ஒருவழியாக 100 பிளஸ் நாட்களுக்குப் பிறகு ஜாமீன் கிடைத்து திஹாரிலிருந்து வெளி வந்தார் ப.சிதம்பரம்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ குற்ற பத்திரிக்கையை தாக்கல் செய்து விட்டதால், நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி சிந்து ஸ்ரீ குல்லார், முன்னாள் நிதி அமைச்சரின் ஆலோசகர் பிரதீப் குமார் பாகா, முன்னாள் எப்ஐபிபீ டைரக்டர் பிரபோத் சக்சேனா, அஜீத் குமார் டங் டங், ரபீந்திர பிரசாத், முன்னாள் வெளிநாட்டு வர்த்தக செயலாளர் அனுப் கே பூசாரி ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரனை நடந்து, தலா ரூ 2 லட்சம் ரொக்க ஜாமீன் பத்திரங்களை செலுத்தி பெயிலில் செல்ல சிறப்பு நீதிபதி உத்திரவு பிறப்பித்தார். வருகிற டிசம்பர் 17 தேதிக்கு வழக்கின் விசாரணைக்கு அனைவரும் ஆஜராக வேண்டும் என உத்திரவு பிறப்பித்தார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஏற்கனவே சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து விட்டதால் உச்சநீதிமன்றம் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கி உத்திரவிட்டது. அமலாக்க துறை வழக்கில் ப.சி . நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்யப்பட்டு, அதன்பின் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனுவினை இரண்டாவது வழக்கிற்காக ப.சி. தாக்கல் செய்து இருந்தார். . ஊடகங்களுக்கு நேர்காணல்கள் வழங்கவோ அல்லது வழக்கைப் பற்றி பகிரங்க அறிக்கைகளை வெளியிடவோ ப.சி.க்கு அனுமதி இல்லை. விசாரணைக்கு தவறாமல் ஆஜராக வேண்டும். நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடு செல்லக்கூடாது. இரண்டு ஜாமீன்தாரர்களுடன் ரூ2 லட்சம் ஜாமீன் பத்திரம் வழங்கினால் பிணையில் செல்லலாம் என புதன்கிழமை உச்சநீதிமன்றத்தில் பானுமதி அடங்கிய டிவிஷன் பெஞ்ச் உத்திரவிட்டது.
புதன்கிழமை மாலை சிறப்பு நீதிமன்றத்தில் ப.சி. ஜாமீன்தாரர்கள் ஆஜராகி, நீதிமன்ற உத்திரவினை திஹார் ஜெயிலில் சமர்பித்தனர். புதன்கிழமை மாலை ப.சி. ஜாமினில் திஹார் ஜெயிலிலிருந்து வெளியே வந்தார். காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் 'இறுதியாக வாய்மை வென்றுவிட்டது! சத்தியமேவே ஜெயதே' என்று மெசேஜ் செய்யப்பட்டது.
திஹார் ஜெயிலில் இருந்து வந்த ப.சி., மிகவும் சோர்வாக காணப்பட்டார். தனது கையில் சிகப்பு நிற திருக்குறள் புத்தகத்தை கொண்டு வந்தார். தனது கடைசி இரவு உணவினை திஹார் ஜெயிலில் முடித்து விட்டே வெளியே வந்தார் என்று தகவல். அவரது குடும்பத்தினருடன் டெல்லியில் இருக்கும் வீட்டிற்கு சென்றார் ப.சி.
ப.சி-யை திஹார் ஜெயிலிருந்து 3-வது நுழைவு வாயில் வழியே வெளியே வரும் போது நிருபர்கள் சூழ்ந்து கொண்டனர். உச்சநீதிமன்ற உத்திரவுப்படி, தான் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க கூடாது... '106 நாட்களுக்கு பின் ஜாமீனில் வெளிவந்து, சுதந்திர காற்றை சுவாசிக்கிறேன். சுப்ரீம் கோர்ட்டு உத்திரவுக்கு கீழ்படிய வேண்டும். 106 நாட்கள் நான் சிறையில் இருந்தாலும் என் மீது ஒரு குற்றச்சாட்டு கூட பதிவு செய்யவில்லை' என ப.சி. சொன்னார். அதன்பின் கார்த்திக் சிதம்பரம் தனது தந்தை தங்களது வீட்டிற்கு சென்று பின் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திப்பார் எனச் சொன்னார். ஆனால் யாரையும் சந்திக்காமல் அன்று டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் ப.சி. தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி விட்டு, இரவு உறங்கச் சென்றார்.
தனது கணவர் மறுநாளே மாநிலங்களவையில் நடக்கும் விவாதத்தில் கலந்து கொள்வார் என ப.சி மனைவி நளினி சிதம்பரம் நிருபர்களிடம் தெரிவித்தார்.
வியாழக்கிழமை காலை நாடாளுமன்றத்திற்கு வந்த ப.சி., நாடு முழவதும் வெங்காயத்தின் விலை ரூ.100 தாண்டிவிட்டதை கண்டித்து, எம்.பி க்கள் நடத்திய தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது நிருபர்களிடமும் பேசினார். "நான் உச்சநீதிமன்றத்தில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கை பற்றி பேசக் கூடாது என உத்திரவு உள்ளது... இருந்தாலும், இந்திய பொருளாதார நிலை பற்றி தான் பேசுகிறேன். இந்திய நிதிதுறை மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று பாராளுமன்ற கேள்வி நேரத்தில் வெங்காய விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு தான் வெங்காயம் , பூண்டு சாப்பிடும் குடும்பத்தில் இருந்து வரவில்லை என்ற பதிலை அவையில் பேசியுள்ளார். நிதியமைச்சரின் பேச்சு இந்த அரசின் மனநிலையை காட்டுகிறது. மத்திய நிதி அமைச்சர் வெங்காயம் சாப்பிடுவது இல்லை. அதனால் அவர் ஏன் வெங்காயம் விலை உயர்வு பற்றி கவலைபடபோகிறார். நிதியமைச்சர் அவகோடா என்ற பழத்தினை கிலோ ரூ.340-க்கு வாங்கி சாப்பிடுகிறாரோ..?!
மத்திய அரசு வர்த்தக நிறுவனமான எம்எம்டிசி-யின் மூலம் துருக்கியில் இருந்து 4000 டன் வெங்காய இறக்குமதிக்கு ஆர்டர் செய்துள்ளது. துருக்கியில் இருந்து வெங்காயம் ஜனவரி மத்தியில் இந்தியாவிற்கு வந்து சேரும் .எகிப்தில் இருந்து 6090 டன் மற்றும் துருக்கியில் இருந்து 11000 டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வெங்காயம் தட்டுபாட்டிற்கு முன்பே அரசு, துரித நடவடிக்கை எடுத்து வெங்காயத்தினை இறக்குமதி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்க வேண்டாமா? நிதி அமைச்சராக எனது செயல்களில் எந்த குற்றமும் இல்லை, வழி தெரியாததால் அரசு தவறான நடவடிக்கை எடுத்துள்ளது. வேலை வாய்ப்பின்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கிராமப்புற மக்களின் வாங்கும் திறன் குறைந்துள்ளது. பொருளாதார மந்த நிலைமையில் இருந்து இந்த அரசால் மீள முடியாது. பாஜக தலைமையிலான ஆட்சி தொடர்ந்தால், கடவுள் தான் நாட்டை காப்பாற்ற வேண்டும். இப்போது இருக்கும் மத்திய அரசு, பாராளுமன்றத்தில் எனது குரலை அடக்க முடியாது" என ப.சி நாடாளுமன்றத்திற்கு வெளியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். சிறையிலிருந்து வெளிவந்த பின் ப.சி. மத்திய அரசின் மீது, தன் பேட்டி மூலம் நேரடி தாக்குதல் நடத்தினார் என்றே டெல்லி மூத்த பத்திரிக்கையாளர்கள் பேசிக்கொண்டனர்.
இதற்கிடையே ப.சி. பேட்டிக்கு, மத்திய அரசில் இருந்து பலமான எதிர்ப்புக்குரல் ஒலிக்கத் தொடங்கி உள்ளது. 'ப.சிதம்பரம் முதல் நாளிலேயே ஜாமீன் பெற விதிக்கப்பட்ட நிபந்தனை பொது வெளியில் பேட்டி தரக்கூடாது என்பது. அதனை மீறி மீடியாக்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார். ப.சி. உச்சநீதிமன்றத்தின் உத்திரவினை மீறியுள்ளார்' என டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியில் ஜாமீனில் வெளியே இருப்போர் குழுவில் ப.சிதம்பரமும் கடைசியில் சேர்ந்து விட்டார். ஏற்கனவே சோனியா, ராகுல், ராபர்ட் வதேரா, மோதிலால் வோரா, பூபிந்தர் ஹுடா, சசிதருர் ஆகியோர் ஜாமீனில்தான் வெளியே இருக்கிறார்கள் என்று பிஜேபி செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கிண்டல் செய்து டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
டெல்லி அரசியல் எபோதும் புதிரானது!! மத்திய அரசுடன் நேரடி தாக்குதலில் ஈடுபட்டுள்ள ப.சிதம்பரத்திற்கு அடுத்து என்ன திருகுவலி ஆரம்பிக்கப் போகிறது என்பதை இனி பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
Leave a comment
Upload