுவிட்டது. பிறகு, ஒரு ஈட்டியில் அந்தத் தலையைப் பொருத்தி அலாவுதீன் அருகில் அடியாட்கள் நிறுத்தினார்கள். அந்த விநாடியில், புது சுல்தானாகப் பதவி உயர்வு பெற்ற அலாவுதீன் கில்ஜியின் வாயிலிருந்து குபீரென்று சிரிப்புச் சத்தம் கிளம்பியது.
ஒட்டுமொத்தமாக அராபிய, பாரசீக மற்றும் முஸ்லிம் வரலாற்று ஆசிரியர்கள் அலாவுதீன் நிகழ்த்திய இந்த நயவஞ்சகச் செயலை ‘கொடூரமானது... மன்னிக்கவே முடியாதது... சரித்திரத்தில் மிகக் கேவலமான கொலைகளில் ஒன்று...’ என்றெல்லாம் குறிப்பிட்டுக் குமுறுகிறார்கள்.
அலாவுதீன் கில்ஜியின் நன்றிகெட்ட வெறிச் செயலை இறைவன் மன்னிக்கவில்லை. முதுகில் வாளைச் செலுத்திய தளபதி முகமது பின் சலீம், அதற்குப் பிறகு ஓராண்டுதான் உயிர் வாழ்ந்தான். கடுமையான தொழுநோயால் பாதிக்கப்பட்டுப் பார்வையிழந்து, உடல் முழுவதும் அழுகி எலும்பும் தோலுமாகத் துடித்து இறந்தான் அவன்.
சுல்தான் தலையைத் துண்டாடிய யக்தியாருதீனுக்கு மனநிலை பாதிக்கப்பட்டது. “ஐயோ... என்னைக் கொல்ல வருகிறார்கள்!” என்று தொடர்ந்து இரவும் பகலும் பைத்தியம் பிடித்து அலறி, பிறகு கவனிப்பாரில்லாமல் செத்துப்போனான் அவன்.
ஆரம்பத்தில் வெற்றிகள் சூழ்ந்து கொண்டாலும், கடவுளின் தண்டனை அலாவுதீன் கில்ஜிக்காகக் காத்திருந்தது. அது செயல்படச் சற்றுக் காலம் பிடித்தது என்பது தான் வித்தியாசம்!
Leave a comment
Upload