வலையங்கம்
வலையங்கம் - வெங்காயத்துக்கு வந்த சோதனை!

2019110617100318.jpg

காய்கறிகளில் ‘சமையலறை ராணி’ என்ற புகழுக்குரியது வெங்காயம். வெங்காய சாம்பாரின் சுவைக்கு ஈடு ஏது? வெங்காயம் எதனுடன் சேர்க்கப்பட்டாலும் அதன் சுவையும், மணமும் அதிகமாகும். பார்ப்பதற்கு கூட கவரும்!

இப்போது வெங்காயத்தின் விலை எட்டாத உயரத்தில்! வெங்காயம் இல்லாமல் சமையல் செய்ய தவிக்கிறார்கள் பெண்மணிகள்! ஓட்டல்களில் பிரியாணிக்கு ‘சைட் டிஷ்’ ஆக வெங்காயப் பச்சடிக்கு பதிலாக ‘சப்’ என்ற வெள்ளரிக்காய் பச்சடி! வெங்காய பஜ்ஜி ஒரு மாதமாக ஓட்டல்களில் காணோம்!

வெங்காயம் இப்படி பயங்கரமாக விலை ஏறியது பற்றி மத்திய அரசோ, மாநில அரசோ அதிகம் கவலைப்படுவதாக தெரியவில்லை. சாவகாசமாக வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய முடிவு செய்திருக்கிறது மத்திய அரசு! நம் மண்ணின் ருசி அதில் இருக்குமா? சந்தேகம் தான்!

இறக்குமதி செய்யும் வெங்காயத்தை ஒதுக்க, மத்திய அரசு எல்லா மாநிலங்களிடமும் தேவைக்கான ஆர்டர் கேட்டு பெற்றிருக்கிறது! ஆந்திரா, கேரளா எல்லாம் ஆர்டர் கொடுத்து விட்டன! முதலமைச்சர் எடப்பாடியாருக்கு வெங்காயம் பிடிக்காதா? தமிழக அரசு வெங்காய தேவைக்கு இன்னமும் ‘ஆர்டர்’ கொடுக்கவில்லை!

எட்டு வருடங்களாக வெங்காய விலை ஏற்றம் இருந்து வருகிறது. ஆனால், அரசு வேடிக்கைதான் பார்த்தது. சாமானிய மனிதர்களின் சிரமங்களை எல்லாம் மிகச் சாதாரண விஷயமாக கருதும் போக்கு மத்திய, மாநில அரசிடம் இருப்பதற்கு நேரடி சாட்சி வெங்காய விலை உயர்வில் காட்டப்படும் அலட்சியம்.

வெங்காய விலை உயர்வுக்கு விளைச்சல் குறைவு மட்டும் காரணம் அல்ல. நிச்சயம் பதுக்கல் நடக்கிறது. வெங்காயத்தில் பல ‘தரங்கள்’ உண்டு. மகாராஷ்டிர நாசிக் வெங்காயம் பசுமையுடன் அதிக நாட்கள் அழுகாமல் இருக்கும், அதிகம் உற்பத்தியாகும், இதுவே பதுக்கப்படுகிறது. இரண்டாவது ரகம் பெங்களூரில் இருந்து வருவது. மூன்றாவது ரகம் ஆந்திராவில் இருந்து வருகிறது. இது நீண்ட நாள் தாங்காது. இதைத்தான் இப்போது மக்கள் அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை! காய்கறி கடைகளில் உள்ள இந்த வெங்காயத்தை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது!

200 ரூபாய்க்கு ஏறிவிட்ட வெங்காயம், சில வாரங்களில் இறங்கி 50 ரூபாய்க்கு வந்து நிற்கலாம். விலையை 'ஓரளவு' உயர்த்த நினைக்கும் இடைத்தரகர்கள் திட்டம் நிறைவேறும்!

வெங்காயத்தை உரிக்காமலேயே - சாதாரண மக்கள் கண்களில் வடியும் கண்ணீர். மத்திய, மாநில அரசுகளை பாதிக்காமல் விடாது!



வெளியே வந்தார்!

முன்பு, முன் ஜாமீன் வாங்குவதில் சாதனை படைத்த ப. சிதம்பரம், கடைசியில் சிறைச்சாலையைவிட்டு ஜாமீனில் வெளியே வருவதற்கும் நீதிமன்றங்களை முட்டி மோத வேண்டியதாயிற்று! 106 நாட்கள் சிறைவாசத்தில் இருந்து விட்டு, சுப்ரீம் கோர்ட் விதித்த ஏகப்பட்ட நிபந்தனைகளுடன் வெளியே வந்திருக்கிறார்!

வேட்டி கட்டிய நம்மவர் ஒருவர் எதிர்காலத்திலாவது பிரதமர் ஆகலாம் என்கிற கனவு தமிழர்களுக்கு இருந்தது. அது ப. சிதம்பரமாக இருக்கலாம் என்கிற பேச்சும் இருந்தது! கடைசியில் இப்படி ஆகிவிட்டது1

சிதம்பரத்தின் வேகமான ஆரம்ப அரசியலை பார்த்தவர்களுக்கு, அவரை ஊழல்வாதியாக இப்போது பார்ப்பது ஒருவிதத்தில் அதிர்ச்சிதான்!

இது ஒருபுறம். ஆனால் இவரைப் போல விசாரணை கைதியாக நீண்ட காலம் சிறையில் பூட்டப்பட்டும், பிறகு குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று எச் ராஜா, கனிமொழி 2 ஜி வழக்கில் விடுவிக்கப்பட்டு தீர்ப்பு வந்தது மறக்க முடியுமா?

சட்டங்கள் விசித்திரமானவை! அதற்குப் பல காரணங்கள் இருப்பதும் உண்மை!!