விழித்துக் கொள்ளுங்கள் வாக்காளர்களே...
நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகள் பற்றி தொடரப்பட்ட பொதுநல வழக்கில், “எல்லா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை 2 மாதத்தில் முடிக்க வேண்டும்” என்று அறிவுறுத்தி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மேலும் பொதுநல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்குகள் மீதான இடைக்கால தடையை நீக்கி துரிதமாக விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
2556 வழக்குகள் தற்போது நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கும் மக்கள் பிரதிநிதிகள் மீது நிலுவையில் இருக்கிறது. இதில் 174 வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்றவர்களும் மக்கள் மன்ற பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மீது 64 கிரிமினல் வழக்குகளும், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது 38 கிரிமினல் வழக்குகளும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
ஊழல் தடுப்பு, சட்டம் ஒழுங்கு, குற்றத்தடுப்பு போன்ற துறைகளை தங்கள் கையில் வைத்திருக்கும் முதல்வர்கள் மீது இவ்வளவு வழக்குகள் இருக்கும்போது, இவர்கள் ஆட்சியில் ஊழல் தடுப்பு, சட்டம் ஒழுங்கு, குற்றத்தடுப்பு எல்லாமே கேள்விக்குறியாக தான் இருக்கும்.
சட்டத்திலுள்ள ஓட்டைகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் அளவிற்கு இவர்களின் செல்வாக்கு இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை.
இதன் நடுவே, தேர்தல் ஆணையம் தன் பங்குக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்று, குற்றப்பின்னணியில் உள்ள வேட்பாளர்கள் அவர்கள் மீது நிலுவையிலுள்ள வழக்கு விவரங்களை தேர்தல் நேரத்தில் செய்தித்தாள்களில் மூன்று முறை விளம்பரப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.
இப்படிப்பட்ட குற்றப்பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை என்று சொல்லும் துணிச்சல், தேர்தல் ஆணையத்திற்கு ஏன் இல்லாமல் போனது?
நீதிமன்றத்தில் கூட யாரோ ஒரு தனி நபர் தொடர்ந்த பொதுநல வழக்கில் தான், நாம் தேர்ந்தெடுத்த நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் முதல்வர்களின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தங்களின் குற்ற வழக்கு விவரங்களை வேட்பாளர்கள் வெளியிட அவர்களுக்கு எந்த விதமான தயக்கமோ கூச்சமோ இருக்கப் போவதில்லை. இன்னும் பத்து முறை வெளியிட வேண்டும் என்று சொன்னால் கூட வேட்பாளர்கள் வெளியிடுவார்கள். வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை விற்க தயாராக இருக்கிறார்கள், வேட்பாளரிடம் பணபலம் இருக்கிறது. எனவே இதுபோன்ற வழக்குகள், விளம்பரம் போன்றவை எந்த சங்கடத்தையும் வேட்பாளருக்கு ஏற்படுத்தாது.
நாம் செலுத்தும் வாக்கின் உண்மையான பலம் வாக்காளர்களுக்கு தெரியாதவரை, முதல்வர், பிரதமர், ஜனாதிபதி, ஆளுநர் என்று உயர் பதவியில் கூட இந்த குற்றப்பின்னணி அரசியல் தலைவர்கள் அமர்ந்து அழகு பார்ப்பார்கள்.
வாக்காளர்கள் விழித்துக் கொண்டால் தான் இதற்கெல்லாம் ஒரு முடிவு வரும்.
Leave a comment
Upload