கொரோனா நோய் தொற்றிற்கு அஞ்சாத நாடுகளே கிடையாது. கொரோனா நோய் பரவுவதை தடுக்க மருத்துவர்கள், நர்ஸ்கள், சுகாதார தொழிலாளர்கள் என எல்லோரும் கொரோனா சிறப்பு உடை அணிந்து தான் பணிக்கு செல்கிறார்கள். என்னதான் சிறப்பு கொரோனா தடுப்பு உடைகள், முககவசம், கையுறை என அணிந்து இருந்தாலும் கண்ணிமைக்கும் நேரத்தில் கொரோனா தாக்குதலை நிகழ்த்தி விடும் என்ற உயிர் பயத்தில் மருத்துவ உலகம் அஞ்சி நடுங்கி கொண்டிருக்கிறது.
சென்னை, சாலிகிராமத்தில் ஜவஹர் பொறியியல் கல்லூரியில் எந்தவித சிறப்பு கொரோனா கவச உடையின்றி வெறும் முககவசம் மட்டும் அணிந்து, கொரோனா சிறப்பு வார்டுகளில் சித்த மருத்துவர் டாக்டர் வீரபாபு சுற்றிச் சுழன்று தனது டீமுடன் நோயாளிகளை கனிவுடன் கவனித்து வந்தவரை, இரவு பத்து மணிக்கு விகடகவிக்கு பேட்டி என்றதும் அடுத்த சில நிமிடங்களில் தயாராகி வந்துவிட்டார்.
காலை முதல் நடுஇரவு வரைக்கும் சித்த மருத்துவர் வீரபாபு சுற்றிச் சுழன்று பணியாற்றியும், களைப்பில்லாமல் புன்முறுவலுடன் நோயாளிகளுக்கு கொரோனா பயத்தினை போக்கி நம்பிக்கை அளிக்கும் விதத்தில் பேசி, தேற்றி வருவது ஆச்சரியத்தை அளித்தது.
எப்படி சார், கொரோனா சிறப்பு உடை இல்லாமல் நோயாளிகள் இருக்கும் வார்டில் சென்று வைத்தியம் பார்க்குறீங்க?
சென்னை சாலிகிராமத்தில், கொரோனா தடுப்பு சிகிச்சை மையத்தினை மத்திய அரசின் வழிகாட்டுதல்கள்படி , சென்னை அண்ணா அரசு சித்த மருத்துவமனை மற்றும் தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனை இணைந்து உருவாக்கிய கொரோனா சிகிச்சை வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கிறேன். என்னுடன் 5 நர்ஸ், 25 உதவியாளர்கள் ஆக மொத்தம் 30 நபர்களை பணியமர்த்தி கடந்த 100 நாட்களாக யாரும் கொரோனா பாதுகாப்பு உடை (PPE), கையுறைகள் நாங்கள் யாரும் அணிவதில்லை. வெறும் முக கவசம் மட்டும் அணிந்து இதுவரை ஒரு உயிரிழப்பு கூட இல்லாமல், கிட்டதட்ட 5000 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து, வீட்டிற்கு நல்லப்டியாக அனுப்பி உள்ளோம். நாங்கள் தயாரிக்கும் சிறப்பு முலிகை தேநீரை காலை, மாலை இரு வேளைகளில் அருந்துவதால் எங்களுக்கு முக கவசத்தினை தவிர வேறு பாதுகாப்பு உடை தேவையில்லை. இதுவரை இங்கு பணியாற்றும் யாருக்கும் கொரோனா தொற்று, சாதாரண சளி, காய்ச்சலோ ஏற்பட்டதில்லை. இதுவரை இங்கு பணியாற்றும் நான் உட்பட மற்ற யாரும் கடந்த நான்கு மாதங்களில் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் தொடர் பணியாற்றி வருகிறோம்.
கொரோனாவை விரட்டும் சிறப்பு முலிகை தேநீர் எப்படி தயாரிப்பது?
கொரோனா வைரஸ் எதிர்த்து உடலில் உள்ள நோயெதிர்ப்பு சக்தி சிறப்பாக செயலாற்ற, நான் நோயாளிகளுக்கு தயாரித்து கொடுப்பது தான் சிறப்பு மூலிகை தேநீர். இது என் வைத்தியத்தின் சிறப்பு அம்சம் ஆகும். சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, அதிமதுரம், மஞ்சள், ஓமம், கிராம்பு, கடுக்காய் சம அளவில் எடுத்து பொடியாக்கி 400 மிலி தண்ணீரில் 10 கிராம் பொடியை கலந்து அடுப்பில் 100 மிலி அளவாக வற்றி வரும் வரை தயாரிக்கப்படுவதே சிறப்பு மூலிகை தேநீர் ஆகும். இது இங்கு அனுமதிக்கப்பட்டு இருக்கும் நோயாளிகளுக்கு தினந்தோறும் காலை, மாலை இருவேளைகளில் வழங்கப்படுகிறது. எப்படிப்பட்ட இருமல் , காய்ச்சலுடன் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு வந்தாலும், உடனடி நிவாரணம் கிடைக்கும். இத்துடன் தற்போது இதர சித்த மருந்துகளும் நோயின் தன்மைக்கேற்ப வழங்கி குணப்படுத்துகிறோம்.
சென்னை மாநகராட்சி சித்த வைத்தியத்திற்கு என சிறப்பு வார்டு ஒதுக்கி தந்ததை பற்றி சொல்லுங்கள்?
சாலிகிராமத்தில் ஜவஹார் பொறியியல் கல்லூரியில் முதலில் 200 பேர் சிகிச்சை அளிக்கும் வகையில் படுக்கையுடன் கூடிய வார்டுகள் அமைத்து தந்தார்கள். கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகமானதால் 265 படுக்கைகளாக மாற்றி, பின்பு தற்போது 465 படுக்கை வசதி அமைத்து தந்துள்ளனர். இங்கு தற்போது கொரோனா பாசிடிவ் ரிசல்ட் என்று டெஸ்ட் எடுத்து வருபவர்களுக்கு உள்நோயாளியாக அட்மிட் செய்து, சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனா ஆரம்ப அறிகுறி (asymptomatic) இருப்பவர்கள் 1 வாரமும், நுரையீரல் பாதிப்புக்குள்ளானவர்கள் 10 முதல் 15 நாட்களும், கொரோனா தாக்குதலுடன் இணை நோய் உள்ளவர்களுக்கும் சேர்த்து சிகிச்சை அளித்து குணமாக்கி அனுப்புகிறோம். இங்கு சிகிச்சைக்கு வருபவர்களின் விபரங்களை சென்னை மாநகரட்சியும், சென்னை காவல்துறையும் நுழைவாயிலில் அமர்ந்து குறித்துக் கொண்டு அரசிற்கு தினமும் அறிக்கை சமர்பிக்கின்றனர்.
கொரோனா பாதிப்புக்கு உள்ளான நோயாளிகள் எந்த நிலையில் வந்தாலும் குணப்படுத்த முடியுமா?
கொரோனா நோய் ரிசல்ட் பாசிடிவ் என்று வந்தததும், காலதாமதமின்றி முதலில் எங்களிடம் சிகிச்சைக்கு வந்தால், உயிரிழப்பின்றி கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுபடுத்தி குணப்படுத்தமுடியும். கொரோனா நோய் பாதிப்புக்குள்ளானவர்கள், வென்டிலேட்டர் சப்போர்ட் சென்றுவிட்டவர்களை எங்களால் குணப்படுத்த இயலாது. கொரோனா நோயாளிகள் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு ஆக்சிஜன் மாஸ்க் வரை சென்றவர்களை கூட எங்களின் சித்த மருந்து மூலம் 100 சதவீதம் குணப்படுத்தி இருக்கிறோம். கொரோனா டெஸ்ட் எடுத்து ரிசல்ட் பாசிடிவ் என வந்தவுடன் காலதாமதம் இன்றி வந்தால், இணைநோயான சர்க்கரை, ரத்த கொதிப்பு, சீறு நீரககோளாறு, கல்லீரல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோயால் பாதித்தவர்களை கூட கொரோனா நோயிலிருந்து முழுதாக குணமாக்கி அனுப்புகிறோம்.
ஆங்கில மருத்துவர்களையும் உடன் வைத்து கொண்டு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறீர்கள் என்று தகவல் வருவது உண்மையா?
ஆரம்பத்தில் ஆங்கில மருத்துவர் இன்றி இருந்ததால், மூச்சுத்திணறல் உடன் வரும் நோயாளிகளை சேர்த்து சிகிச்சை அளிக்க முடியவில்லை. தற்போது ஆங்கில மருத்துவரையும் சித்த சிகிச்சை தடுப்பு மையத்தில் பணியமர்த்தி, சித்த கலவை மருந்துகளுடன் நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டால், ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் சிகிச்சை அளித்து பூரணமாக குணமடைய வைக்கிறோம். ஆங்கில மருத்துவருடன் இணைந்து தற்போது சிறப்பாக செயல்படுவதால், காய்ச்சலுக்கு பாரசிட்டாமல் போன்ற மாத்திரைகளை ஆங்கில மருத்துவர் பரிந்துரை படி நோயாளிக்கு வழங்குகிறோம்.
பிரபல பாடகர் எஸ்.பி.பி. சித்த வைத்திய சிகிச்சை எடுத்திருந்தால் கொரோனா நோயிலிருந்து எளிதில் மீண்டு இருப்பார் என்ற பேச்சாக உள்ளது பற்றி?
பின்னனி பாடகர் எஸ்.பி.பி. கொரோனா நோய் பாதிப்பு ஏற்பட்டு பாசிட்டிவ் ரிசல்ட் வந்தததும் வந்து இருந்தால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆக்சிஜன் மாஸ்க் சிகிச்சை அளிக்கும் போது வந்திருந்தால் கூட, சித்த வைத்திய முறைகளில் சிகிச்சை அளித்து குணமாக்கி இருக்கலாம். எஸ்.பி.பி. வென்டிலேட்டர் மூலம் செயற்கை சிகிச்சைக்கு சென்ற பிறகு, சித்த வைத்தியத்தில் குணமாக்குவது சிரமம். ஆங்கில வைத்திய முறைகள் முலம் தான் தற்போது அவரை முழுதாக மீட்டு கொண்டு வரமுடியும் என்பது என் கணிப்பு.
கொரோனா வைரஸ் தாக்குதலை முறியடிக்கும் சித்த வைத்திய முறை, இதுவரை ஏன் உலகம் முழவதும் செல்லவில்லை?
கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக நாங்கள் கொடுக்கும் சித்த மருந்துகளை பிரித்து 10 பேர்கள் அடங்கிய நோயாளிகள் பல்வேறு குழவினருக்கு கொடுத்து, அதில் வரும் ரிசல்ட்டை அனுப்பவேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வரைமுறைகளை வகுத்துள்ளது. உயிர்கொல்லி நோயிலிருந்து மக்களை மீட்டெடுக்க செயல்படும் இக்கட்டான நேரத்தில், நோயாளிகளை குழவாக பிரித்து மருந்துகளை மாற்றிக் கொடுத்து பரிசோதிக்கும் மனநிலையில் நான் இல்லை. இதுவரை எந்தவித உயிரிழப்பும் இன்றி 5000 பேர்களை கொரோனா என்ற கொடும் வைரஸ் நோயிலிருந்து சித்த மருந்துகள் மற்றும் ஆங்கில வைத்தியர் துணையுடன் காப்பாற்றி சிகிச்சை செய்து அனுப்பி இருக்கிறேன். சித்த மருத்துவம் உலகம் முழவதும் சென்றடையாததற்கு உலக சுகாதார நிறுவனத்தின் சோதனை மற்றும் பல்வேறு வரைமுறைகளும் தான் காரணம் .
நீங்கள் குணப்படுத்துவது போல் மற்ற சித்த மருத்துவர்களும் கொரோனா வைரஸ் நோயை குணப்படுத்த முடியுமா?
சிறப்பு சித்த மருந்துகளுடன் ஆங்கில மருத்துவர்கள் உதவியுடன் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதால் உயிரிழப்பு இன்றி குணமாக்கி அனுப்பி வருகிறேன். என் முறையை பின்பற்றி சித்த மருத்துவர்கள் ஆங்கில மருத்துவர்களின் துணையுடன் சிகிச்சை அளித்தால், கொரோனாவை வெல்ல முடியும் என்பது என் கணிப்பு.
கொரோனா நோய் பாதித்தவர்களுக்கு 2வது தடவையாக கொரோனா நோய் மீண்டும் தாக்குதல் நடத்த சாத்தியமிருக்கா?
சென்னையில் சில மருத்துவர்களுக்கு கொரோனா தாக்குதல் ஏற்பட்டு, ஆங்கில மருத்துவத்தில் சிகிச்சை பெற்று குணமானவர்கள் மீண்டும் 2 வது மற்றும் 3 வது தடவையாக மீண்டும் கொரோனா நோய் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி இருக்கிறது. ஏற்கனவே கொரோனா தாக்குதல் உள்ளானவர்கள், சிகிச்சை முடித்து வீடு சென்று தற்போது இரண்டாவது மற்றும் மூன்றாவது தடவை கொரோனா பாசிடிவ் என்று ரிசல்ட் வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணி செய்யும் அலோபதி டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் சிலருக்கு மூன்று தடவைக்கு மேல் கொரோனா நோய் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. அவர்கள் என்னிடம் வந்த போது சித்த மருத்துவ சிகிச்சை அளித்து, குணமாக்கி அனுப்பியுள்ளேன். சிகிச்சை பெற்றுச் சென்ற டாக்டர்கள் மற்றும் நர்ஸ்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது சித்த மருந்துகளின் நோய் தடுப்பு ஆற்றல் சிறப்பாக செயல்படுவதை காட்டுகிறது.
கொரோனா நோய் வந்தவர்களுக்கு உடலில் ரத்த கட்டு ஏற்பட்டு உயிரிழப்புக்கள் ஏற்படுகிறது என்பது உண்மையா?
கொரோனா ரத்த டெஸ்ட் எடுக்கும் போது நோயாளிகளின் உடலில் ரத்தம் உறையாமல் இருக்க பரிசோதனைகள் எடுக்கப்படும் d-dimer, IL6, serritin போன்ற பரிசோதனைகளின் முடிவுகள் பரிசிலீத்து, ஆரம்ப சிகிச்சையிலேயே இதனை சித்த மருந்துக்கள் மூலம் சரிப்படுத்தி விடுவதால், கொரோனா நோய் வந்தவர்களுக்கு உடலில் ரத்த கட்டு ஏற்பட்டு, இதய அடைப்பு, மூளைக்கு ரத்தம் செல்லுவதில் தடைபாடு போன்ற எதுவும் நிகழாமல் தடுக்கப்படுகிறது.
கொரோனா எப்படி பரவுகிறது?
சளி, இருமல் உள்ளவர்கள் தும்மும் போதும், இருமும் போதும் கொரோனா வைரஸ் காற்றில் சிறிது தூரம் நீர்திவலைகளாக பரவும் போது, அருகிலிருக்கும் மனிதர் முககவசம் இல்லாமல் இருந்தால், நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு. எனவே அடுத்த மூன்று மாதத்திற்கு வெளியில் செல்லும் போது அல்லது கூட்டம் அதிகமாக இருக்கும், பொது இடங்களில் ஒன்று அல்லது இரண்டு மாஸ்க்குகளை ஒன்றாக அணிந்து கொண்டு கொரோனா வருவதில் இருந்து பாதுகாத்து கொள்ளுங்கள்.
கப சூரக்குடிநீரை தினமும் குடிக்காலாமா?
கப சூரக்குடிநீர் கொரோனா வந்த நோயாளிகளுக்கு காலை மாலை இரு வேளைகளில் பெரியவர்களுக்கு 50 ml, சிறியவர்களுக்கு 25 ml மருத்துவர் அறிவுரைப்படி குடிக்கலாம். மற்றவர்கள் அடுத்து வரும் ஜனவரி மாதம் வரை மழை மற்றும் குளிர் காலம் என்பதால் வாரத்திற்கு 2 நாட்கள் சாப்பிடலாம். வயிற்றில் புண் இருப்பவர்கள் உணவுக்கு பின் சாப்பிடுவது நல்லது. கப சூரக்குடிநீர் ஒத்துகொள்ளா விட்டால் குடிக்காமல் இருக்கலாம். கொரோனா வைரஸ் நோய் முடியும் வரை உணவில் புளியை குறைத்து சாப்பிட்டால் நல்லது. சித்த மருந்துக்கள் சாப்பிடும் போது புளி அதிகம் சாப்பிட்டால் மருந்தின் வீரியம் குறைந்து விடும்.
சார், உங்களை ரஜினிகாந்த் பாராட்டினாராமே?
சாலிகிராமத்தில் நான் 1000 பேருக்கு தினமும் ரூ10 க்கு சாப்பாடு போடுகிறேன். இதனை அறிந்து லதா ரஜினிகாந்த் மேடம் என்னை பாராட்டினார். அத்துடன் ரஜினி சாருக்கும் நான் சாப்பாடு போடும் விஷயத்தை லதா மேடம் சொல்லியிருக்காங்க… இந்த கொரோனா நேரத்தில் சாலிகிராமத்தில் சித்த வைத்தியத்தில் தனியாக சிறப்பு சிகிச்சை வார்டு நடத்துவதையும், இதுவரை உயிரிழப்பின்றி கொரோனா நோயாளிகளை சிகிச்சை அளித்து அனுப்பிய விவரத்தினை செய்திதாள்களிலும் படித்த லதா மேடம் ரஜினி சாருக்கு சொன்னதும்... அவர் என்னை தொலைப்பேசியில் நேரடியாக அழைத்து எனக்கு வாழ்த்து சொல்லி பாராட்டினார். கொரோனா காலம் முடிந்ததும் என்னை நேரில் அழைத்து சந்திப்பதாக சொன்னார். நான் ஒரு ரஜினி ரசிகர் என்பதால் எனக்கு ரஜினி சாரின் பாராட்டு பெருமையாகவும், உற்சாகமாகவும் இருந்தது. தொடந்து கொரோனாவுக்கு எதிராக போராட வேண்டும் என்ற வேகமும் அதிகமானது.
தமிழகத்தில் குழந்தைகள் பள்ளிகள் எப்போது செல்லலாம்?
கொரோனா தீவிரம் இன்னும் 2 மாதங்களுக்கு பிறகு ஒரளவு குறைய வாய்ப்பு உண்டு. அதன்பின், பள்ளிகள் திறந்து குழந்தைகள் பள்ளி செல்வதுதான் சிறப்பானதாக இருக்கும்.
5000 பேருக்கு சிகிச்சை அளித்து இருக்கீங்க , சித்த மருந்துகள் எல்லாம் எப்படி வாங்குறீங்க?
சார், நல்ல கேள்வி கேட்டீங்க. சித்த மருந்துகள் மூலம் சிகிச்சையளிக்கும் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவ செலவிற்கு தமிழக அரசு இதுவரை ஒரு பைசா கூட வழங்கவில்லை. சென்னை மாநகராட்சி மட்டும் சிகிச்சைபெறும் நோயாளிக்கு தினமும் சாப்பிட நபர் ஒருவருக்கு ரூ. 350 வழங்குகிறார்கள். அதனை வைத்து நோயாளிகளுக்கு உணவு வழங்கி வருகிறோம். மருந்துக்களை நான் வாங்கி நோயாளிக்கு கொடுத்து வந்தேன். 4000 நோயாளிகள் வரை இலவச சிகிச்சை என் செலவில் கொடுத்து வந்தேன். தற்போது ஆங்கில மருத்துவர், செவிலியர்கள் மற்றும் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் தர வேண்டி இருப்பதால், மூச்சுத்திணறல் மற்றும் அதிக சிரமத்துடன் வரும் கொரோனா நோயாளிகளிடம் மிகக்குறைந்த கட்டணம் பெறப்பட்டு, அதில் ஆக்சிஜன் சிலிண்டர் வாங்குவது மற்றும் ஊழியர்களின் சம்பளம் மற்றும் இதர செலவுகளை சமாளிக்கிறோம்.தமிழக அரசு மருத்துவ செலவுகளையும், ஊழியர்களுக்கான ஊதியத்தையும் தந்தால் இன்னும் இலவசமாக நிறைய நோயாளிகளை குணப்படுத்த முடியும்.
கொரோனா குறித்து தமிழக மக்களுக்கு தாங்கள் சொல்ல வரும் அறிவுரை என்ன?
மாஸ்க் இல்லாமல் வெளியே வராதீங்க… உடல் பருமன் நோய் (obesity) உள்ளவர்கள் வெளியில் நடமாடுவதை அடுத்த மூன்று மாதங்களுக்கு குறைத்துக் கொள்ள வேண்டும். இதில் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று அதிகமில்லை என்பது மகிழ்ச்சியான செய்தி. பெண்களும் கொரோனா தொற்றால் மிக தீவிர சிகிச்சைக்கு செல்வதில்லை என்பது நான் கண்கூடாக பார்த்தது. கடைசியாக மாஸ்க் அணிவதால் கொரோனா வைரஸ் வேகமாக நம்மிடம் பரவுவதை தடுக்க முடியும். தமிழக அரசு எனக்கு போதிய அளவு பணியாளர்களையும், சித்த மருந்துகளையும் எனக்கு துணையாக ஆங்கில மருத்துவர்களையும் வழங்கினால், தமிழகம் முழுவதும் கொரோனா சிகிச்சை அளிக்க நான் தயாராக இருக்கிறேன்.
Leave a comment
Upload