தொடர்கள்
Daily Articles
வந்தார்கள்... வென்றார்கள்! - மதன்

- 5-
குத்புதீன் அய்பெக்.. ஆராம் ஷா.. இல்தூத்மிஷ்..

20200818212055906.jpeg

ஆரம்பம் - அடிமைகளின் சாம்ராஜ்யம்!

நிகழ்காலத்தில் கடும் உழைப்பு, எதிர்காலம் பற்றி நம்பிக்கைக் கனவுகள் - இவை மட்டும் இருந்தால்போதும் - கொத்தடிமையும் கொற்றவனாக ஆக முடியும். இதற்குத் துல்லியமான உதாரணம் - குத்புதீன் அய்பெக்!

கடைத்தெரு ஒன்றில் ஏலத்துக்கு வந்த துருக்கிய இனத்தைச் சேர்ந்த ஏழைச் சிறுவன் குத்புதீனை முதலில் வாங்கியவர் ஒரு ஆப்கான் வியாபாரி. பிறகு, பக்ருதீன் அப்துல் அஜீஸ் என்ற வயது முதிர்ந்த ஒரு பேராசிரியரிடம் கைமாறினான் குத்புதீன். முதியவர் இறந்த பிறகு அவருடைய மகன்கள் இன்னொரு வியாபாரியிடம் லாபத்துக்கு இளைஞன் குத்புதீனை விற்றனர்.

ஆப்கானிஸ்தானில், கஜினி நகருக்குச் சென்ற அந்த வியாபாரியிடம் யாரோ ஒருவர் ‘சுல்தான் கோரி முகமதுவுக்கு அடிமைகள் தேவையாம்!’ என்று சொல்ல... கோரியின் அரண்மனைக்குச் சென்றார் அவர். அவ்வளவாக அழகான தோற்றம் இல்லையென்றாலும், விசாலமான உடற்கட்டுடன் - துறுதுறுவென்று புத்திசாலித்தனம் அலைபாயும் கண்களுடன் வந்து நின்ற குத்புதீன் அய்பெக்கைப் பார்த்த விநாடியில், சுல்தானுக்குப் பிடித்துப் போய்விட்டது. வியாபாரிக்கு நல்ல லாபம்!

கோரியிடம் அடிமையாகப் பணிக்குச் சேர்ந்த அய்பெக், மிக விரைவில் மன்னனின் முழு நம்பிக்கையைப் பெற்றுப் படிப்படியாக உயர்ந்து, குதிரைப் படையின் தலைவனாகவும் பிறகு பிரதம தளபதிகளில் ஒருவனாகவும் பதவி உயர்வு பெற்றான்.

டெல்லி மன்னன் பிருத்விராஜுடன் நடந்த யுத்தத்தில் தளபதியாக அய்பெக் காட்டிய வீரமும் பிறகு, ஜெயச்சந்திரனின் கன்னோசி தலைநகரைக் கைப்பற்றுவதில் அவன் காட்டிய தீரமும், சுல்தான் கோரிக்குப் பெருமித உணர்வையும் மற்ற தளபதிகளுக்குப் பொறாமை உணர்வையும் ஏற்படுத்தியது.

பிறகு குஜராத், பீஹார், வங்காளப் பகுதிகளை போனஸாக வென்று கோரியின் காலடியில் வைத்த குத்புதீன் அய்பெக்கைத் தன் பிரதிநிதியாக டெல்லியில் முடிசூட்டிப் பாராட்டிவிட்டு ஆப்கானிஸ்தானுக்குக் கிளம்பினான் கோரி முகமது. அதைத் தொடர்ந்தும் தொய்வாக அமரவில்லை குத்புதீன். முதன்முதலில் ஒரு நிலையான இஸ்லாமியச் சாம்ராஜ்யத்தை இந்தியாவில் நிறுவித் திறமையாகவும் கட்டுப்பாட்டுடனும் ஆட்சிபுரிந்தார் அவர். (ஆகவே, இனி ‘அவர்’ என்றே அழைப்போம்!).



242 அடி - ஒரு அற்புதம்!

20200818212352374.jpeg


குத்புதீன் அய்பெக் கட்டியது குதுப்மினார் முதல் மாடி வரைதான். வானுயர அதை வெற்றிகரமாக முழுதும் கட்டி முடித்தவர் சுல்தான் இல்தூத்மிஷ். குதுப்மினார் முழுவதையுமே இல்தூத்மிஷ்தான் கட்டினார் என்று கூறுபவர்களும் உண்டு!

உலகிலேயே மிக உயர்ந்த இந்த வகை டவர் இதுதான். (உயரம் - 242 அடி. உச்சிக்குச் செல்ல 319 படிகள்!). பாக்தாத் நகரிலிருந்து டெல்லிக்கு வந்து தங்கியிருந்த குவாஜா குத்புதீன் பக்டியர் காகி என்னும் மகான் மீது பெருமதிப்பு வைத்திருந்த இல்தூத்மிஷ், அவர் பெயரைக் குதுப்மினாருக்குச் சூட்டியதாகத்தான் சரித்திரம் தெரிவிக்கிறது. விசுவாசம் கருதி முந்தைய சுல்தான் குத்புதீன் அய்பெக் பெயரையும் இல்தூத்மிஷ் குதுப்மினாரில் செதுக்கியதால், பிற்பாடு எந்த குத்புதீன் என்று சற்றுக் குழப்பம் ஏற்பட்டுவிட்டது!

முஸ்லிம் மக்களைத் தொழுகைக்கு அழைக்கவும் குதுப்மினார் பயன்பட்டது என்று கூறப்படுகிறது. முதலில் மூன்று மாடிகள் மட்டுமே கொண்டிருந்த குதுப்மினாரில் 1368-ல் பிரோஸ்ஷா துக்ளக், உச்சிப் பகுதியை இரண்டாகப் பிரித்து ஒரு பால்கனியை மட்டும் சேர்த்து குதுப்மினாருக்கு மேலும் அழகூட்டினார்!

பிரிட்டிஷ் ஆட்சி ஏற்பட்ட பிறகு சற்று மோசமான நிலையில் இருந்த குதுப்மினாரைச் சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக கர்னல் ராபர்ட் ஸ்மித் என்ற பிரிட்டிஷ் கட்டடக்கலை வல்லுநரை அரசு ௮ழைத்துக் கொண்டு வந்தது. வந்தவர், ரிப்பேரோடு நிறுத்திக் கொள்ளாமல் அதிகப்பிரசங்கம் செய்தார். குதுப்மினாருக்கு முத்தாய்ப்பாக ஒரு ‘ஆங்கிலக் கூரை’ வைத்தால் மேலும் அழகாக அமையும் என்று முடிவு செய்து, மரத்தால் ஒரு சிறு கோபுரம் அமைத்து உச்சியில் அதைப் பொருத்தினார். இயற்கை அதை அனுமதிக்கவில்லை! ஒரு பெரும் இடியின் மூலம் தன் ஆட்சேபணையைத் தெரிவித்தது! விழுந்த இடியினால் கோணலாகிப்போன உச்சாணிக் கோபுரத்தைப் பார்த்தார்கள் கலையுணர்வு கொண்ட பிரிட்டிஷ் அதிகாரிகள் சிலர்... தலையிலடித்துக் கொண்டு அதை (1848-ல்) கீழே இறக்கச் சொன்னார்கள். நண்பர்களின் விளையாட்டுக் குழுவில் சேர்த்துக் கொள்ளப்படாத சிறுவனைப்போல, பரிதாபமாகச் சுணங்கி நிற்கும் அந்தக் கூரையை இன்றும் நாம் குதுப்மினார் அருகில் காணலாம். ‘இது என்ன ஒரு அபத்தம்!’ என்று குதுப்மினாரே அந்த ‘வெள்ளைக்காரக் குல்லாயை’ ஒதுக்கித் தள்ளிவிட்டதாம்!


“சுல்தான் குத்புதீன் அய்பெக் ஒரு சுறுசுறுப்பான, போலித்தனம் இல்லாத மன்னர். மல்யுத்தம் உட்பட எல்லாவிதப் போர்முறைகளிலும் தேர்ச்சிபெற்று விளங்கியவர். தனக்கு விசுவாசமானவர்களுக்கு லட்சம் லட்சமாகப் பணத்தை எடுத்து அள்ளித் தருகிற தாராள மனமும் இந்த மன்னருக்கு உண்டு. அதே சமயம் இரும்புக்கரம் கொண்டு டெல்லியிலும் சுற்றுப்புறங்களிலும் தொல்லை தந்துகொண்டிருந்த வழிப்பறிக் கொள்ளைக்காரர்களைக் கூண்டோடு ஒழித்து மக்களை நிம்மதி மூச்சுவிடச் செய்தவர் அவர்..” என்று சரித்திர ஆசிரியர்கள் குத்புதீனைப் பாராட்டுகிறார்கள்.

அதே சமயம், இஸ்லாமிய மதத்தை இந்தியாவில் பரப்புவதில் முழுமூச்சாக இறங்கிய குத்புதீனால் உடைத்துத் தள்ளப்பட்ட இந்துக் கோயில்கள் ஏராளம். அப்படி உடைத்துப் பெயர்த்தெடுக்கப்பட்ட இந்துக் கோயில் பகுதிகளை விணாகத் தூக்கியெறியவில்லை சுல்தான் குத்புதீன். கோயில்களின் தூண்களையும் படிகளையும் அலாக்காகக் கொண்டு வந்து மசூதிகள் கட்டும்போது கச்சிதமாகப் பயன்படுத்தினார் அவர். குதுப்மினாரில் காணப்படும் இந்துக் கோயில் கலை வடிவங்களையே சாட்சியமாகக் காட்டி, “கோரி முகமதுவை முதல் போரில் முறியடித்ததைக் கொண்டாடும் வகையில் பிருத்விராஜ் கட்டிய வெற்றிக் கோபுரம்தான் குதுப்மினார்” என்று பிற்பாடு மறுப்புக் கதை சொன்னவர்களும் உண்டு. அது - கதைதான்!

குத்புதீனுக்கு முடிசூட்டிவிட்டு ஆப்கானிஸ்தானுக்குக் கிளம்பிய கோரி முகமது, லாகூர் அருகே சிந்து நதிக்கரையில் தங்கி இளைப்பாறியபோது மர்மமான முறையில் கொல்லப்பட்டான். கொலைகாரன் யார் என்று கண்டுபிடிக்கப்படவில்லை!

20200818212422515.jpeg

‘பிருத்விராஜ் செளகான் போரில் கொல்லப்படவில்லை. அவன் சாகாவரம் பெற்றவன்! உண்மையில், பழுக்கக் காய்ச்சிய ஈட்டியால் பிருத்விராஜின் கண்களைத் தோண்டியெடுத்துப் பார்வையிழக்கச் செய்த முகமது கோரி, அவனையும் அவனுடைய நெருங்கிய நண்பனையும் கைதிகளாக்கித் தன்னுடன் அழைத்துச் சென்றான். சிந்து நதிக்கரையில் கூடார வாயிலில் மந்திரி பிரதானிகளுடன் ஜாலியாக அமர்ந்திருந்த கோரி, ‘வில்வித்தையில் சூரன்’ என்று அழைக்கப்பட்ட பிருத்விராஜிடம் “வில் வித்தையில் பெரிய ஆளாமே நீ? இப்போது உன்னால் வில்லை இயக்க முடியுமா?” என்று சவால்விட... தொலைவில் இருந்த பிருத்விராஜ், “முயற்சிக்கிறேன்!” என்று ஒரு வில்லை வாங்கினான். சுமார் நூறடி தொலைவில் ஒரு அடிமை. அவன் தலையில் ஒரு கனி வைக்கப்பட்டது! அருகிலிருந்த நண்பன், கோரி முகமது அமர்ந்திருந்த இடத்தைச் சொல்லிச் சொல்லி உதவ... வில்லைத் திருப்பி பிருத்விராஜ் எய்த அம்பு, காற்றைக் கிழித்துக்கொண்டு மின்னலாகச் சென்று, திகைத்துப்போன கோரியின் மார்பில் பாய்ந்து, அவன் உயிரையும் பறித்துக்கொண்டு முதுகு வழியாக வெளியேறிவிட்டது... என்று ஒரு கதை உண்டு. இன்றைக்கும் ராஜஸ்தானில் இந்தக் கதையை நாட்டுப்புறப் பாடலாக கிராமத்து மக்கள் உணர்ச்சிப்பெருக்குடன் பாடுகிறார்கள்!

இந்திய மண்ணில் பிரவேசித்த அந்நிய நாட்டுப் படையை எதிர்த்து வாள் உயர்த்தி, அவர்களை ஒரு போரில் விரட்டியும் அடித்த ஒரு மாவீரனை ராஜபுத்திரர்களால் இன்றைக்கும் மறக்க முடியவில்லை. அவன் வீரத்தை ஒரு உணர்ச்சிகரமான தத்துவமாக மக்கள் மனதில் பூட்டிவைத்துக் கொண்டதால் துளிர் விட்டு வளர்ந்த கதைதான் மேலே சொல்லப்பட்டது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வேலை என்று இறங்கிவிட்டால், அதை அரைகுறையாக முடிப்பதெல்லாம் முகமது கோரிக்குப் பிடிக்காத விஷயம். எதுவாக இருந்தாலும் வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்பதில் நம்பிக்கை வைத்த அவன் பிருத்விராஜின் தலை - உடல் விஷயத்திலும் அதையேதான் பின்பற்றினான்!

டெல்லியைத் தலைநகராகக் கொண்டு கம்பீரமாகவும் திட்டவட்டமாகவும் குத்புதீன் அய்பெக் துவக்கி வைத்த ஆட்சியை “அடிமைகளின் சாம்ராஜ்யம்” என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். பிறப்பாலோ, சூழ்நிலையாலோ வாழ்க்கையின் அடிமட்டத்தில் சிக்கிக்கொண்டு வாடும் எவருக்கும் அடிமை குத்புதீன் டெல்லி சுல்தானாக மகுடம் சூட்டிக்கொண்ட வரலாறு ஒரு நம்பிக்கை நட்சத்திரம்!

ஆனால், குத்புதீன் ஆட்சி சுமார் நான்கு ஆண்டுகளே நீடித்தது. 1210-ம் ஆண்டு நவம்பர் மாத ஆரம்பத்தில், லாகூர் அருகே ஒரு மைதானத்தில் ‘போலோ’ விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது குதிரையிலிருந்து எசகுபிசகாக விழுந்த சுல்தான் குத்புதீன் அய்பெக்கின் உயிர் அந்த மைதானத்திலேயே பிரிந்தது.

குத்புதினைத் தொடர்ந்து டெல்லி அரியணையில் ஏறிய ஆராம்ஷாவின் ஆட்சியே எசகுபிசகாக அமைந்து தொலைத்ததால் அமைச்சர்கள் கூடிப் பேசி ஆராம்ஷாவைத் தொலைத்துக்கட்ட அவசரமாக முடிவெடுத்தார்கள். அவர்கள் சொல்லியனுப்ப, குத்புதீனுக்கு மாப்பிள்ளையாக வாய்த்த இல்தூத்மிஷ், படை திரட்டிக்கொண்டு வந்து ஆராம்ஷாவைப் போரில் தோற்கடித்தார். மணி மகுடம் தலைமாறியது. போரில் வீழ்ந்த ஆராம்ஷாவின் உடல் இன்றுவரை கிடைக்காததால், அந்த சுல்தானின் கல்லறையை மட்டும் டெல்லியில் நாம் காண முடியாது!

புது சுல்தான் இல்தூத்மிஷும் அடிமையாக வாழ்க்கையை ஆரம்பித்தவர்தான். சுல்தான் குத்புதீன் நல்ல விலை கொடுத்து வாங்கிய கட்டுமஸ்தான அடிமை! பழைய பாடம் திருப்பிப் படிக்கப்பட்டது. தன்னிடம் விசுவாசமாகவும் புத்திசாலித்தனமாகவும் பணியாற்றிய இல்தூத்மிஷை கவர்னராக்கியதோடு நிறுத்திக் கொள்ளாமல், தன் மருமகனாகவும் ஆக்கிக்கொண்டார் குத்புதீன்.

ஆராம்ஷாவின் அரைவேக்காட்டுத் தனமான ஆட்சி ஒராண்டுகூடத் தொடரவில்லை என்றாலும், அதற்குள் பல குறுநில மன்னர்கள் “இதுதான் சமயம்!” என சுதந்திரக்கொடி உயர்த்தினார்கள். இல்தூத்மிஷ் வந்தமர்ந்த கையோடு, வாள்முனையில் எல்லோரையும் வழிக்குக் கொண்டு வர வேண்டியதாயிற்று.

இல்தூத்மிஷ் ஆட்சியின்போதுதான் செங்கிஸ்கானின் மங்கோலியப்படை கொலை வெறியோடு சிந்து நதிக்கரை வரை வந்து நின்றது. அந்தப் படையை எதிர்த்து வாலாட்டப் பார்த்த இந்திய எல்லைப்புற மன்னர்களின் உதவிக்குப் புத்திசாலியான இல்தூத்மிஷ் போகாமல் தவிர்த்தார். அது ஒருவகையில் டெல்லிக்கு நல்லதாகப் போயிற்று. மங்கோலியப்படை சிந்து நதியைக் கடந்து டெல்லி செல்லும் எண்ணத்தைக் கைவிட்டு, பாரசீகம் நோக்கிப் பயணத்தைத் தொடர... நிம்மதிப் பெருமூச்சுவிட்டார் சுல்தான் இல்தூத்மிஷ். சில மாதங்கள் கழித்து, மங்கோலிய ஆபத்து நீங்கியதைக் கொண்டாடும் வகையில் குவாலியர், மால்வா, உஜ்ஜெயினி மீது வரிசையாகப் போர் தொடுத்துக் கபளீகரம் செய்தது டெல்லி பாதுஷாவின் படை.

குறிப்பாக, உஜ்ஜயினி நகர் உருத்தெரியாமல் தரைமட்டமாக்கப்பட்டது. அங்கிருந்த புகழ்வாய்ந்த காளிமாதாவின் கோயில் தூள் தூளாக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள். அதுதான் இல்தூத்மிஷ் மேற்கொண்ட கடைசிப் படையெடுப்பு. அங்கிருந்து கிளம்பி டெல்லிக்குத் திரும்புவதற்குள் கடுமையான காய்ச்சலில் விழுந்தார் இல்தூத்மிஷ். பல்லக்கில் படுக்க வைத்து, அவசர அவசரமாக அலுங்காமல் நலுங்காமல் சுல்தானை டெல்லிக்குக் கொண்டு போனார்கள். அரண்மனை வைத்தியர்கள் சுல்தானைப் பிழைக்க வைக்கப் போராடினார்கள். படுக்கையில் நடந்த இந்தப் போரில் கடைசியில் சுல்தானை நோய் வென்றது. இல்தூத்மிஷ் இறந்த தேதி 29, ஏப்ரல் 1236.

‘இருபத்தாறு ஆண்டுகள் ஆட்சிபுரிந்த இல்தூத்மிஷ், இந்தியாவில் குத்புதீன் அமைத்துத் தந்த அஸ்திவாரத்தின் மீது வெற்றிகரமாக இஸ்லாமியச் சாம்ராஜ்யத்தை எழுப்பியவர்’ என்கிறது சரித்திரம்.
சுல்தானுக்குச் சரியான மகன்கள் வாய்க்கவில்லை. “கேளிக்கையே வாழ்க்கை” என்பதுபோலத் திரிந்து கொண்டிருந்த மகன்களிடம் இல்தூத்மிஷுக்கு ஏற்கெனவே சில ஆண்டுகளாக நம்பிக்கை அடியோடு போயிருந்தது. கூர்ந்த அறிவும் ஆழ்ந்த திறமையும் கொண்ட தன் மகள் ரஸியா மீதுதான் மிகுந்த அன்பும் மதிப்பும் வைத்திருந்தார். “மது, மாது என்று மஞ்சத்திலேயே தஞ்சம் கொண்டிருக்கும் என் மகன்கள் யாருக்கும் நாடாளும் தகுதி இல்லை. நாம் ரத்தம் சிந்தி உருவாக்கி அமைத்த சாம்ராஜ்யத்தைக் கட்டிக் காக்கும் தகுதி என் மகள் ரஸியாவுக்குத்தான் உண்டு!” என்று 1232-ல் குவாலியரில் வெற்றிபெற்றுத் திரும்பியதிலிருந்தே இல்தூத்மிஷ், தன் ஆலோசகர்களிடம் புலம்பிக் கொண்டிருந்தார். படுக்கையில் வீழ்ந்து மரணத்தை நோக்கிச் சரிந்து கொண்டிருந்தபோது தன் ஆலோசகர்களை நெருக்கமாக அழைத்து நடுங்கும் குரலில், “ரஸியாவிடம் ஆட்சிப் பொறுப்பை அளியுங்கள்” என்று மன்னர் மன்றாடியதாகத் தகவல்!

சுல்தான் இப்படி “சீரியஸாகவே” சொல்வது கேட்டு அரசவையிலிருந்த ஆசாரமான முஸ்லிம் பெரியவர்கள் திகைத்துப் போனார்கள். “இது என்ன பைத்தியக்காரத்தனம்!? ஒரு பெண்ணுக்கு - அதுவும் முஸ்லிமாகப் பிறந்தவளுக்கு மகுடமா? இதை அனுமதிக்க முடியாது!” என்று ஒருமனதாக முடிவெடுத்தார்கள். இல்தூத்மிஷ் சுல்தானின் வேண்டுகோளை மீறி, அவர் மகன் ருக்னுதீன் பிரோஸ் என்பவனை அரியணையில் அமர்த்தி, ஒரு அபத்தத்துக்கு வழிவகுத்தார்கள்...

(தொடரும்)