Daily Articles
ராக தேவதைகள்... - மாயவரத்தான் சந்திரசேகரன்

- 4 -

20200813190741865.jpeg

சுத்த தன்யாசி

எடுத்ததற்கெல்லாம் மனதில் எக்கச்சக்க கோபமோ அல்லது ஆத்திரமோ வருகிறதா...? நீங்கள் உடனே கேட்க வேண்டிய ராகம் சுத்த தன்யாசி. இசை அறிஞர்கள் அப்படித்தான் கூறியிருக்கிறார்கள். ‘ராக ஆராய்ச்சி மையம்’ நடத்திய வயலின் ஜாம்பவான் குன்னக்குடி வைத்தியநாதன் பல கூட்டங்களில் சொல்லியுள்ளார். மனதை லேசாக்கி நம் இதய படபடப்பை கட்டுப்படுத்தும் குளிர்ச்சியான ராகம். கேட்கவே ஆனந்தமாக இருக்கும். பொதுவாக இசைக்கே அப்படியொரு மகிமை உண்டு என்றாலும் சில ராகங்களுக்கு கூடுதல் சிறப்பு உண்டு. இசையமைப்பாளர்களுக்கு எது தெரியாவிட்டாலும் கானடா, மோகனம், காப்பி, சுத்த தன்யாசி உள்பட ஒரு டஜன் ராகங்கள் நிச்சயம் தெரிந்திருக்கும். காரணம், இதில் எதைத் தொட்டாலும் பாட்டு ஹிட்டாகிவிடும்!

2020081319583140.jpeg

சுத்த தன்யாசிக்கு உதய ரவிசந்திரிகா என்ற பழைய பெயரும் உண்டு. இரண்டிற்கும் சிறிய வேறுபாடு இருப்பதாக சொல்லுவார்கள் சம்பிரதாய ஆட்கள். சுத்த தன்யாசி கரகரப்பிரியாவிலிருந்து பிறந்தது. மேலே போனால் ஐந்து ஸ்வரங்கள். கீழே வந்தாலும் ஐந்து. இந்த ராகத்தில் தியாகராஜரின் எந்த நேர் சீனா, ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் ஹிம்மகிரி தனயே (ஜி.என்.பி பிரபலப்படுத்தியது) புரந்தரதாஸரின் ‘நாராயண நின்ன நாமத’ அன்னமய்யாவின் ‘பாவமுலோனா’ என பல சூப்பர் ஹிட்கள் கர்நாடிக்கில் உண்டு.

20200813190809453.jpeg

ஜி. ராமநாதன் காலத்திலிருந்து யுவன்சங்கர் ராஜா, இமான் காலம் வரை இந்த ராகத்தில் ஏராளமாக ட்யூன் போட்டுள்ளனர் என்றாலும், தன் காதல் மனைவியை தினம் ஒரு சேலைக் கட்டச் சொல்லி அழகு பார்ப்பது போல தனது கற்பனைகளை அள்ளித் தெளித்துள்ளவர் இசைஞானி இளையராஜா! அவருக்கும் முன்பும் சரி, பின்பும் சரி இத்தனை வெரைட்டியில் சுத்த தன்யாசியை ஆராதனை செய்துள்ளார்களா என்பது சந்தேகமே.

2020081319083800.jpeg

அதற்கு முன் ராஜாவின் சீனியர்களின் கைவண்ணத்தை பார்க்கலாம். ஜி. ராமநாதன் ‘வா வா வளர்மதி’ என்றொரு பாடலை ‘வணங்காமுடி’ படத்தில் தந்திருப்பார். சுதா ரகுநாதனின் குரு எம்.எல். வசந்தகுமாரியின் குரலில் சுத்த தன்யாசியை கேட்கிறபோது சுட சுட பாதாம்பால் சாப்பிடுவது போல் அவ்வளவு ருசியாக இருக்கும். அழகழகான சங்கதிகள். பாடுபவர் பாடினால் சினிமா பாட்டையும் சாஸ்த்ரிய சங்கீதமாக்கிவிட முடியும் என்பதற்கு எம்.எல்.வி. போன்றவர்களே சாட்சி!

‘மெல்ல மெல்ல அருகில் வந்து’, ‘தூக்கணாம் குருவி கூடு’, ‘ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ’ போன்று சில அருமையான கே.வி. மகாதேவன் பாடல்கள் இன்றும் இரவு நேரங்களில் தமிழகத்தின் எங்கோ ஒரு மூலையில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக ‘சாரதா’ படத்தில் வரும் ‘மெல்ல மெல்ல’ பாடலில் ‘அள்ளி அள்ளி அணைக்க தாவுமே..’ என டி.எம்.எஸ் பாடுவது பரம சுகமான சுத்த தன்யாசி. அடுத்து விஸ்வநாதன் ராமமூர்த்தியின் ‘கர்ணனை’யும், ‘பலே பாண்டியாவையும்’ எப்படி மறக்க முடியும்? கர்ணன் படத்தில் எல்லா பாடல்களுமே ஜீராவில் தோய்த்த ஜாமூன் என்றாலும் ‘அந்த கண்கள் எங்கே’ நம்மை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்லும்! தேவிகா தன் தோழிகளுடன் பாடும் காதல் ஏக்கப் பாடலில் அந்த ராகத்தின் அத்தனை அழகுகளும் அணிவகுத்து வரும். சுசீலாவின் பாடலோடு இழைந்து ஓடி வரும் ஹம்மிங், நடு நடுவே வரும் வட இந்திய இசை வாத்தியங்களின் அட்டகாசம், கண்ணதாசனின் காவிய வரிகள் எதை சொல்வது? எதை விடுவது?

பலே பாண்டியாவின் ‘நீயே உனக்கு என்றும் நிகரானவன்’ மற்றொரு அம்சமான சுத்த தன்யாசி என்றாலும் எம்.ஆர்.ராதா சொல்லும் புகழ்பெற்ற கொன்னக்கோல் அந்த பாட்டின் தரத்தையே குலைத்துவிடுகிறது என்பது என் கருத்து. பலர் ராதா அமர்க்களப்படுத்தும் அந்த ‘மாமா.. மாப்பிளே’வை இன்றும் ரசிக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால் சிறப்பான ஒரு சாஹித்தியத்தின் குறுக்கே எதற்கு அந்த கேலிக் கூத்து? படகோட்டியின் ‘தொட்டால் பூ மலரும்’ டூயட்டில் டி.எம்.எஸ், சுசிலாவின் குரலிலேயே இளமை பூத்து குலுங்கும். பின்னணி இசையில் வரும் மணி ஒலி இப்போதும் புதுமையாக இருக்கும்! எம்.எஸ்.வி.யின் ‘அவளுக்கென்று ஒரு மனம்’ படத்தில் ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’ ஜானகிக்கு பெயர் பெற்று தந்த பாடல்!

‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்...’ என்றொரு பாடல் நினைவிருக்கிறதா? பி. சுசீலாவுடன் சூலமங்கலம் ராஜலட்சுமியும் பாடியிருப்பார். குன்னக்குடி வைத்தியநாதனின் மிக இனிமையான பாடல்.

இந்த ராகத்தில் தனிக்காட்டு ராஜ்ஜியம் நடத்தியுள்ள இளையராஜாவின் பாடல்களுக்கு வந்தால் நமக்கு முதலில் மலைப்பே மிஞ்சும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் உயர்வானவை. மாஞ்சோலை கிளிதானோ, சிறு பொன்மணி அசையும், வா பொன்மயிலே, நதியோரம், ஆயிரம் மலர்களே மலருங்கள், பொத்தி வச்ச மல்லிகை மொட்டு, வராது வந்த நாயகன், மாலையில் யாரோ மனதோடு பேச, செம்பூவே பூவே, நிற்பதுவே நடப்பதுவே, புஞ்சை உண்டு.. நஞ்சை உண்டு, விழியில் விழுந்து இதயம் நுழைந்து..” என அடுக்கிக் கொண்டே போகலாம். இன்னும் நிறைய மிச்சமுள்ளன.

இந்தப் பாடல்களில் சுத்த தன்யாசியோடு அந்நிய ஸ்வரங்களையும் கலந்துள்ளார் ராஜா. அப்போது ‘கிளாசிகல்’ வாசனை குறைந்து அவர் விரும்பும் கிராமிய மனமும் சேரும் என்ற சூட்சுமத்தை அறிந்த உன்னத கலைஞன் அவர். பொதுவாக ராஜாவின் 1980, 90கள் பாடல்களைக் கேட்கிறபோது, நமக்கு இனம் புரியாத ஒரு உணர்வை ஏற்படுத்திவிடும்! இளம் வயதில் அண்ணன் தங்கைகளோடு விளையாடிய நாட்கள், கல்லூரி காலத்து முதல் காதல், தீபாவளிக்கு அப்பா வாங்கி வந்த புதுத் துணி, பட்டாசு, பிரிந்து போன தோழி, கல்லூரி சுற்று பயணம்... இப்படி எத்தனையோ நெகிழ்வான சம்பவங்களை திரும்பக் கொண்டு வந்து மனதை பிசைந்து விடும் சக்தி ராஜாவின் ட்யூன்களுக்கு உண்டு.

20200813195537713.jpeg

அப்படி என்னை இப்போதும் பாடாய் படுத்தும் பாடல்களில் ஒன்று ‘ஆயிரம் மலர்களே.. மலருங்கள்..’ மகிழ்ச்சியான சுத்த தன்யாசியில் ஒரு மெல்லிய சோகத்தை இழையவிட்டிருப்பார். ‘என் பாட்டும் உன் பாட்டும் ஒன்றல்லவா’ என்று முதல் சரணத்தில் ஜென்சி, கொஞ்சும் ஒரு இடம் போதுமே! உமா ரமணன், ஜென்சி, சைலஜா, சசிரேகா, ஸ்வர்ணலதா போன்றவர்கள் ராஜாவுக்கு கிடைத்த கொம்புத் தேன் குரல்கள். அவர்கள் ராஜாவின் இசை சோகங்களுக்கு உயிர் தந்தவர்கள்.

20200813195620303.jpeg

‘சிறு பொன்மணி அசையும், அதில் தெறிக்கும் புது இசையும்..’ என்று ஆரம்பித்து அந்த நீண்ட பல்லவியை ஒரே மூச்சில் ஜானகி பாடுவதும், பின் இளையராஜாவின் குரல் தொடர்வதும் தனியாக ஆள் அரவமற்ற பூந்தோட்டத்தில் பறவைகளோடு கேட்டு லயிக்க வேண்டிய அற்புதம். வாத்தியங்கள் பாட்டோடு முத்தமிட்டபடி ஓடி வரும் அழகை எழுதுவது சுலபமல்ல. இசை ஞானியின் சாகாவரம் பெற்ற பாடல்களில் மகுடம் வைத்தாற் போன்ற மற்றொரு பாடல் ‘மாலையில் யாரோ மனதோடு பேச..’. எடுத்த எடுப்பிலேயே புல்லாங்குழல் பாட்டின் உணர்வை உடனே சொல்லிவிடும். அப்புறம் அந்த இயற்கை தாலாட்டும் சோலையில் பானுப்ரியாவும், காட்சிக்கு பின்னே ஸ்வர்ணலதாவும் நம்மை மயக்க நிலைக்கு கொண்டு போய்விடுவார்கள். ‘நெஞ்சமே பாட்டெழுது... அதில் நாயகன் பேர் எழுது’ என்று ஸ்வர்ணலதா ராகத்தின் மேல் ஸ்தாயியை தொடும்போது, இந்தப் பெண்ணுக்கு திருஷ்டி பட்டுவிட்டதோ என்று கூட எண்ண தோன்றும்! பெரிய ரவுண்ட் வந்திருக்க வேண்டியவர். ‘பொத்தி வச்ச மல்லிகை மொட்டு’ பாட்டில் ரிதத்தில் ராஜா சடுகுடு ஆடியிருப்பார்! இசை ஞானியின் இசைக் கதையைப் பற்றி பேசினால் வெளியே வர அவ்வளவு சுலபத்தில் முடியாது.

20200813195349841.jpeg

வித்யாசாகரின் மெலடிகளில் நிறைய கர்நாடக சங்கீதத்தின் தாக்கம் இருக்கும். அவருக்கு இன்னமும் வாய்ப்புக்கள் தந்திருக்கவேண்டும் கோடம்பாக்கம். ‘தவசி’ படத்தில் ‘தந்தன தந்தன தை மாதம்’ பிரமாதமான சுத்த தன்யாசி. ஜேசுதாஸும், சாதனா சர்க்கமும் பரம சுகமாக பாடியிருப்பார்கள். கேப்டன் ரசிகர்களுக்கு விருந்து வைத்த பாட்டு! ஜோதிகா அமர்க்களமாக ஆட்டம் போடும் ‘திருமண மலர்கள் தருவாயா’ பாடலில் ஸ்வர்ணலதா குரல் நம்மை என்னமோ செய்துவிடும். ‘தினம் ஒரு கனியை தருவாயா... வீட்டுக்குள் நான் வைத்த மாதுளை’ என்று ஏகாந்தமாக இழுக்கும்போது அங்கே சந்தோஷம் கொப்பளிக்கும். பொருத்தமான ராகத்தை தேர்ந்தெடுக்கும்போதுதான் அந்த உணர்வை கொண்டு வரமுடியும். ‘ரன்’ படத்தின் ‘மின்சாரம் என் மீது பாய்கின்றதே... பாட்டில், ஹரிஷ் ராகவேந்திரா பல்லவியை மேல் ஸ்தாயியில் துவங்கும் போது சாதனா சர்க்கம் கீழே (Base) பதில் தருவது அருமை. நல்ல கிரியேட்டிவிட்டி!

‘நியூ’ படத்தில் ‘தொட்டால் பூ மலரும்’ பாடலுக்கு புது வர்ணம் பூசியிருப்பார் ஏ.ஆர். ரஹ்மான். ஓ.கே. என்றாலும் எம்.ஜி.ஆரின் பழையது நம் காதுக்குள்ளேயே உட்கார்ந்து விட்டதே! இசைப்புயலின் மற்ற சில இந்த ராகப் பாடல்கள் ஏனோ மனதை தொடவில்லை.

2020081319543748.jpeg

தேவா ‘நினைத்தேன் வந்தாய்’ படத்தில் ‘மல்லிகையே மல்லிகையே’ என்றொரு பாடலில் ஜமாய்த்திருப்பார். தேவயானியும், ரம்பாவும் தோட்டத்தில் பாவாடை தாவணியில் உற்சாகமக ஓடி வர, முன்பு ஆட்டுக்குட்டி துள்ளிக் குதித்து வர, வயலின் கிராமிய மணத்துடன் சுத்த தன்யாசியை கொண்டு வர, அனுராதா ஸ்ரீராமும், சித்ராவும் இளமை ததும்பும் குறும்போடு ஒருவரை ஒருவர் சீண்டும் தொனியில் பாடலை அமைத்திருப்பார் தேவா. அதே படத்தில் ‘உனை நினைத்து நான் எனை மறப்பது அது தான் அன்பே... காதல் காதல்’ பாடலில் ‘மல்லிகையே’ பாடலின் சந்தோஷத்தை சோகமாக்கியிருப்பார். ‘அழகா கள்ளழகா’ தேவாவின் இன்னொரு தேவ கானம்! பாட்டு நெடுக தபேலா ரகளை செய்யும் என்றால் அம்சமாக ஜதிகளையும் வைத்திருப்பார். ‘வேதம் புதிது’ படத்தில் தேவேந்திரனின் ‘மந்திரம் சொன்னேன் வந்துவிடு’, கீரவாணியின் ‘யா யா யாதவா’, சிற்பியின் ‘யார் இந்த தேவதை’, இமானின் ‘கண்ணுக்குள் ஏதோ’ என இந்த ராகத்தில் இன்னும் பல இசையமைப்பாளர்கள் கௌரவமான படைப்புகளை தந்துள்ளனர். ஆனால் 1980, 90 களில் ராஜா நடத்திய அந்த களேபரத்தை பிறகு கேட்க முடியவில்லை. அவரிடமே!