தொடர்கள்
Daily Articles
ராக தேவதைகள்... - மாயவரத்தான் சந்திரசேகரன்

- 5 -

ஆனந்தபைரவி

20200820222927254.jpeg

கல்யாண ஹாலுக்கு சற்று சீக்கிரமாகவே நீங்கள் போயிருந்தால் இந்தப் பாடலை ஆனந்தமாக கேட்காமல் உள்ளே நுழைந்திருக்க முடியாது. மாப்பிள்ளையும் பெண்ணும் சந்தோஷத்தின் உச்சத்தில் பூ கட்டிய ஊஞ்சலில் அமர்ந்திருக்க, சுற்றிலும் பட்டுப்புடவைகளும், ஜரிகை வேட்டிகளும் பரபரக்க, கேமராக்காரர்கள் கோணம் புரியாமல் தவிக்க, காமாட்சி விளக்குகள், வெள்ளி பாத்திர வகையறாக்களை இளம்பெண்கள் எடுத்துக்கொண்டு உள்ளிருந்து கூட்டத்தை லாவகமாக விலக்கியபடி வெளியே வர, மொபைல் பையன்கள் ஸ்டூலில் ஏறி தடுமாறி விழ... எங்கிருந்தோ ஒரு வைர மூக்குத்தியின் குரல் அந்த இடத்தின் களேபரத்தை கொஞ்சம் கட்டுப்படுத்தும்...

“கன்னூஞ்சல் ஆடி இருந்தாள்
காஞ்சன மாலை மனமகிழ்ந்தாள்...

பொன்னூஞ்சலில் பூரித்து
பூஷனங்கள் தரித்து
ஈஸ்வரனாரிடத்தில் ஆசைகள் ரொம்ப வைத்து... கன்னூஞ்சல்”

“உத்தமி பெற்ற குமாரி
நித்ய சர்வ அலங்காரி
பக்தர்கள் பாப சமாரி
பத்ம முக ஒய்யாரி... கன்னூஞ்சல்...”

- இப்படிப் போகும் அந்த ஊஞ்சல் பாட்டு, சுத்தமான அக்மார்க் ஆனந்த பைரவி. இந்த கொரோனா வேதனையில், அவரவர்களுக்கு தங்கள் கல்யாண கோலமும் நினைவுக்கு வரட்டுமே என ஒரு சரணமும் சேர்த்து எழுதினேன். இன்னும் இரண்டு சரணங்கள் உள்ளன. ‘அசைந்து சங்கிலி ஆட, உசந்து ஊர்வசி பாட...’ சரணத்தில் ஆ. பைரவி அசைந்து ஆடும் அழகை வர்ணிக்க என்னிடம் எழுத்து இல்லை. பை தி வே, மதுரையில் மீனாட்சியம்மன் சன்னதிக்கு போகிறவர்கள் பக்கத்தில் பத்து மீட்டர் தூரத்தில் இருக்கும் அவர் அம்மா காஞ்சனமாலையின் கோயிலுக்கு ஏன் போவதில்லை?

20200820223103711.jpeg

பல கல்யாண வீடுகளில் பாடிப் பாடியே சில மடிசார்கள் சுதா ரகுநாதன் தரத்திற்கு ‘கன்னூஞ்சலை’ பாடுவார்கள் என்றாள், எத்தனை பாடியிருந்தாலும் மீண்டும் ஈனஸ்வரத்தில் பாடி அருகில் உள்ள நாயனாக்காரர்கள் தலையை உலுக்கிக் கொள்ளும் அளவிற்கு ஹிம்சை பண்ணும் ‘ஞான’ பெண்மணிகளும் உண்டு. அங்கே அந்த ‘ஸ்பிரிட்’ தான் முக்கியம். ஆசை தீர பெண்கள் பாடி முடித்தபின், வழக்கமாக நாதஸ்வரக்காரர்கள் அனாயசமாக ஆனந்த பைரவியை ஒரு கை பார்ப்பார்கள். வாத்தியத்தில் இன்னும் தேனாக இனிக்கும் இந்த ராகம். சென்னையில் நடந்த ஜட்ஜ் முத்துசுவாமி ஐயர் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு திருமணத்திற்கு எம்.எஸ். சுப்புலட்சுமி கன்னூஞ்சல் பாடியுள்ளார். அதற்கு பின் நாதஸ்வரம் வாசித்தவர்கள் செம்பனார்கோயில் நாதஸ்வர மேதைகள் எஸ்.ஆர்.ஜி. சம்பந்தம், எஸ்.ஆர்.ஜி. ராஜண்ணா. அந்த மறக்க முடியாத அனுபவத்தை ராஜண்ணா ஒருமுறை என்னிடம் கூறியுள்ளார். “நாங்க வாசிச்ச ‘கன்னூஞ்சலையும் ரசித்து கேட்டுவிட்டுதான் உள்ளே போனார் எம்.எஸ். என்றார் பரவசத்தால்.

20200820223130669.jpeg

ராகத்தின் பெயரிலேயே ஆனந்தமுள்ளது. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் சக்தி இதற்கு உண்டு என சங்கீத ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த ராகத்தையும், ரீதி கௌளை (சின்ன கண்ணன் அழைக்கிறான்) ராகத்தையும் இழுத்து பொறுமையாக பாடினால் (சங்கீத பாஷையில் சவுக்க காலம்). மாயவரம் காளியாகுடி அல்வா தொண்டையில் இறங்குவது போல அவ்வளவு சுகமாக இருக்கும். அப்படி அனுபவித்து பாட தெரியாவிட்டால் இதை பாடாமல் இருப்பது உத்தமம். காரணம் அது ராக துரோகம்.. ராஜ துரோகம் போல!

ஓகே... கல்யாண கதையிலிருந்து ‘கர்ணன்’ கதைக்கு மாறலாம். ‘போய் வா மகளே போய் வா... கண்ணில் புன்னகை சுமந்து போய்வா’ என்று பாடி துரியோதனின் மனைவி பானுமதியாக வரும் சாவித்திரி, கர்ணன் மனைவி சுபாங்கி - தேவிகாவை வழியனுப்ப, கர்ணான சிவாஜி சற்று தொலைவிலிருந்து பெருமிதத்துடன் கவனிப்பார். அருமையான அரண்மனை காட்சி அது. பிறந்த வீடு போகும் ஒரு பெண்ணை, தாய் ஸ்தானத்தில் இருந்து வழி அனுப்பும் போது கவியரசர் கண்ணதாசனின் அந்த கனிவான வரிகள், ராகத்தில் அம்சமாக உட்காரும். மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் மனங்களில் இந்த ராகம் எவ்வளவு ஊறியிருந்தால் இப்படியொரு மெலடியை தரமுடியும்!


‘நல் வாழ்வு நாம் வாழ வரம் வேண்டும்’ என்று பி. சுசிலா ‘வீட்டுக்கு வீடு’ படத்தில் பாடுவது தரமான ஆ. பைரவி என்றால், டி.எம்.எஸ்ஸுடன் அவர் இணைந்து பாடும் ‘ஆகாயப் பந்தலிலே..’யில் ராகத்தை ஓரளவு தொட்டு விட்டு நகர்ந்து உள்ளார் எம்.எஸ்.வி. அது ஒரு வகை சாமர்த்தியம். டூயட்டில் போய் கச்சேரி பண்ணி விடக்கூடாது என்று நினைத்துள்ளார். எம்.எஸ்.வி. அந்தக் காலத்தில் இசையில் இப்படி செய்துள்ள சுவாரஸ்யங்களை சொல்லி மாளாது. சாம்பிளுக்கு இரண்டு. அது ஆர்.எம். வீரப்பனின் ‘காவல்காரன்’ படத்தில் ‘காது கொடுத்து கேட்பேன்... அது குவா குவா சப்தம்’ என்றொரு டி.எம்.எஸ்ஸின் ஜாலி பாட்டின் இறுதியில் எதிர்பாராத விதமாக இந்த ராகத்தை பரிசுத்தமாக கொண்டு வந்திருப்பார். சற்று கவனித்தால் தான் அது புரியும். எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவை பார்த்துப் பாடும் பாடல். அதாவது கணவன், தாய்மை பருவத்திலிருக்கும் மனைவியை ரசிக்கும் வாலியின் பாடல்! பல்லவியும், முதல் சரணமும் வேறு ஒரு ராகத்தில் - கலப்பிசையாக போகும். இரண்டாவது சரணத்தில் சட்டென்று பாட்டின் போக்கும், இசையும், வாத்திய கருவிகளின் ஒலியும் மாறும். புல்லாங்குழல் ஆ. பைரவியை தாலாட்டும். ‘ஓராம் மாசம் உடல் அது தளரும், ஈராம் மாசம் இடை அது மெலியும்..’ என்று கர்ப்பிணிகளுக்கு மாதா மாதம் உடலில் ஏற்படும் மாற்றங்களை ஆ. பைரவியில் பாடிக் கொண்டே வரும் டி.எம்.எஸ். ‘மசக்கையினாலே...’ என்று மேல் பஞ்சமத்தை தொட்டு ‘அடிக்கடி மயக்கம்” என்று இழுக்கும் இடம் அசாத்தியமானது. டி.எம்.எஸ். பாடும் அந்த சரணம் நாரதகான சபாவில் சஞ்சய் சுப்ரமணியம், சிக்கில் குருசரண் போன்றவர்கள் பாடும் ஆனந்த பைரவிக்கு துளியும் குறைவில்லாதது. என்ன... வார்த்தைகள் சாஸ்த்ரிய மேடைக்கு சற்று கொச்சை!

இதே ஆ. பைரவியை சோகத்தில் இழைத்து நம்மை உருக வைக்கும் சாமர்த்தியமும் மெல்லிசை மன்னருக்கு உண்டு. 1973-ம் வருடம் வெளிவந்த ‘ஸ்கூல் மாஸ்டர்’ படத்தில் வயசான செளகார் ஜானகியும், ஜெமினி கணேசனும் ‘உனக்கு இனி நான் எனக்கு நீ’ என்று வாழ்வின் விளிம்புக்கு வந்து விடும் காட்சி... ‘தன்னந்தனிமையிலே உடல் தள்ளாத வயதிலே’ என்று சுசிலா பாடும்போது ஆ. பைரவி அங்கே முகாரியாகும்! ‘பெற்ற பிள்ளை மறந்தாலும் - நான் பிள்ளை போல் வளர்ந்திருப்பேன்’ என்ற கண்ணதாசனின் வரிகளில் ராகத்தை குழைத்து கலங்க வைத்திருப்பார் எம்.எஸ்.வி.

20200820223206230.jpeg

கே.வி. மகாதேவன் ‘ஆதி பராசக்தி’யில் இந்த ராகத்தை பிழிந்திருப்பார். ‘கிளாசிகலை’ அப்படியே தந்து ஹிட் பண்ண முடியும் என்று பல பாடல்களில் நிருபித்தவர். ‘நான் ஆட்சி செய்து வரும் நான் மாடக் கூடலில் மீனாட்சி என்ற பெயர் எனக்கு...’ என்ற பல்லவியின் முதல் வரியிலேயே ராகத்தின் முழு லட்சணத்தையும் கொண்டு வந்த மேதை அவர். அதே பாட்டின் சரணத்தில் ‘சாமா’ ராகத்திற்கும் போய் வருவார் சுசீலா. அப்படி சில சமயங்களில் ராகமாலிகையாக பாடல்களை அமைத்து ‘ஃப்ரூட் சலாட்’ போல் ருசியாய் தருவதை அந்தக் கால இசை மன்னர்கள் விரும்பினார்கள். அவர்கள் சரக்கு அப்படி.. மனோ தர்மம் அப்படி!

‘ஆசை’ படத்தில் வரும் ‘கொஞ்ச நாள் பொறு தலைவா’ பாடல் தேவாவின் அமர்க்கள மிரட்டல். இந்த ராகத்தை ஜனரஞ்சகப்படுத்தி இப்படியொரு கலாட்டா பாடலை போட முடியுமா..’ என வியக்க வைத்திருப்பார். இத்தனைக்கும் பாடலின் பெரும் பகுதியில் ராகத்தின் ஜீவன் கெடாமலும் பார்த்துக் கொண்டிருப்பார். அது பெரிய சவால்! ‘செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி’ - தேவாவின் மற்றொரு சிறப்பான கற்பனை. பாட்டுக்கு முன் எஸ்.பி. பாலசுப்ரமணியம் ‘சிறுவாணி தண்ணி போல் சிளு சிளுன்னு சிரித்திருக்கும்’ என விருத்தம் போல ஆரம்பிப்பார் அழகான, ஆனந்த பைரவியில்! தேவா மூச்சுவிட நேரமின்றி இயங்கிக் கொண்டிருந்த ‘அண்ணாமலை’ காலத்தில் அவரிடம் பேசியுள்ளேன். “எத்தனையோ வெரைட்டியான ராகங்களில் டூயட் போட ஆசைதான். புது முயற்சி எடுத்தாலே ‘அண்ணே கிளாஸிகலா இருக்கு’ என்று சில டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் மறுத்து விடுகிறார்கள். அப்படியும் முடிந்தவரை கர்நாடிக்கை கொண்டு வர்றேன்’ என்று என்னிடம் பிரசாத் ஸ்டுடியோவில் வருத்தப்பட்டுள்ளார். ‘அப்படின்னா ‘கிளாஸிகல்’ என்பது சினிமாவில் இப்போது கெட்ட வார்த்தையா?’ என்பேன். காபி டம்ளரை கீழே வைத்து விட்டு குபீர் என சிரிப்பார்!

20200820223226105.jpeg

இளையராஜாவின் இசையில் ‘ஸ்ரீராகவேந்திரர்’ படத்தில் பலர் கவனிக்கத் தவறிய சுகமான ஆ. பைரவி ‘பார்த்தாலே தெரியாதா நேக்கு’. பாட்டு ஹிட்டாகாவிட்டாலும் நல்ல கற்பனை. ‘முதலிரவு முடிந்து, குளத்தில் தண்ணீர் எடுக்க குடத்துடன் வரும் லட்சுமியை மனோரமாவும் மற்ற அக்கம்பக்கத்து கிராமத்து தோழிகளும் பிடித்துக் கொண்டு கிண்டலாக பாடும் பாடல்! மனோரமாவின் குரலில் அந்த ராகம் வேறு மாதிரியான ஒரு ருசியை காட்டும்! அவர் ஒரு பிறவி நடிகை மட்டுமல்ல. பிறவி பாடகி கூட. முறையாக இந்தப் பக்கம் வந்திருந்தால் கே.பி.எஸ்., எம்.எல்.வி. போல உயர்ந்த இடத்தை அடைந்திருக்கலாம்! ஆனால் சினிமா ஒரு பொம்பளை சிவாஜியை இழந்திருக்குமே என்று நீங்கள் சொன்னால் அதுவும் உண்மை.

ஆனந்த பைரவியில் ராஜா, ரஹ்மான் உள்பட மற்றவர்களின் அணிவகுப்பு அடுத்த வாரமும் தொடரும். அத்தோடு... பெங்களூர் பசவன்குடியில் நடந்த சத்தியநாராயணா பூஜையில், வந்தவர்களுக்கு இலையில் பாயசம் பரிமாறிக் கொண்டிருந்த அந்த தீர்க்கமான கன்னட அழகி பாடிய தாஸர் நாமா இன்றும் நெஞ்சில் அலைபாயுதே...

- இசை பெருகும்...